இலங்கை சிறையில் உள்ள 38 மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இலங்கையில் சிறைபிடித்துள்ள 78 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனித் தீர்மானம் கொண்டு வந்தார். மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். தமிழரின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை காக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ராமேஸ்வரம், ஜெகதாப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 38 பேரையும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவிட்டார்.
இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் இவர்கள் கடந்த செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களது படகுகளும் கைப்பற்றப்டிருந்தன. கடந்த செப்டெம்பர் 27ஆம் திகதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோன்று 30 ஆம் திகதி ஜெகதாபட்டினம், நாகையை சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டனர். ஒக்டோபர் 7ஆம் திகதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதேவேளையில் நவம்பர் 23 ஆம் திகதி ராமேஸ்வரம், ஜெகதாபட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர். பல தடவைகள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு யாழ். சிறையில் இருந்த 38 பேரும் இன்று வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுதத்தப்பட்டனர்.
இதன்போது 38 பேரையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். தங்களை விடுவிக்க வலியுறுத்தி யாழ்ப்பாணம் சிறையில் இவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.