ஆட்சி மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும்.
ஜனநாயகத்தையும் மக்களின் சுதந்திரத்தையும் பறிக்கும் வகையில் மஹிந்த ராஜபக் ஷ அறிமுகப்படுத்திய அரசியல் கலாசாரத்தை இல்லாது ஒழித்து புதுயுகமொன்றை இலங்கையில் உருவாக்க வேண்டுமென்ற தாகத்துடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் எதிரான சக்திகள் ஒன்று திரண்டு எதிரணியாக உருவாகி நிற்கும் தேர்தலாக நடைபெறப் போகின்ற தேர்தல் களை கட்டி காணப்படுகிறது. கூட்டமைப்பைப் பொறுத்தவரை என்ன முடிவை எடுக்கப்போகின்றது என்பதில் தான் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் எதிர்கால போக்கும் நிர்ணயிக்கப்படவுள்ளது என்பது வெள்ளிடை மலையாகும். இலங்கையில் சட்ட ஆட்சி வீழ்ந்தமைக்கு தற்போதைய ஜனாதிபதி ஆட்சி முறையானது இராணுவம், பொலிஸ், அமைச்சர்கள் ஆகிய நியமனங்கள் மற்றும் ஆணைக் குழுக்கள் நியமனங்கள் என அனைத்து நிர்வாகப் பொறுப்புக்களையும் தன்னகத்தே கொண்டிருப்பதே இதற்குக் காரணம். இந்த சட்ட ஆட்சி நிலை மாற வேண்டும்.
மாற்றப்பட வேண்டும் என்ற தீவிரத்துடன் புதிய ஆட்சி முறைமையொன்று கொண்டு வரப்பட வேண்டும் என்ற தாகத்துடன் எதிரணியினர் உருவாகியிருக்கிறார்கள் என்ற நிகழ்வுகளையும் தற்போது பார்க்கக் கூடியதாகவுள்ளது. இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென்ற கருத்து கட்சிகள் மத்தியிலும் சில புத்திஜீவிகள் மத்தியிலும் பேசப்பட்டு வந்த அபிப்பிராயமாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தக் கூடிய சாத்திய நிலைகளையோ அல்லது சூழ்நிலைகளையோ உருவாக்கும் சக்தி யாரிடமுமே இருந்ததில்லை.
தேர்தல் ஒன்றின் மூலம் கொண்டு வரக்கூடிய ஜனநாயக ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் சக்திகளாக மக்கள் இருந்தாலும் கூட தேர்தல் பிரகடனத்தையோ அறிவித்தலையோ செய்யக் கூடிய அதிகாரம் அவர்களிடம் இல்லையென்பதேயுண்மை.
அந்த அதிகாரத்தைக் கொண்டவர்களாக அரசாங்கமே உள்ளது. அந்த வகையில் தான் ஜனாதிபதி, தேர்தலுக்கான கால அளவு இன்னும் இரண்டு வருடங்கள் இருந்தும் கூட நான்கு வருட நிறைவுடன் தம் செல்வாக்கை மீண்டும் நிலை நிறுத்திக் காட்ட ஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நடைபெறப் போகின்ற ஜனாதிபதி, தேர்தலை ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகக் கொண்டு புதிய ஆட்சியொன்றை நிறுவி புதிய ஜனநாயக பாரம்பரியத்தை உருவாக்க வேண்டுமென்ற ஆதங்கத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் இருந்து உடைந்து வந்த முன்னாள் அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் புத்தி ஜீவிகள் தற்பொழுது எதிரணியாக ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
இந்த அணியினரை எட்ட நின்று ஆதரிக்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவ்வாறானதொரு காய் நகர்த்தலை மதி நுட்பமாகவும் தந்திரத்துடனும் நகர்த்தியிருப்பவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இவரின் ஆலோசகர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இரகசியமாகவும் ராஜதந்திர ரீதியிலும் காய்களை நகர்த்தி வெற்றியும் கண்டுள்ளனர். இவை நாடறிந்த விடயங்கள் தான். ஆனால், ஆட்சி மாற்றமொன்று வேண்டும். புதிய அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும்.
ஆட்சி மாற்றமொன்றை இலங்கை மக்கள் வேண்டி நிற்கிறார்கள் என்று கூறப்படுமானால் சிங்களம், தமிழ், முஸ்லிம் ஏனைய சமூகங்கள் என்ற பல்லின சமூகம் வாழும் இலங்கையில் இந்த சமூகங்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தைக் கோருகின்றார்கள் என்று கூறுவதற்குரிய எவ்வித தரவுகளையும் அபிப்பிராயங்களையும் யாருமே பெற முடியாது. அவர்களுக்கு கிடைக்கவுமில்லை.
பெரும்பான்மை சமூகமென அடையாளப்படுத்தப்படும் பேரினச் சமூகம் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றதா அல்லது கோரிக் கொண்டிருக்கிறதா என எந்த அடையாளங்கள் மூலமோ, அபிப்பிராயங்கள் மூலமோ அறியப்படவில்லை. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ன நினைக்கிறதென்றால் யுத்த வெற்றி, பொருளாதார அபிவிருத்தி, தேச அமைதியைக் கொண்டு வந்த தம்மை எந்த சக்திகளாலும் தோற்கடித்து விட முடியாது என்பதாகும்.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இவ்வாறு கூறியிருந்தார். நான் நாட்டு மக்களை நம்புகின்றேன். நாட்டை நேசிக்கும் மக்கள் இந் நாட்டில் இருக்கும் வரை தற்போதைய அரசாங்கத்தை யாரும் தோற்கடிக்க முடியாது. அதுமட்டுமன்றி 28 தேர்தல்களில் வெற்றி பெற்ற இன்றைய அரசாங்கம் 29 ஆவது தேர்தலான ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றி பெறும் என மஹிந்த ராஜபக் ஷ உறுதியிட்டுக் கூறியிருந்தார்.
இதேவேளை, எதிரணியில் கூட்டுக் சேர்ந்திருப்போர் கூறிக் கொண்டிருக்கிறார்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு முடிவு கட்டுவோம். குடும்ப ஆட்சி முறைமையை இல்லாது ஆக்கி ஜனநாயக ஆட்சி முறைமையொன்றை உருவாக்குவோம். இதற்கு நாட்டிலுள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்று.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்சே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமையை இல்லாது ஆக்குவேன் என அளித்த வாக்குறுதிகளை தனது இரண்டாவது பருவ காலத்திலும் நிறைவேற்றாமல் மூன்றாம் முறையும் அந்த அதிகாரத்தை தனதாக்க போட்டியிட முன்வந்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று எனக் குற்றம் சாட்டிக் கொண்டு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய உடைந்து வெளியேறியதும் ஜே.வி.பி.யினர் வெளியேறி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருவதும் மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு பாரிய சவாலாக ஆகிவிட்ட சூழ்நிலையில் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் மூத்த அமைச்சராகவும் பதவி வகித்த மைத்திரிபால சிறிசேனா எதிரணியின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது பாரிய அரசியல் மாற்றத்துக்கான சூட்சுமக்கயிறு என எடுத்துக் கூறப்படுகிறது.
இவரின் உடைவும் விலகலும் சுதந்திரக் கட்சியின் அதாவது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பலத்துக்கு ஆப்பாகி விட்டது. சிங்கள பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் பாரிய பிரிவை உண்டாக்கும் சாணக்கியமாக்கப்பட்டிருக்கிறது எனப் பேசப்படுகிறது. சிங்களப் பெரும்பான்மை சமூகம் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றார்களா? அல்லது யுத்த வெற்றியின் மூலம் தேசத்துக்கு விடிவு தந்த தலைமைத்துவத்தை மீண்டும் அரியாசனத்தில் அமர்த்துவார்களா என்பதெல்லாம் மக்களின் வாக்குப் பலத்தில் தான் தங்கியிருக்கிறது.
எவை எப்படியிருந்த போதிலும் ஆளும் அரசாங்கத்துக்கு நடைபெறப் போகின்ற ஜனாதிபதித் தேர்தலானது ஒரு அக்கினிப் பரீட்சையாகவே இருக்கப் போகிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும். அரசியல் மாற்றம் நிகழ வேண்டுமென சர்வதேசம் எதிர்பார்க்கின்றதா? இல்லை சூழ்ச்சிகள் செய்து வருகின்றதா? என்ற சந்தேகங்கள் இன்று இலங்கையின் தேசிய சமூகங்களுக்கிடையே பெருத்த சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
இலங்கை அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது எதிரணியின் உருவாக்கம் என்பது ஒரு சர்வதேச சதியென்று. தமிழ் ஈழத்தை உருவாக்கும் சர்வதேசத்தின் நோக்கத்தை பின்னணியாகக் கொண்டே எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தெரிவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு தூதரங்களின் உதவியுடன் ஒவ்வொருவருக்குமிடையே ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பான தகவல்களை சரியான நேரத்தில் வெளியிடுவோம். அது மட்டுமன்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே அவர்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு அனுப்புவது என்ற தீர்மானத்துடன் டயஸ் போராவுடன் இணைந்து எதிரணியினர் கூட்டுத்திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்துள்ளது என விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் எதிரணியினர் பற்றிக் கூறுகையில்; தாம் ஆட்சிக்கு வந்ததும் தமிழீழத்தை பெற்றுக் கொடுப்பதற்கு என்று ஐ.தே. கட்சித் தலைவர் ரணில் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் மேற்குலக நாடுகளுடன் இரகசிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமையை உரிய நேரத்தில் வெளிப்படுத்துவோமென இனவாத கோஷமிட்டிருப்பதையும் காணமுடிகிறது.
மஹிந்தானந்த அளுத்கமகே எவ்வளவு அழகான பொய்யை வரைந்துள்ளார் என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும். விடுதலைப் புலிகள் மீது தொடுக்கப்பட்ட போருக்கு எந்தெந்த உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு தளபாட உதவிகளையும் ஆலோசனைகளையும் யுத்த உபாயங்களையும் நல்கியதோ அதே நாடுகள் தமிழீழத்தை உருவாக்கும் நோக்குடனேயே எதிரணியை உருவாக்கி சூழ்ச்சி செய்து வருகின்றன என்பது அரசாங்கத்தின் குற்றச் சாட்டாகக் காணப்படுகிறது. இதில் எந்தளவு யதார்த்தம் இருக்கிறது என்பது சொல்லாமலே விளங்கிக் கொள்ளக் கூடிய விடயமாகும்.
அரசாங்கத்தின் இந்த அப்பட்டமான குற்றச்சாட்டை மறுதலித்த எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன பின்வருமாறு கூறியிருந்தார். 47 வருடங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்து வந்துள்ளேன். என்னை ஆதரிக்கும் மாதுலுவாவே தேரர் மற்றும் ஜாதிக ஹெல உறுமய பொது எதிரணியில் இணைந்திருப்போர் அனைவரும் வெளிநாட்டு சதியில் அங்கம் வகிப்போரா? என அவர் கேட்டுள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் கிளப்பிவிடப்பட்டிருக்கும் சர்வதேச சதியென்ற விவகாரம் சாதாரணமாக கூறக்கூடிய ஒரு குற்றச்சாட்டல்ல. அது கனதியாக நிரூபிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். அவ்வாறு நிரூபிக்கக்கூடிய திறனோ ஆதாரங்களோ இருக்குமாயின் அது பகிரங்கப்படுத்தப்படுமாயின் எதிரணியினர் எவ்வளவு ஆபத்தான குற்றச்சாட்டுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பது எதிரணியினருக்கு விளங்காத ஒரு விடயமல்ல.
ஆட்சி மாற்றத்தை விரும்பும் இன்னுமொரு தரப்பினராக எண்ணப்படுபவர்கள் இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகமென அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் தமிழ் மக்களும் முஸ்லிம் சமூகமுமாகும். இதில் தமிழ் சமூகம் தமது அரசியல் உரிமைகளுக்காக கடந்த ஆறு தசாப்தத்துக்கு மேலாக போராடி வந்துள்ளது.
அஹிம்சை வழிப்போராட்டம், ஆயுத போராட்டம் இராஜதந்திரப் போராட்டம் என்ற பல பரிமாணங்கள் போராட்டத்தின் வரலாற்று வழிகளாக இருந்திருக்கின்றன. இலங்கையில் மாறிமாறி வந்த தேசிய அரசாங்கங்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகள் மீது அக்கறை காட்டாத சூழ்நிலையில் ஆயுத போர்முனைப்புக்கள் வெடித்தெழுந்தன. முப்பது வருட காலப்போரில் இழந்தவைகள் இழக்கப்பட்டவைகள் ஏராளம்.
இவையெல்லாவற்றையும் துவம்சம் செய்யும் வகையில் பாரிய யுத்தமொன்றை மேற்கொண்டு வெற்றிக்கொண்ட தற்போதைய அரசாங்கம் நியாயமான தீர்வை முன்வைப்போம், அரசியல் சுதந்திரத்தை தமிழ் மக்களுக்கு வழங்குவேன் என்று கூறிக்கொண்டு சர்வதேச சமூகம் உட்பட அனைவருக்கும் போக்கு காட்டி வருகிறது. உலக அனுசரணையுடன் யுத்தத்தை வெற்றிகொண்ட இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைக்க முடியவில்லை.
மாறாக காணி அபகரிப்பு, காணாமல் போனோர் விவகாரம், மீள்குடியேற்ற தட்டிக்கழிப்பு, புனர்வாழ்வு செய்யாமை மற்றும் கலாசார மையங்கள், காணி சுவீகரிப்பு, இராணுவக்குடியிருப்பு, பேரினக் குடியேற்றம் போன்ற இன்னோரன்ன கெடுபிடிகளை வடகிழக்கில் நிகழ்த்தி வருகின்ற சூழ்நிலையில் இந்த அரசாங்கத்தின் ஆட்சி வல்லமையை மாற்றியமைக்க வேண்டும்.
ஆட்சி மாற்றமொன்று கொண்டுவரப்பட வேண்டுமென நினைப்பதில் நியாயம் இருக்கலாம். ஆனால், அதைக் கொண்டு வரக்கூடிய வல்லமை தமிழ் தரப்புக்கு உண்டா என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
வட, கிழக்கைப் பொறுத்தவரை ஐந்து கட்சிகளின் கூட்டாக விளங்குகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான தமிழ்த்தேசிய விடுதலை முன்னணி கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இலங்கை தமிழர் மகா சபை, ஈரோஸ் தமிழர் விடுதலைக் கூட்டணி என பதிவு செய்யப்பட்ட பதிவு செய்யப்படாத தமிழ் தரப்பினரை அடையாளப்படுத்தும் கட்சிகள் இதேபோன்று மலையக மக்களை பிரதி நிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சாந்தினி சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் ஐக்கிய முன்னணி மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவை ஒன்று இணைவதன் மூலமோ அல்லது ஆளும் அரசாங்கத்துக்கெதிராக கூட்டு சேர்வதன் மூலமோ ஆட்சி மாற்றமொன்றைக் கொண்டுவர முடியுமா என்பது குதிரைக்கொம்பாகவே பார்க்கப்படும்.
மேலே பெயர் சூட்டிக்காட்டப்பட்ட கட்சிகளில் பல மறைந்தும் மறையாமலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் அரசாங்கத்துக்கு துணைபோகும் கட்சிகளாக இருந்து கொண்டிருக்கும் நிலையில் வடகிழக்கு மற்றும் மலையகத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளால் ஆட்சி மாற்றமொன்றை கொண்டுவரமுடியுமா இவர்கள் அனைவரையும் ஒன்று இணைக்கும் சக்தி யாரிடமும் உள்ளதா? என்பதெல்லாம் பகற்கனவாகவே முடியும்.
இன்று ஆட்சி மாற்றமொன்றை விரும்பும் இன்னதொரு தரப்பினராகக் கருதப்படுபவர்கள் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாக இருக்கலாம். கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகள் அட்டூழியங்கள், அநியாயங்கள் அந்த சமூகத்தை நிலைகுலைய வைத்துள்ளது என்பது உண்மையே.
விரக்தியும் வெறுப்பும் கொண்டிருக்கின்ற இந்த சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்துவதில் செல்வாக்கு பெற்று நிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட்பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அதாவுல்லா தலைமையிலான அ.இ.தேசிய காங்கிரஸ் மற்றும் உதிரிக்கட்சிகள் ஆட்சிமாற்றமொன்றை விரும்புகின்றனவா? இல்லையா என்பது பற்றி முடிவுகாண முடியாமலேயுள்ளது.
ஆனால் முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை ஆட்சி மாற்றமொன்றின் மீது அக்கறைகொண்டவர்களாக காணப்படுகின்றார்கள் என்ற பரவலான அபிப்பிராயமும் கருத்தும் விரவி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம் மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சிகள் அனைத்துமே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைக்கு இதுவரை வழங்கி வந்த ஆதரவை இன்றுவரை வாபஸ் பெற்றுக்கொண்டதாக தெரியவில்லை.
பிந்திக்கிடைத்த தகவலின்படி அமைச்சர் ரிஷாட்பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை மீள் பரிசீலனை செய்து நடுநிலை வகிக்கப்போவதாக கூறியிருக்கின்றது. இதன் இந்த நிலைப்பாடு ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
அதுவுமன்றி இலங்கையின் தேசிய கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் நிரந்தரமான ஆதரவாளர்கள் முஸ்லிம் சமூகத்தில் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இந்த நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்கவிருக்கின்றது என்பது இன்னும் மூடுமந்திரமாகவே காணப்படுகின்றது.
அக்கட்சியின் பொது செயலாளர் ஹசன் அலி ஜனாதிபதித் தேர்தல் பற்றி கருத்து தெரிவிக்கையில்; இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகளை முன்னெடுப்பார்கள் என்பதிலேயே மு.காங்கிரஸின் அடுத்த கட்ட நகர்வு தங்கியுள்ளது. கொள்கைப்பிரகடனம் உட்பட்ட சமகால அரசியல் நிலைவரங்களை மு.காங்கிரஸ் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.
மக்கள் நலன் சார்ந்த முடிவை மு. காங்கிரஸ் எடுக்குமென்று ஹசன் அலி கூறியுள்ளார். இதேபல்லவியையே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் கூறிக்கொண்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு எடுக்கப்போகும் தீர்மானம் நாட்டின் சகல மக்களுக்கும் சிறந்த நல்ல முடிவாக நாம் எடுப்போம் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபாலசிறிசேனவின் முற்போக்கான கருத்துக்களை கூட்டமைப்பு வரவேற்கின்றது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பைப் பொறுத்தவரை என்ன முடிவை எடுக்கப்போகின்றது என்பதில் தான் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் எதிர்கால போக்கும் நிர்ணயிக்கப்படவுள்ளது என்பது வெள்ளிடை மலையாகும். ஆளும் அரசாங்கத்தின் தலைவர் மகிந்த ராஜபக் ஷவை ஆதரிக்கும் முடிவை இவர்கள் எடுக்க முடியுமா? மாறாக எதிரணி வேட்பாளர் மைத்திரியை ஆதரிக்கப்போவதாக முடிவை எடுப்பார்களானால் இவர்களின் ஆதரவை மஹிந்த ராஜபக் ஷவின் தரப்பினர் எவ்வாறு தமது தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவார்கள். என்பதெல்லாம் தர்மசங்கடமான நிலையாகவே காணப்படும்.
ஏலவே தமிழீழத்தை அமைக்க சர்வதேசத்துடன் சேர்ந்து எதிரணியினர் சூழ்ச்சி செய்து வருகின்றார்கள் என அப்பட்டமான பொய்யை அள்ளிவீசும் அரசாங்கத்தின் வாய்க்கு அவல் கிடைத்ததாகவே ஆகிவிடும். அதுவுமின்றி அரசாங்கத்தரப்பினரையும் ஆதரிக்காமல் மறுபுறம் எதிரணி வேட்பாளரையும் ஆதரிக்காமல் கூட்டமைப்பு நடுநிலைவகிக்க முடியுமா? அந்த நடுநிலைவகிப்பு எதிர்கால தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்களுக்கு துணைபோக முடியுமா என்பதெல்லாம் ஆராய்ந்து நிதானமாக எடுக்கப்பட வேண்டிய முடிவு என்பதை மறுப்பதற்கில்லை.
இவ்வாறான சிக்கல்களும் சங்கடங்களும் சச்சரவுகளும் கொண்ட தேர்தலாக ஆகியிருக்கும் 7ஆவது ஜனாதிபதித் தேர்தலானது ஆட்சி மாற்றத்தை கொண்டுவருமா. எதிரணியினர் மற்றும் சிறுபான்மைத் தரப்பினர் ஆகியோர் ஒன்று இணைவதன் மூலம் ஆட்சி மாற்றத்துக்கான முடிவைக்கொண்டு வரமுடியுமா? அந்த முடிவுக்கு அமைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைமை ஒழிக்கப்பட்டு புதிய ஜனநாயக கலாசாரமொன்றை உருவாக்கும் நிலை ஏற்பட வாய்ப்பிருக்கின்றதா இந்த வாய்ப்பொன்றின் மூலம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு முடிவுகாண முடியுமா என்பதெல்லாம் மக்கள் அளிக் கப்போகும் தீர்ப்பிலேயே தங்கியுள்ளது.