புதுவருடம் பிறந்து 8ஆவது நாள் ஜனாதிபதித் தேர்தல். தேர்தலில் யார் வெற்றி பெறுவர் என்பது குறித்து கருத்துக் கூறுவது நமக்கு அபத்தம் என்பதால் அதனை அப்படியே விட்டுவிடலாம்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதென்ற முடிவு ஏகமனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
என்னோடு போட்டியிடும் அந்த வீரன் யார் அதை அறிய ஆவலாக உள்ளேன் என்று கர்ச்சித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்விற்கு தன்னோடு போட்டியிடுபவர் மைத்திரிபால சிறிசேன என்று அறிந்த போது அதிர்ச்சி பலமாக இருந்திருக்கும்.
நம் நாட்டில் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நடக்கப் போகும் ஜனாதிபதித் தேர்தல் குருசேத்திர போருக்கு ஈடானது.
மகிந்த ராஜபக் அமைத்துள்ள பலமான சக்கர வியூகத்தை மைத்திரிபால சிறிசேன உடைத்தெறிவது மிகவும் அவசியமானதாக இருக்கும்.
மகிந்தவின் சக்கர வியூகத்தை உடைப்பதற்கு மைத்திரிபால சிறிசேன தவறினால் பிச்சாடன வடிவம் தாங்கி சிறையில் தட்டேந்தும் பரிதாப நிலைமைத்திரிக்கு ஏற்படும் என்பதை நம்மால் எழுதிக் கொடுக்க முடியும்.
அதேநேரம் ஜனாதிபதி மகிந்தவின் வியூகத்தை உடைப்பதென்பது சாதாரண விடயம் என்று எதிர்க் கட்சியினர் யாரேனும் கருதினால் குருசேத்திரத்தில் அபி மன்யுவுக்கு நடந்ததே மைத்திரிபால சிறிசேனவுக்கும் நடக்கும்.
எனவே மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் வியூகத்தை உடைப்பதாயின் அருச்சுனனுக்கு வாய்த்த பார்த்தசாரதி போல மைத்திரிபால சிறிசேனவுக்கும் பொருத்தமான - பலமான - சூழ்ச்சி தெரிந்த தேர்ச்சாரதி தேவை.
அப்படியான ஒரு சாரதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவாகவே இருக்க முடியும்.
இரண்டு பிரதமர்களின் மகள். இரண்டு தடவை ஜனாதிபதியாக இருந்தவர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் ஆட்சியில் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தவர்.
கால சூழல் சாதகமாக வரும்வரை காத்திருந்த அவர் மைத்திரிபாலவை எதிர்க்கட்சி களின் பொது வேட்பாளராகக் கொண்டு வந்ததிலிருந்து அவரின் ராஜதந்திரம் வெற்றியளித்துள்ளதெனலாம்.
எனவே மைத்திரி என்ற அருச்சுனன் தேரிலிருக்க, பார்த்தசாரதியின் இடத்தில் சந்திரிகா அம்மையார் வீற்றிருந்து தேரோடப் போகின்றார்.
தேர்தல் களத்தில் கடுமையான போர் நடக்கும் என்பதோடு ஜனாதிபதி மகிந்த ராஜபக் தன்னிடமிருக்கக் கூடிய பிரம்மாஸ்திரத்தை ஏவவும் தயங்கமாட்டார்.
இச் சந்தர்ப்பத்தில் தேரை அமிழ்த்தி பிரம்மாஸ்திரத்தில் இருந்து மைத்திரிபாலவைக் காப்பாற்றும் தந்திரத்தை சந்திரிகா செய்தாக வேண்டும். இல்லையேல் பிரம்மாஸ்திரம் தேர்ச் சாரதியையும் பதம் பார்த்து விடும்.
இது தவிர ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, சரத் என் சில்வா, கரு ஜெயசூரிய, சஜித் பிரேமதாஸ, சிராணி பண்டாரநாயக்க என்ற கஜரத படைகளுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் இருக்கக் கூடிய குறுநில மன்னர்களின் படைபல உதவிகளை யும் பெற்றுக் கொள்வது சத்திரிகாவின் கடமையாக இருக்கும்.
சில வேளைகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் பக்கத்தில் கர்ணன் இருப்பானாயின் அவனிடம் சென்று வரம் கேட்கின்ற கிருஷ்ண புத்தியை நிச்சயம் சந்திரிகா செய்தாக வேண்டும்.
தேரிலிருக்கும் மைத்திரிபாலவை விட, தேரோட்டும் சந்திரிகாவே கடுமையான தேர்தல் வியூகங்களை அமைக்க வேண்டியிருக்கும். ஏனெனில் தேர்தல் போரில் மைத்திரிபாலவை நிறுத்தியவர் அவர் என்பதால்.