பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர்
“கண்ணா நீயும் நானுமா?” என்ற பாடல் அடிக்கொரு தடவை ஞாபகத்திற்கு வருகின்றது. நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் என்ற பாடலும் இடைக்கிடை மேற்கிளம்புகின்றது.ஜனாதிபதி தேர்தல் களம் இவ்வளவு சூடாக இருக்கும் என்று ஆளும் கட்சியினர் மட்டுமன்றி எதிரணி கூட்டுக் கட்சிகளும் கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது மிகச் சுலபமான காரியம் என்றும் அதற்கான ராஜதந்திரங்கள் எல்லாம் தம்மிடம் கைநிறைய என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நினைத்துக் கொண்டிருந்தது.
மறுபுறத்தில் கிட்டத்தட்ட ஒரு தசாப்தகாலம் ஆட்சி செய்துவிட்ட ஒரு ஜனாதிபதியை தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒரு பொருத்தமான பொது வேட்பாளரை தேடிக் கொள்ள முடியாமல் தலையைப் போட்டு பிய்த்துக் கொண்டிருந்தன. இதனால் மூன்றாவது தடவைகூட தற்போதைய ஜனாதிபதியை வெல்ல முடியாத நிலை தோன்றிவிடுமோ என்ற அச்சம் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க.வை வெகுவாக ஆட்டிப்படைத்தது.
முன்கதை சுருக்கம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆட்சியில் பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியானார். தன்னுடைய பதவிக் காலம் முடிவடைவதற்கு ஒன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலம் இருந்த நிலையிலேயே 2010 முற்பகுதியில் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றார்.
இருப்பினும் அவ்வருடம் நவம்பர் 19ஆம் திகதியே இரண்டாவது பதவிக் காலத்திற்காக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 2010 ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கும் பதவியேற்புக்கும் இடைப்பட்ட காலத்தில் மிகப் பெரிய காரியம் ஒன்றை செய்து முடித்தார் மஹிந்த ராஜபக் ஷ. அதாவது மூன்றாவது முறையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இடமளிக்கும் 18ஆவது திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார்.
விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியாக தோற்கடித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை அவர் பெற்றிருந்தார். இது, இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்களாலும் ஜனாதிபதிகளாலும் சாத்தியப்படாமல் போன ஒரு முயற்சி என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பிற்காலத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிட்டாலும் கூட, புலிகளின் பிளவின் பின்னர் ஏற்பட்ட களநிலைமைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஏதோ ஒருவிதமான வறட்டு தைரியத்தில் அல்லது எகத்தாளத்தில் படை நடவடிக்கையை மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் முன்கொண்டு சென்றிருக்காவிட்டால் புலிகளை தோற்கடிப்பது அப்போது சாத்தியமாகி இருக்காது.
யுத்த களத்திற்கு பொறுப்பான முன்னாள் இராணுவத் தளபதியை விடவும் புலிகளை தோற்கடிப்பதில் பாதுகாப்பு அமைச்சரான மஹிந்த ராஜபக் ஷவின் பங்களிப்பே முக்கியமானது என்று மக்கள் கருதினார்கள் என்பதற்கு பொன்சேகாவின் தோல்வியும் ஒரு அத்தாட்சி. 2010 இல் மஹிந்த இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றது யுத்தமற்ற ஒரு தேசத்திலாகும். அதற்குப் பின்னர் நாட்டில் பல முக்கிய பணிகள் செய்து முடிக்கப்பட வேண்டியிருந்தன.
குறிப்பாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கமும் நாட்டின் பௌதீக அபிவிருத்தியும் அதில் குறிப்பிடத்தக்கவை. அந்த வகையில் கடந்த 4 வருடங்களில் நாட்டில் சிறப்பான அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. இவ்வளவு காலகெதியில் இத்தனை அபிவிருத்தி திட்டங்களை செய்து முடித்தமை பாராட்டப்பட வேண்டியதே.
ஆனால், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பெரிதாக முன்னேற்றம் காணவில்லை என்பதே பொதுவான அபிப்பிராயமாகும். இதற்கு முக்கிய காரணம் இனவாத சக்திகளின் கைகள் மேலோங்கியமையாகும். கடந்த மூன்று வருடங்களாக பொது பலசேனா போன்ற அமைப்புக்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை பரவலாக பிரயோகித்து வருகின்றன.
இந்நாட்டின் முதலாவது சிறுபான்மை இனமான தமிழர்களுடனான நல்லுறவை முன்னிலைப்படுத்தும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அப்படியே கிடப்பில் கிடக்க, மறுபுறத்தில் இரண்டாவது சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் மீது இனவாதம் சொல்லொண்ணா வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டது கண்கூடு. இவ்வாறான சக்திகள் பெரும்பான்மை சமூகத்திற்கும் சிறுபான்மையினருக்கும் இடையில் குழப்பத்தை உண்டுபண்ணி குளிர்காய முற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இருப்பினும் அரசாங்கம் இந்த சக்திகளுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் திருப்திப்படும் அளவுக்கு சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்த இலட்சணத்தில் போருக்குப் பின்னரான இன நல்லிணக்கம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. இதற்குப் புறம்பாக பொதுவாக சிங்கள மக்களாலும் பெரும்பான்மை கட்சிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்ற விடயம் குடும்ப ஆட்சியாகும்.
எதிர்க்கட்சிகளுக்கு இது நல்லதொரு பேசுபொருளாக இருக்கின்றது. நிறைவேற்று அதிகாரத்தையே ஒழிக்க வேண்டுமென குரல்கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் குடும்ப அரசியலின் கையும் மேலோங்கிக் காணப்படுவதை பலராலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவுக்கு தலையையும் சீனாவுக்கு வாலையும் காட்டிக் கொண்டிருக்கின்ற இலங்கை அரசாங்கம், மேற்குலக நாடுகளையும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான கோரிக்கைகளையும் பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை என்றே கூற வேண்டும்.
இதனால் மேற்குலக நாடுகளும் சிறிய நாடுகள் வளர்ச்சியடையக் கூடாது என நினைக்கும் நாடுகளும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றினை அவாவி நிற்கின்றன என்பது உலகறிந்த ரகசியம். எதிர்க்கட்சியின் வங்குரோத்து ஆனால் உள்நாட்டு அரசியலில் கடந்த 9 வருடங்களாக ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு ஏதுவான களநிலைமைகள் ஏற்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் பிரதான எதிர்க்கட்சியின் வங்குரோத்து நிலையாகும்.
இந்த நாட்டை 27 வருடங்கள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சி கடந்த ஏழெட்டு வருடங்களாக கடுமையான சரிவை சந்தித்திருக்கின்றது. அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக இருந்த 15 இற்கும் மேற்பட்டோர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு கட்சி தாவி பதவிகளை பெற்று விட்டனர். இந்த கட்சிதாவல் கூட்டமைப்பை எந்தளவுக்கு பலப்படுத்தியதோ அதைவிடவும் பலமான வீழ்ச்சியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்படுத்தியது.
பலமிழந்து போன ஒரு கட்சியையும் கட்டுக்குலைந்து போன உறுப்பினர்களையும் வைத்துக் கொண்டு கட்சியை முன்கொண்டு செல்ல வேண்டிய நிலையில் ரணில் விக்கிரமசிங்க இருந்தார். ஜென்டில்மேன் அரசியல்வாதிதான் என்றாலும் மஹிந்தவில் காணப்பட்ட எதுவோ ஒரு ஆளுமை ரணிலிடம் இருக்கவில்லை என்பதால் கட்சி காலத்தை கடத்த வேண்டியுமிருந்தது. ஆளும் கட்சியை சரியாக வழிநடத்துவதில் 50 வீதமான பங்கு எதிர்க்கட்சிக்கு இருக்கின்றது.
ஆனால், அக்கட்சி உள்ளகமாக பலமற்றுப் போனமையால் இப்பணியை சரியாக செய்யவில்லை. நல்லதொரு எதிர்க்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி தம்மை பலப்படுத்தியிருக்குமானால் எந்தவித ஆரவாரங்களும் இன்றி ஆட்சிமாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்கான சாதக நிலைமைகளும் அதிகரித்திருக்கும். குறைந்த பட்சம் ஒரு பொது வேட்பாளரையேனும் கட்சிக்குள் இருந்து முன்மொழிந்திருக்கலாம்.
ஆனால் 9 வருடங்கள் ஆட்சி புரிந்த ஒரு ஜனாதிபதியை மூன்றாவது தடவையேனும் தோற்கடிப்பதற்கு ஆள் தேடிப் பிடிக்க வேண்டிய நிலையில்தான் பிரதான எதிர்க்கட்சி இருந்தது. ஆக மொத்தத்தில் இன்று இலங்கையில் மாற்றத்தை வேண்டிநிற்கும் அரசியல் கலாசாரம் ஒன்று இருக்கின்றது என்று கருதினால், அதற்கு கணிசமான பொறுப்பை ஐக்கிய தேசிய கட்சியே ஏற்க வேண்டியிருக்கும்.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய பேச்சுக்கள் பல மாதங்களுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டன. இருப்பினும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு சகுனம் சரியில்லை என்பதால் தேர்தல் ஒன்றிற்கான அறிவிப்பு வெளியாகாது என்றே பலரும் கருதியிருந்தனர். அவ்வாறு தேர்தல் ஒன்று இடம்பெற்றாலும் அது பாராளுமன்ற பொதுத் தேர்தலாகவே இருக்கும் என்றும் சிலர் அபிப்பிராயப்பட்டனர்.
களநிலைமைகள் சரியில்லாத ஒரு சூழலில், கடந்த முறை போன்று தமது ஆட்சிக்காலத்தை ஜனாதிபதி மஹிந்த முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவர விரும்பமாட்டார் என்பதே மேலோட்டமாக நோக்கும் அவதானிகளின் கணிப்பாக இருந்தது. ஆனால் அந்தக் கணிப்பு பிழையாகிப் போனது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர். ஜெயவர்த்தன அதன் பலாபலன்களை அனுபவித்துவிட்டே கதிரையை விட்டு இறங்கினார் என்பது வரலாறு.
அதுபோல மூன்று முறை ஜனாதிபதியாக போட்டியிட முடியும் என்ற திருத்தத்தை இவ்வளவு பாடுபட்டு கொண்டு வந்த மஹிந்த ராஜபக் ஷவும் அதன் பலாபலன்களை சுகிக்க விரும்பியதில் ஆச்சரியமேதும் இல்லை. இன்னும் காலம் சென்றால் நிலைமைகள் இதைவிட மோசமாகிவிடும் என்ற எண்ணம் உட்பட அதற்கு அப்பாலான வேறு காரணங்களும் இருந்திருக்கலாம்.
எனவே, ஆணை கிடைத்தால் 2016 வரை கோலோச்சுவது அல்லது இரு வருடங்களுக்கு முன்னமே கதிரையை விட்டு இறங்குவது என்ற முடிவிலேயே மஹிந்த ராஜ பக் ஷ தேர்தலுக்கான அழைப்பை விடுத்துள்ளார். தேர்தலுக்கான அழைப்பு மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையும் போட்டியிடுவதற்கு சட்டத்தில் தடைகள் இல்லை என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியது.
இதனால் எதிர்க்கட்சிகள் சற்று தடுமாறித்தான் போயின. அதன் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்வதற்கான உத்தியோகபூர்வ பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த இம்மாதம் 20ஆம் திகதி பிற்பகல் 1.18இற்கு கைச்சாத்திட்டார். தொலைநகல் மூலம் இதனைப் பெற்றுக் கொண்ட தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி வாக்களிப்பு இடம்பெறும் எனவும் டிசம்பர் 8ஆம் திகதிவரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருக்கின்றார்.
எதிர்க்கட்சிகள் பல ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் நீண்ட நாட்களாக மந்திராலோசனைகளை நடத்தி வருகின்றன. ஆனாலும் யாரை பொது வேட்பாளராக தெரிவு செய்வது என்பதில் கடைசித் தருணம் வரைக்கும் இழுபறியாகவே இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக நியமிக்கப்பட்டால் கூட அவர் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவுகள் மிகக் குறைவாகவே காணப்பட்டன.
எவ்வாறிருப்பினும் பொதுவேட்பாளர் பட்டியலில் ரணிலின் பெயரும் பரிசீலனையில் இருந்தது. முன்னாள் இராணுவ தளபதியும் கடந்த முறை தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகாவுக்கு தேர்தலில் போட்டியிடுவதில் சட்டப்பிரச்சினை காணப்பட்டது. அதேவேளை மஹிந்தவை எதிர்த்து நிற்பதற்கு சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர போன்றோர் சரிப்பட்டு வரமாட்டார்கள் என்பது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தெட்டத்தெளிவாக புலனாகியது.
எனவே ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐ.தே.க. தலைமைத்துவ சபையின் தவிசாளர் கரு ஜயசூரிய மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரே பொது வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இம் மூவரிலும் மஹிந்தவை எதிர்ப்பதற்கான மிகச் சிறந்த தெரிவாக சந்திரிகா இருந்தார் என்றால் பொய்யில்லை. குறிப்பாக முஸ்லிம்கள் சந்திரிகாவின் ஆட்சிக்காலம் பற்றி நல்லதொரு மனப்பதிவை கொண்டிருக்கின்றனர்.
எனவே சந்திரிகா போட்டியிட்டால் கணிசமான முஸ்லிம்களும் ஆதரவளித்திருப்பார்கள். மஹிந்த ராஜபக் ஷ வுக்கு சவாலாக அமையக் கூடிய ஒரு தெரிவாகவும் சந்திரிகா இருந்திருப்பார். இவ்வாறு சந்திரிகா வெற்றிபெற்றிருந்தால், மஹிந்த கொண்டுவந்த 3ஆவது தடவை போட்டியிடும் வரப்பிரசாதத்தை அம்மையாரே முதலில் அனுபவித்திருப்பார். ஆனால் அதில் சிக்கல்களும் இருந்தன. அதாகப்பட்டது - உயர் நீதிமன்றம் வழங்கிய வியாக்கியான ஆவணத்தை ஆளும் கட்சி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவோ அல்லது பகிரங்கப்படுத்தவோ இல்லை.
இது பல்வேறு சந்தேகங்களுக்கும் ஊகங்களுக்கும் வழிகோலியது. சந்திரிகா போட்டியிட இந்த வியாக்கியானத்தில் மறைமுக தடைகள் இருக்குமோ என எதிர்க்கட்சிகள் சந்தேகித்தன. இளைப்பாறிய ஜனாதிபதி 3ஆவது தடவை போட்டியிட முடியாது என்று அல்லது 18ஆவது திருத்தத்திற்குப் பின்னர் ஜனாதிபதியாக பதவியேற்ற நபரே 3ஆவது முறை போட்டியிடும் தகுதியை பெறுவார் என்று ஏதேனும் வாசகம் உள்ளடங்கி இருக்கலாம் என்றும் அதனாலேயே ஆளும் கட்சி அதனை மறைத்து வைத்திருக்கின்றது என்றும் ஊகங்கள் வெளியாகின.
பொது வேட்பாளர் யார் என்பது இழுபறியாக இருந்துகொண்டிருந்த பின்புலத்தில், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தது. பிரதான எதிர்க்கட்சிக்குள் இருந்தோ, பல எதிர்க் கட்சிகளின் கூட்டணிக்குள் இருந்தோ ஒரு வேட்பளரை தெரிவு செய்ய முடியாதவர்கள் எப்படி வெற்றி பெறப் போகின்றார்கள்? என்று அரசாங்கம் எள்ளி நகையாடிக் கொண்டிருந்த வேளையிலேயே அது நடந்தது.
ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான அழைப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வெளிப்படுத்திய மறுநாள் அதாவது கடந்த 21ஆம் திகதி இந்தக் கதைக்குள் மைத்திரிபால சிறிசேன நுழைந்தார். அதுமட்டுமன்றி, அவரே பொது வேட்பாளர் என்றும் எதிர்க்கட்சிகள் ஏகமனதாக அறிவிப்புச் செய்தன. இந்த நகர்வை ஆளும் கட்சி கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த அறிவிப்பு அரசாங்கத்தின் கீழ்மட்டம் தொடக்கம் மேலிடம் வரைக்கும் அனைவரையும் தூக்கி வாரிப் போட்டது.
47 வருடங்களாக சுதந்திரக் கட்சியுடன் இணைந்திருக்கின்ற கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருமான ஒருவர் மேற்சொன்ன எல்லா பதவிகளோடும் சென்று எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை பிரகடனம் செய்து கொள்வது என்பது லேசுபட்ட விடயமல்ல. பொது வேட்பாளர் என்கின்ற கதைக்குள் ஒரு வாரத்திற்கு முன்னரே மைத்திரியின் பெயர் உலாவந்தது. ஆளும் கட்சியின் முக்கிய தூண் என்பதால் யாரும் அதனை நம்பவில்லை.
தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் நீங்கள் கட்சி தாவுகின்றீர்களா? என்று சிறிசேனவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது சிரித்து மழுப்பியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. மறுநாள் ஜனாதிபதி அழைத்து முக்கிய பொறுப்பை அவருக்கு வழங்கினார். இருப்பினும் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு பத்தரமுல்லையில் வைத்து மைத்திரிபால தெரிவித்த கருத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் ஊடாக ஜனாதிபதி மஹிந்தவுக்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் மைத்திரியை அழைத்துப் பேசினார் ஜனாதிபதி. உள்ளே என்ன நடந்ததோ தெரியாது, வெளியே வந்த மைத்திரி தனது குழுவினருடன் சேர்ந்து அதிர்ச்சி வைத்தியம் ஒன்றை செய்தார். அதிரடி நடவடிக்கை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் 21ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட மைத்திரிபால சிறிசேனா பொது வேட்பாளராக தான் போட்டியிடுவதாக அறிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் ராஜித சேனாரட்ண, துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் சிறிசேனவுடன் கைகோர்த்துள்ளனர். பதவியேற்று 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், 18ஆவது திருத்தத்தை நீக்குவதுடன் 17ஆவது திருத்தத்தை மீள நடைமுறைப்படுத்தல், ரணிலை பிரதமராக்கல் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பொது வேட்பாளர் இங்கு வழங்கினார்.
சிறிசேனவைப் போலவே சந்திரிகா, ராஜித சேனாரட்ண ஆகியோரினதும் உரைகளும் மிகவும் காத்திரமான கருத்துக்களை உள்ளடக்கியதாக காணப்பட்டன. மைத்திரிபாலவை வைத்து மஹிந்த ராஜபக் ஷ நடத்துகின்ற நாடகமோ என்ற சந்தேகம் எழும் அளவுக்கு எல்லாம் திடுதிடுப்பென நடந்தன. ஆயினும், மைத்திரியுடன் சேர்ந்திருப்பவர்களை வைத்துப் பார்க்கின்றபோது இதுவும் ஒருவித அரசியலே என்றபோதும் நாடகமாக இருக்க முடியாதென தோன்றுகின்றது.
ஆளும் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பான பொது வேட்பாளராக முன்வருவதற்கு ஒரு தில் இருக்க வேண்டும். மறுபுறத்தில் ஆளும்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரை நம்பி அவருக்கு ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளர் அந்தஸ்தை விட்டுக் கொடுத்துள்ளார். ஆளும் கட்சிக்குள் இருந்து ஒருவரை வெளியில் எடுத்து பொது வேட்பாளராக நிறுத்தினால் இன்னும் பலரை அங்கிருந்து இழுத்தெடுக்க முடியும் என்ற வியூகம் இங்கு கையாளப்பட்டிருக்கின்றது.
அத்துரலிய ரத்ன தேரர், சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில போன்றோர் முன்னமே அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிட்டனர். உண்மையில் இவர்களது தீர்மானங்கள் கூட அரசாங்கத்தில் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் வளர்த்த கடாவும் மார்பில் பாய்வது அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது.
இதனை சமாளிக்க கடுமையான பிரயத்தனங்களை ஆளும் கட்சி தற்போது எடுத்துக் கொண்டிருக்கின்றது. சந்திரிகா அம்மையார் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தால் இதைப் போன்ற அல்லது இதைவிட பலமான சவாலை ஆளும்கட்சி சந்தித்திருக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் பெயர் முன்மொழியப்பட்ட வேறெந்த அரசியல்வாதியும் பொது வேட்பாளராக போட்டியிட்டிருந்தால் மந்திர தந்திரங்களை பயன்படுத்தி மஹிந்த ராஜபக் ஷ வெற்றி பெறுவதற்கான சாத்தியங்களே அதிகம் இருந்திருக்கும்.
இன்னும் ஒரு விதத்தில் சொன்னால் எதிர்க்கட்சிகளின் வெற்றியிலக்கு இன்னும் தூரத்தில் இருந்திருக்கும். ஆனால், மைத்திரிபால திடீரென உள்ளே வந்ததால் ஆடுகளம் சூடுபிடித்திருக்கின்றது. மைத்திரியின் பக்கம் அலையடிப்பதை பார்க்கும் போது, அரசாங்கம் எதிர்பார்த்ததை காட்டிலும் இப்போது சவால் அதிகமாகியுள்ளதாக தெரிகின்றது. இன்னும் 20 இற்கு மேற்பட்ட எம்.பி.க்கள் ஆளும் கட்சியில் இருந்து பொது எதிரணியின் பக்கம் தாவ இருப்பதாக கூறப்படுகின்றது.
இது தவிர சில சிறு கட்சிகள் தமது ஆதரவை ஏற்கனவே அறிவித்துவிட்டன. ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்த மக்கள் பிரதிநிதிகள் சிலரும் பொது எதிரணியை ஆதரிப்பதில்லை என்று முடிவெடுத்த சிலரும் தமது முடிவுகளை இப்போது மீள் பரிசீலனை செய்து கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது. சிறுபான்மை கட்சிகளின் நிலை சிறுபான்மை கட்சிகளின் நிலைப்பாடு இதில் முக்கியமானது. முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் காங்கிரஸோ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸோ இக்கட்டுரை எழுதப்படும் வரைக்கும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
ஆளும் கட்சியில் அமைச்சர்களாக இருந்து கொண்டு ரவுப் ஹக்கீமும், றிசாட் பதியுதீனும் அக்கட்சிக்கு ஆதரவளிக்க இன்னும் முடிவெடுக்கவில்லை என்பது பல உள்ளர்த்தங்களைக் கொண்டது. தேசிய காங்கிரஸின் தலைவர் அமைச்சர் அதாவுல்லா மஹிந்த ராஜபக் ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் நேரடியாக சங்கமித்திருக்கின்ற ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட அரசியல் அடையாளமோ சமூக வேட்கையோ இல்லை என்பதால் காற்றடிக்கின்ற பக்கம் போய் தூற்றிக் கொள்ளவே பெரிதும் விரும்புவர். இது இவ்வாறிருக்க, தமிழ் கட்சிகளின் நிலைப்பாடும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
குறிப்பாக அதிக வாக்குப்பலமுள்ள தனித் தமிழ் கட்சி என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தல் குறித்து அவதானமாக இருக்கின்றது. ஒருவேளை ரணில் போட்டியிட்டிருந்தால் - போர் நிறுத்த உடன்படிக்கையை கொண்டு வந்தவர் என்ற நன்றிக் கடனுக்காகவும், புலிகளின் பேச்சைக் கேட்டு முன்னைய தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்காது விட்டமைக்கு பிராயச்சித்தம் செய்யும் வகையிலும் ரணிலை ஆதரிக்கும் முடிவை த.தே.கூட்டமைப்பு எடுத்திருக்கலாம்.
ஆனால் ரணிலின் ஆதரவை பெற்ற வேட்பாளர் என்பதற்காகவும் மஹிந்தவை எதிர்க்க வேண்டும் என்ற தோரணையிலும் எடுத்த எடுப்பில் மைத்திரிபால சிறிசேனவை தமிழ் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்ற முடிவுக்கு வரும் என கூற முடியாது. ஏனென்றால் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அநியாயம் இழைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் ராஜித சேனாரட்ண, வாசுதேவ நாணயக்கார போன்றோர் குரல் கொடுத்த போதும் மைத்திரிபால அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக இருந்து கொண்டு வாயை திறக்காத ஒருவராவார்.
பொது வேட்பாளரின் பக்கம் முன்னரை விட எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்பதற்காக மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றுவிடுவார் என்ற முடிவுக்கு வரமுடியாது. உண்மையில் அரசாங்கம் எதிர்பார்த்ததை விட சவால் அதிகரித்திருக்கின்றது என்பதே உண்மை. எனவே எப்பாடுபட்டாவது, என்ன தில்லுமுல்லுகளை பண்ணியாவது வெற்றிபெறுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கும்.
கொள்கைக்காகவும் அரசாங்கத்தின் மீது கொண்ட வெறுப்பின் காரணமாகவும் மைத்திரிபால வெற்றி பெறுவார் என்பதற்காகவும் ஆளும் தரப்பில் இருந்து பலர் பொது எதிரணிப்பக்கம் வருவார்கள். அதற்கு பதிலாக பதவி ஆசை காட்டியும், செல்வங்களை வழங்கியும் எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் தம்பக்கம் இழுத்தெடுக்கும் வேலைத்திட்டத்தை ஆளும் கட்சி ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.
நீதியானதும் நேர்மையானதுமான (?) ஒரு தேர்தல் ஒன்றுக்கு முன்னர் இதுவெல்லாம் சகஜமப்பா !