ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேரறுக்க அந்நாட்டில் உள்ள எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவி செய்துவருகின்றது.
இதற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவ்வப்போது அமெரிக்காவை சேர்ந்தவர்களை பிடித்துச் செல்லும் ஐ.எஸ். தீவிரவாதிகள், அவர்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்கின்றனர்.
பின்னர், பிடிபட்டவர்களை வீடியோ கேமராவின் முன்னர் முழங்காலிட்டு அமர வைத்து, அவர்களின் தலையை துண்டிக்கும் காட்சியை தங்களது இணையதளங்களில் வெளியிடும் தீவிரவாதிகள், ‘அமெரிக்காவுக்கு எச்சரிக்கை’ என்ற தலைப்புடன் அந்த கோரப் படுகொலையை பதிவேற்றம் செய்கின்றனர்.
இப்படி பல வீடியோக்களை வெளியிட்டுள்ள அவர்கள், சிரியா போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி மற்றும் தொண்டூழியம் செய்வதற்காக பெய்ருட் நகரில் தங்கியிருந்த பீட்டர் காஸிக் என்பவரின் தலையையும் துண்டித்து, அந்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.
துண்டிக்கப்பட்ட அவரது தலையுடன் முகமூடி அணிந்த ஒரு தீவிரவாதி நின்றிருக்கும் காட்சி இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதாக பண்ணாட்டு செய்தி நிறுவனமான ‘ஏஜென்ஸி ஃபிரான்ஸ்-ப்ரெஸ்ஸி’ தெரிவித்துள்ளது.