வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுடன் இலங்கை வரும் ஒருவர் வடக்கிற்கு செல்வதானால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் இல்லை. இவ்வாறு வடக்கு செல்லும் வெளிநாட்டு பிரஜைகள் மீது புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தால் வடபகுதி பிரிதொரு நாடாக பார்க்கப்படுகின்றதாவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சபையில் கேள்வி எழுப்பியது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டமானது நடைமுறைக்கு சாத்தியமாகா முன்மொழிவுகளுடனேயே அமைந்திருக்கிறது. நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மோசடியானதொரு வரவு செலவுத் திட்டமாககவும் இது உள்ளது. முன்மொழிவுகளின் ஊடாக அரசாங்கம் மக்களின் மனங்களை குளிரச் செய்வதற்கு முயற்சிக்கிறது. நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இவ்வரவு செலவுத் திட்டத்தை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாரில்லை. ஏனெனில் இது தேர்தலை மையமாக வைத்தே தயாரிக்கப்பட்டிருக்கின்றது. முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதில் மக்களுக்கு சந்தேகம் எழத் தொடங்கி விட்டது.
அதனால் எல்லா சந்தர்ப்பத்திலுமே எல்லாரையும் ஏமாற்றி விடலாம் என்று எண்ணி விடக் கூடாது.
நடந்து முடிந்த மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் அரசாங்கத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. என்றும் இந்த வெற்றியானது அரசின் போக்கினை ஏற்றே நாட்டு மக்கள் அங்கீகாரம் வழங்கியிருக்கின்றனர் என்ற ரீதியில் ஜனாதிபதி கூறியுள்ளார். அப்படி எனில் கடந்த 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற வட மாகாண சபைத் தேர்தல் முடிவு பற்றி அவர் எதனை உணர்ந்திருக்கிறார்.
மூன்று மாகாண சபைகளிலும் வெற்றி கிடைத்திருப்பதாகவும் இதன் மூலம் 54 சதவீத வாக்குகள் அரசுக்கு கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிடுகிறார். எனினும் வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைக்கு 78.9 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆளும் கட்சிக்கு 20 சதவீத வாக்குகளுக்கும் குறைவாகவே கிடைத்தன. இதன் ஊடாக வட மாகாண சபைத் தேர்த்லை அவர் எப்படிப் பார்க்கிறார்.
தமிழ் மக்களைப் பயங்கரவாதத்திடம் இருந்து மீட்பதற்காகவே யுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. எனினும் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வட மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ்க் கூட்டமைப்புக்கே வாக்களித்தனர். அத்துடன் இல்லாது ஆளும் கட்சிக்கு தமது நிலைப்பாட்டினையும் எடுத்துக் கூறியுள்ளனர். இப்படியான நிலையில் அரசின் போக்கினைக் கண்டே மக்கள் வாக்களித்து அரசை வெற்றி பெறச் செய்தனர் என்று எவ்வாறு கூறுவது.
யுத்தம் நிறைவுக்கு வந்ததில் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமாகும். எனினும் மகிழ்ச்சியடைகின்ற மக்கள் வாழ்வதற்கு எதிர்பார்க்கும் கௌரவம் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்கள் மறுக்கப்பட்டுள்ளன. முக்கியத்துவம் மிக்க இத்தகைய பிரச்சினைக்கே இன்று தீர்வு அவசியமாகியுள்ளது.
இது இவ்வாறிருக்க மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் தாம் எத்தகைய நியாயத்தையும் காண்பதாக இல்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளார் . இருந்த போதிலும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தல் மற்றும் 13 க்கும் அப்பால் செல்வது குறித்தும் இந்திய பிரதமர் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் உட்பட சர்வதேச சமூகத்திடம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் தற்போது ஞானம் பிறத்ததைப் போன்று மாகாண சபைகளுக்கு காணி - பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் நியாயப்பூர்வ காரணங்களை கண்டறியவில்லை என ஜனாதிபதி கூறுகிறார்.
ஆதலால் ஜனாதிபதியுடன் உறுதி மொழிகளுக்கான மதிப்பு எந்தளவில் உள்ளது என்பதை உணர்வதற்கு மேற்கூறப்பட்டவை சிறந்த எடுத்தக் காட்டாகும். அந்த வகையில் அவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுவது சந்தேகமே ஆகும்.
யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி சேவை ஆரம்பக் கட்டணம் வரவேற்கக் கூடியது. அதனை நாம் வரவேற்கின்றோம். இந்த சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு நிதியுதவி அளித்த இந்தியாவையும் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். எனினும் யாழ். தேவி யாழ்ப்பாணத்திற்கு வரத் தொடங்கியதன் பின்னரே வடக்கு செல்வோருக்கான புதிய கட்டுப்பாடுகளும் வந்துள்ளன.
வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் வடக்கிற்கு செல்ல வேண்டுமானால் இரு விசா அனுமதிகளைப் பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதாவது வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் இலங்கை வருவதற்கும் வடக்கிற்கு செல்வதற்கும் என்ற ரீதியிலேயே நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
ஒருவர் வடக்கு செல்ல வேண்டுமானால் பிரிதொரு நாட்டுக்கு செல்வதைப் போன்று நடத்தப்பட வேண்டுமா என்பது எமது கேள்விகளாகும்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் ஏனைய பகுதிகளுக்கு சுதந்திரமாக செல்ல முடிகின்ற போதிலும் வட பகுதிக்கு அவ்வாறு இலகுவாக சென்று விட முடியாதுள்ளது. வடக்கிற்கான பயணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் எதனால் என்பது குறித்து அரசும் இதுவரையில் அறிவிப்புகளைச் செய்யவில்லை.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு விட்டாலும் தற்போது நாட்டில் சமாதானமும் நிலவுவதாகவும் நிதியமைச்சர் தனது வரவு செலவுத் திட்ட உரையின் போது குறிப்பிட்டிருந்தார். அவரசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் அதிலுள்ள சரத்துக்கள் பயங்கரவாத தடைச் சட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றன. இவ்வாறான நிலையில் தான் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக் கொள்ள முடியாதோரில் அநேகமானோர் தமது உறுவுகளைப் பார்ப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து வருகின்றனர். பெரும் எண்ணிக்கையிலான இரட்டைப் பிரஜாவுரிமை விண்ணபங்கள் நிலுவையில் உள்ளன. 1,300 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக அறியக் கிடைத்துள்ளது. நாம் அறிந்த வகையில் தமிழர்கள் எவருக்கும் இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவில்லை.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோரை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது வடக்கை வேறுபடுத்திப் பார்ப்பதாக உங்களுக்கு தெரியவில்லையா?
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் வடக்கில் ஆயுத செயற்பாடுகள் இருப்பதாகவும் பயங்கரவாதம் மீண்டும் உருவெடுப்பதாகவும் உள்ளதான தோற்றப்பாட்டை உருவாக்கி தேர்தலுக்காக தெற்கிலுள்ள மக்களை ஏமாற்றுவதற்கே முயற்சிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வடக்கு மக்கள் எந்தளவில் அசௌகரியங்களை அனுபவிக்கின்றனர் என்பது உணரப்பட வேண்டும். வடக்கில் உள்ளவர்களை மக்களாகவே நினைக்காத நிலை உள்ளது.
மேலும் வரவு செலவுத் திட்ட உரையின் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிமன் பெயரைக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி பேச்சுக்களில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் அழைப்பினை வரவேற்கிறோம். தமிழ் மக்களின் உண்மையான பிரநிதி யார் என்பதை தற்போது ஜனாதிபதி உணர்ந்திருக்கிறார். எமக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளதை செயலில் காட்ட வேண்டும் என்பதுடன் அரசுக்குள் உள்ள பிளவுகளை அவர் முதலில் சரி செய்ய வேண்டும்.
மேலும், சமர்ப்பிக்கப்பட்டிருப்பது வரவு செலவுத் திட்டமல்ல. அது தேர்தல் விஞ்ஞாபனாமாகவே இருக்கிறது.