தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயமானது,
மூன்று விடயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கின்றது. முதலாவது விடயம், இந்தியாவின் புதிய அரசாங்கம், இந்தியாவினால் 27 வருடங்களுக்கு முன்னர் முன்வைத்த, இலங்கையின் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் கீழ் அதிகாரங்களைப் பரவலாக்கி, சிறுபான்மை இன மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருக்கின்றது. இரண்டாவது விடயம், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டமானது, தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு முழுமையான தீர்வைத் தரப்போவதில்லை என்ற திருப்தி இல்லாத போதிலும், யுத்தத்திற்குப் பின்னர் நாளுக்கு நாள் நெருக்கடிகள் அதிகரித்து, மோசமாகிச் செல்கின்ற நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையில், சற்று அதற்கு அப்பால் செல்லத்தக்க ஒரு தீர்வை ஏற்றுக்கொள்வதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது.
மூன்றாவது விடயம், நீண்டகாலமாக, புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந் தரமாக இல்லாவிட்டாலும், தற்காலிகமாகவாவது ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்குரிய சந்தர்ப்பமும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கின்ற போதிலும், அத்தகைய தீர்வை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை.
பலராலும் வலியுறுத்தப்படுவதைப் போன்ற அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய அரசியல் தீர்வொன்றை சிறுபான்மையினருக்கு இந்த நாட்டில் வழங்கப் போவதில்லை. இன, சமூக அடையாளமற்றவர்களாக பௌத்த இலங்கையர்கள் என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் சிறுபான்மையினர் வரவேண்டும் என்ற மறைமுகமான நிகழ்ச்சி நிரலையே இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கப் போகின்றது என்ற மூன்று விடயங்கள் தெளிவாகியிருக்கின்றன.
இந்தியாவின் அண்மைய பொதுத் தேர்தலில் அந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் செல்வாக்கு மிக்க காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்தத் தேர்தலில் அங்கு ஓர் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற உறுதியான எதிர்பார்ப்பு நிலவியது.
அதற்கான அரசியல் சூழ்நிலைகள் கனிந்திருந்தமை தெளிவாகத் தெரிந்திருந்தது. ஆயினும் பாரதத் தின் பழம்பெரும் கட்சியும், வரலாற்றுப் புகழ் மிக்க பல அரசியல் தலைவர்களைக் கொண்டிருந்ததுமான காங்கிரஸ் கட்சி பல இடங்களில் கட்டுப் பணத்தை இழக்கும் அளவுக்கு இந்தத் தேர்தல் தோல்வி மோசமாகியிருந்தது.
அத்தகைய ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.க. அர சாங்கத்தின் அழைப்பையேற்று, தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் புதுடில்லி சென்றிருந்தனர். மேலோட்டமான பார்வையில் இலங்கைக் கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற ஓர் அரசியல் உறவின் பின்னணியில் – போரினால் பாதிக்கப்பட்டு போர் முடிவுக்கு வந்த பின்பும், மீட்சியின்றி தவித்துக் கொண்டிருக்கின்ற சிறுபான்மை இன மக்களின் அரசியல் தலைவர்களுடனான ஓர் அறிமுக சந்திப்புக்கான அழைப்பாக புதிய இந்திய அரசின் இந்த அழைப்பை நோக்கலாம்.
எனினும், யுத்த காலத்திலும்சரி, அதற்கு முன்னரான காலப்பகுதியிலும்சரி, யுத்தம் முடிவடைந்த பின்னரும்சரி, இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் - ஓர் இரண்டறக் கலந்த நிலைமையிலான கொள்கையைக் கொண்டுள்ள இந்தியாவின் புதிய அரசாங்கத்தினருக்கு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சந்திக்க வேண்டிய ஓர் அரசியல் தேவை இருக்கின்றது.
அதற்காகவே கூட்டமைப்பைச் சந்திப்பதற்கு புதுடில்லி அழைப்பு விடுத்திருந்தது என்று கருதுவதிலும் தவறிருக்க முடியாது. இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா நீண்டகாலமாகவே ஈடுபாடு காட்டி வந்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் அது நேரடியாகவும், மறைமுகமாகவும் இனப்பிரச்சினை விவகாரத்தில் தலையிட்டுச் செயற்பட்டிருக்கின்றது.
குறிப்பாகச் சொல்லப்போனால், கறுப்பு ஜுலை கலவரம் என்றழைக்கப்படுகின்ற 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது இந்தியா நேரடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை, இலங்கையின் பாரம்பரிய தமிழ்ப்பிரதேசமாகிய யாழ்ப்பாணத்திற்கும், தனது மாநிலங்களில் ஒன்றாகிய தமிழ்நாட்டுக்கும், அபயமளிப்பதற்காகக் கப்பல்கள் மூலமாக அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளையேற்று இந்தியா அப்போது இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. கறுப்பு ஜுலை கலவரத்தின் மோசமான (மிருகத்தனமானது என்று கூட வர்ணிக்கப்படுகின்றது) நிலைமையை உணர்ந்தும், பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலான வேண்டுகோளை ஏற்றும் அப்போதைய இந்திய அரசு தானாகவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவ முன்வந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து இலங்கைக் குடிமக்களின் ஒருசாராராகிய தமிழ் மக்களின் சார்பில் இலங்கை அரசாங்கத்துடன், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் ஓர் ஒப்பந்தத்தையே செய்திருந்தது. இலங்கை இந்திய ஒப்பந்தம் என்று வரலாற்றில் கொட்டை எழுத்துக்களில் பதிவாகியுள்ள அந்த ஒப்பந்தத்தின் விளைவாகவே, இலங்கையின் அரசியலமைப்பில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்ற மிகவும் முக்கியமான ஒரு திருத்தச் சட்டமே கொண்டு வரப்பட்டது.
கடந்த 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையடுத்து, ஏற்படுத்தப்பட்ட அந்த 13 ஆவது அரசி யலமைப்புத் திருத்தச் சட்டம் பற்றி, ஒரு கால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலமாகிய இப்போதும் காரசாரமாக விவாதிக்கப்படுகின்றது. இலங்கை அரசியலமைப்பை பொறுத்தமட்டில் தொண்டையில் சிக்கிய ஒரு முள்ளாகவே பேரினவாதிகளுக்கு இந்த 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் இப்போதும் அமைந்திருக்கின்றது.
எனவே, இத்தகைய ஒரு பலமான அரசியல் பின்னணியில், இந்தியாவில் புதிதாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள பா.ஜ.க. அரசாங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப் பினரை அழைத்து பேச்சுக்களை நடத்தியிருப்பதில் வியப்பதற்கோ, கோபதாபப்படுவதற்கோ ஒன்றுமில்லை என்றுதான் கூற வேண்டும்.
ஆனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கு விடுக்கப்பட்ட இந்தியாவின் இந்த அழைப்பு இலங்கை அரசாங்க த்தைச் சீற்றமடையச் செய்திருக்கின்றது. குறிப்பாக இலங்கைஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மிகவும் அப்செட் ஆகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்திய அரசுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு -பேச்சுவார்த்தைகள் குறித்து தானாகவே கருத்து வெளியிட்டுள்ளார்.
'சம்பந்தனும், அவருடைய கட்சியினரும் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடம் வரவேண்டும். என்னிடம் வராவிட்டால் அவர்களால் தீர்வுகள் குறித்து பேச முடியாது' என்று அவர் கூறியுள்ளார். இந்தக் கருத்தை அவர் நேரடியாகக் கூறாமல், தனது தூதுவர் ஒருவரின் ஊடாகவே தெரிவித்திருக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தியாவுக்குச் சென்று பேச்சுக்கள் நடத்துவதனால் பயனில்லை. என்னிடம்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி பேசவேண்டும். பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமானால், என்னிடமே வரவேண்டும். நான் கூறுகின்றபடி செய்ய வேண்டும். நடந்து கொள்ள வேண்டும் என்ற அதிகாரத் தோரணை அவருடைய கருத்தில் தொக்கி நிற்கின்றது.
அவருடைய இந்தக் கூற்று ஒரு வகையில் - நிறைவேற்று அதிகாரத்தையும். பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தையும் கொண்டிருப்பதுடன் மட்டுமல்லாமல், உலகத்திற்கே முன்னோடியாக விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடித்து வெல்ல முடியாத ஒரு யுத்தத்தில் வெற்றி வாகை சூடி, அசைக்க முடியாத ஓர் இராணுவ பலத் தைக் கொண்டுள்ள தன்னையும் மீறி, வெளிச் சக்தி ஒன்றிடம் கூட்டமைப்பினர் துணிந்து சென்றிருக்கின்றார்களே என்ற ஆற்றாமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதைக் காண முடிகின்றது.
அது மட்டுமல்லாமல், தன்னைக் கேளா மல், தன்னுடைய அனுமதியைப் பெறாமல் அல்லது இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற காரணத்தினால், பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறாமல் விட்டேற்றியாகச் சென்று இந்திய அரசுடன் பேச்சுக்கள் நடத்தியிருக்கின்றார்களே என்ற அரசியல் ரீதியான எரிச்சலும், சலிப்பும் அவருடைய கூற்றில் வெளிப்பட்டிருப்பதையும் உணர முடிகின்றது.
இந்த உணர்வு வெளிப்பாடானது, ஒரு வகையில் அரசியல் கோமாளித்தனமாகவே அரசியல் விமர்சகர்களினால் நோக்கப்படுகின்றது. நிறைவேற்று அதிகாரம் உட்பட ஜனநாயக ரீதியான பெரும்பான்மை பலம் உட்பட வலுவான அரசியல் அதிகாரங்களைக் கொண்டுள்ள ஒரு நிலையில் இனப்பி ரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, ஆக்க பூர்வமான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல், அதனைப் பின்போட்டு, தட்டிக்கழிப்பதற்கே ஜனாதிபதியும், அவருடைய தலைமையிலான இலங்கை அர சாங்கமும் முயன்று வருகின்றன.
அது மட்டுமல்லாமல், பூனைக்கு விளையாட்டு, எலிக்கு சீவன் போகின்றது என்றதுபோல, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தையும், அங்குள்ள மக்களின் வாழ்க்கை யையும் மறுசீரமைப்பதற்கு நேர்மையாகவும், இதயசுத்தியுடனும் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, இந்த அரசாங்கம் அந்தப் பிரதேசத்தை முழுமையாக இராணுவ மயமாக்கி, ஓர் இரும்புப் பிடிக்குள் மக்களை ஆழ்த்தி வைத்திருக்கின்றது.
சுதந்திரமான சிவில் நடவடிக்கைகளுக்கும் சிவில் நிர்வாகத்திற்கும் இடமளிக்காமல், இராணுவ மேலாதிக்க நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் அங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. யுத்தத்திற்குப் பின்னரான கடந்த ஐந்து வருடங்களும் அரசாங்கத்தின் இந்த முயற்சியையும், செயற்பாடுகளையும் மிகத் தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றன.
இந்த நிலைமையில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினையினால் பாதிக்கப்பட்டு, பின்னர் மோசமான ஒரு யுத்தப்பாதிப்புக்கு ஆளாகி, வாழ்க்கையின் விளிம்பில் வந்து நிற்கின்ற ஒரு சமூகமும், அதன் தலைவர்களும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு சொந்த நாட்டில் நம்பிக்கை மிகுந்த வழியைக் காணாவிட்டால், சந்தர்ப்பம் கிடைக்கின்ற இடங்களை நோக்கி, வாய்ப்புக்களை நோக்கிச் செல்லாமல் வேறு என்ன செய்வார்கள்?
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும். அங்கு வராவிட்டால் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என்று அரசு பிடிவாதமாக இருக்கின்றது. இந்தத் தெரிவுக்குழுவின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பி க்கையைத் தமிழர் தரப்பினருக்கு அரசாங்கத்தினால் ஏற்படுத்த முடியவில்லை.
அந்தத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கமும், அதன் அமைச்சர்களும், அர சின் பங்காளிக் கட்சிகளும் தொடர்ச்சியாகக் கூறி வருகின்ற கருத்துக்கள் தமிழர் தரப்பைப் பொறுத்தமட்டில், தமிழ் மக்களையும் அவர்களின் அரசியல் தலைவர்களையும், அரசியல் தீர்வுக்குரிய இணக்கப்பாட்டிற்கான ஒரு களமாக அல்லாமல், ஓர் அரசியல் பொறியாகவே நோக்கச் செய்திருக்கின்றது.
இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வைக் காண்கின்ற வல்லமையையும் வாய்ப்பையும் இலங்கை அரசாங்கமே கொண் டிருக்கின்றது. இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால், அந்த அரசியல் வல்லமையையும் வாய்ப்பையும் சரியான முறையில் பயன்படுத்தி நாட்டில் நிரந்தர அமைதியையும் சுபிட்சத்தையும் ஏற்படுத்துவதற்கு முயற்சிக்காமல், சிறுபான்மை இன மக்கள் பால், அரசு முரட்டுத் தனமான அரசியல் நடத்துவதாகவே விமர்சகர்களும், வெளியாரும் நோக்குகின்றார்கள். இதனை அவர்கள் கோமாளித்தனமான அரசியலாகப் பார்க்கின்றார்கள்.
ஆனால், பேரினவாத சிந்தனையில் மூழ்கியுள்ள இலங்கை அரசாங்கம் ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற தாரக மந்திரத்தின் கீழ், ஒற்றை யாட்சி கொண்ட, ஓரின மக்கள் வாழ்கின்ற நாடாக இந்த நாட்டை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டு வருகின்றது.
பல்லின மக்களையும் பல சமூகங்களையும் இந்த நாடு கொண்டிருக்கின்ற போதி லும், பேரின மக்களாகிய பௌத்தத்தைப் பின்பற்றுகின்ற சிங்கள மக்களுக்கே அனைத்திலும் முன்னுரிமை, ஏனையோரையும் பௌத்தர்களாக்கி, இந்த நாட்டை ஓரினம் ஒரு சமூகம் கொண்ட நாடாக உருவாக்கிவிட வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் காரியங்களையே முன்னெடுத்து வருகின்றது.
யுத்தத்தின் பின்னர், யுத்தத்தினால் பாதிக் கப்பட்ட பிரதேசங்களில் மீள்குடியேற்றம் மற்றும் புனர்நிர்மாணம், புனர்வாழ்வு, மீள்கட்டமைப்பு போன்ற நடவடிக்கைகளின் கீழ், தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில், சிங்கள மக்களையும் சிங்களவர்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட இராணுவத்தினரையும் அந்தப் பகுதிகளில் வலிந்து நிரந்தரமாகக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
சிங்கள, தமிழ், முஸ்லிம் என்று மூவின மக்களும் நாடு முழுவதும் பரந்து கலந்து வாழ வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக இருக்கின்றது. இதன் மூலம் இனம் மற்றும் சமூக ரீதியான பாரம்பரிய பிரதேசம், பாரம்பரிய தாயகப் பிரதேசம் என்ற – தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தாயகப் பிரதேசங்களை அடியோடு இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன.
யுத்தம் நடைபெற்ற வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலும், இனக்குழுமங்கள் அல்லது சமூகமாக தமிழ் மற்றும் முஸ்லிம் சிறு பான்மை இன மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களில், இடங்களில் பெரும்பான்மை இன மக்களைக் குடியேற்றுவதையும், அந்தப் பகுதிகளில் சிங்கள மக்களைத் தொழில் செய்வதற்கு ஊக்குவிப்பதையும் தெளிவாகக் காணலாம்.
அதேநேரத்தில் அந்தப் பகுதிக ளில் பௌத்த மதத்தை நிலை நிறுத்துவத ற்காக, பௌத்தர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்தப் பகுதிகளில் ஏனைய மதம் சார்ந்த வணக்கத்தலங்கள் இருக்கின்ற இடங்களிலும், வசதியான ஏனைய இடங்களிலும் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டிருப்பதையும், அமைக்கப்படுவதையும் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டிருப்பதையும், நிறுவப்படுவதையும் தாராளமாகக் காணலாம்.
இந்தப் பின்னணியிலேயே, இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசாங்கம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை அழைத்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றது. இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படு த்தப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அடித்தளமாகக் கொண்டு, அதிகாரங்க ளைப் பரவலாக்கி, அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டும் என்று இந்திய அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வடமா காண சபையின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள போதிலும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நல்வாழ்வுக்கான நட வடிக்கைகளை அதிகாரபூர்வமாக மேற்கொள்ள முடியாமல் அதிகாரமற்ற சபையாக அதனைத் தொடர்ந்து கொண்டு நடத்த முடியாது.
ஆகவே, 13 ஆம் திருத்தச் சட்டத்திற்க மைவாக அதற்கு அப்பால் சென்று ஒரு தீர்வைக் காண்பதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும், உதவ வேண்டும் என கோரியிருக்கின்றனர். இதன் மூலம் சமத்துவம் மிக்க அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய தமிழர் தாயகப் பிரதேசங்களை நிர்வகிக்கத்தக்க, நிரந்தர மான ஓர் அரசியல் தீர்வை அடைவதற்கு ஓர் ஆரம்ப நடவடிக்கையாக அல்லது ஓர் இடைக்கால தீர்வாக 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் ஒரு தீர்வைக் காண்பதற்கு அவர்கள் முயற்சித்திருக்கின்றார்கள்.
விடாக்கண்டன் கொடாக்கண்டன் என்ற ஓர் அரசியல் நிலைப்பாடு நிலவுகின்ற இலங்கையில், இந்தியாவின் புதிய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு எந்த வகையில் தீர்வைக் காணப் போகின்றது என்பதையும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடம் புதுடில்லி வெளிப்படுத்தியுள்ள இலங்கை தொடர்பான அரசியல் நிலைப்பாட்டை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப் போகின்றது என்பதை யும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.