இந்தியத் தலைநகர் புதுடில்லியில் மோடியுடன் சந்திப்புக்களை
முடித்துக் கொண்டு, நாடு திரும்பத் திட்டமிட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறுவர் குழு, தமது பயணத் திட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளது.அவர்களில் மூவர் தமிழகத்துக்கு திடீர் பயணத்தை மேற்கொள்ள, ஏனைய மூவரும் நாடு திரும்பியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே தமிழகத்துக்குப் பயணமாகியுள்ளனர்.
ஏனைய மூவரும் நேற்றிரவு நாடு திரும்பினர். தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுடன் சந்திப்பு மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் காணப்பட்டதை அடுத்தே தமிழ்க் கூட்டமைப்புக் குழு தமிழகத்துக்குப் பறந்துள்ளது. இந்திய அரசின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு மூன்று நாள் பயணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சென்றிருந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, க.சுரேஷ்பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராஜா ஆகியோர் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
கடந்த வியாழக்கிழமை இந்தியாவைச் சென்றடைந்த குழுவினர், வெள்ளி, சனி இரு தினங்களிலும் சந்திப்புக்களை நடத்தினர். இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர், இந்திய வெளிவிவகார அமைச்சர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்தியாவின் முன்னாள் பிரதமர், இந்தியாவின் தற்போதைய பிரதமர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.
அதனையடுத்து நேற்று இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்த்து எஞ்சிய 4 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடு திரும்புவர் என்று திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அவர்களது பயணத் திட்டம் திடீரென மாற்றப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் அறுவர் அணியில் மூவர் தமிழகத்துக்கு நேற்றுப் பயணமாகியுள்ளனர்.
தமிழகத்தில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழக அரசியல் தலைவர்களை கூட்டமைப்பினர் சந்திக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவையும் சந்திப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளது என்றும் கூறப்படுகின்றது.
இருப்பினும் இது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. தமிழகத்துக்குப் பயணமாகியவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதியே கூட்டமைப்பின் தலைவர்கள் நாடு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.