ஈழ இறுதிப் போரின்போது, மக்களுக்கும் புலிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிற்று. அவர்களும் மக்களோடு மக்களாக நின்றார்கள். கிளிநொச்சியில் வீட்டுக்கு ஒருவரை கேட்டு வாங்கிய இயக்கம், இறுதிப் போரின்போது கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டது. அதில் யாருக்கும் எந்த விதிவிலக்கும் இல்லை.
தலைவர், தன் பிள்ளைகளைக் களமுனையில் நிறுத்தினார். தளபதிகள், தங்கள் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பினார்கள். ஆனால், இலங்கை இராணுவம் சுற்றி வளைத்தபோது அந்தக் கட்டாய ஆள்சேர்ப்பும்கூட பயன்படவில்லை
ஈரமற்ற குரலில் உருக்கமாகப் பேசுகிறார் தமிழ்க் கவி.
இவரின் 'ஊழிக்காலம்’ நாவல், ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் துயரங்களை 'கண் முன் சாட்சி’யாகப் பதிவு செய்திருக்கிறது. இவர், விடுதலைப் புலிகளின் மூத்த பெண் போராளி. ஈழத்தில், இவரை 'தமிழ்க் கவி அக்கா’ என்று அழைத்தார்கள்.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் மருத்துவத் தாதியாகவும், புலிகளின் குரல் வானொலி மற்றும் தமிழ்த் தேசிய தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணி செய்தவர் தமிழ்க் கவி. பேட்டிக்கான வடிவமாக இல்லாமல் நினைவின்போக்கில் பேசினார்.
முள்ளிவாய்க்காலிலேயே முடிந்துபோக வேண்டிய வாழ்வு, நகர்ந்து வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மாவிலாறில் தொடங்கி வட்டுவாகலில் முடிந்த பேரழிவுப் போரின் சாட்சி நான். எங்கள் பயணம், நாங்கள் கைவிட்ட நம்பிக்கைகள், மரணங்கள், கனவுகள், இழப்புகள்... என ஈழத் தமிழ் சமூகம் எப்படி இறுதிப் போரை எதிர்கொண்டது என்று நாவலில் எழுதியிருக்கிறேன். நாவலில் வரும் அந்தப் 'பார்வதி’ நான்தான்.
நான் பிறந்து வளர்ந்தது வவுனியாவில். கதை, கவிதை, நாடகங்கள் எழுதுவேன் என்பதால், புலிகள் என்னை நாடகம் போடச் சொல்வார்கள். நானும் கிராமங்களில் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி நாடகங்களை நடத்தினேன். என் கடைசி மகன் சிவகாந்தன், புலிகள் அமைப்பில் தன்னை விரும்பி இணைத்துக்கொண்டான். இயக்கம் அவனுக்கு 'சித்திரன்’ என்று பெயர் வைத்தது.
91-ம் ஆண்டு நடந்த ஆனையிறவுச் சமரில் அவன் வீரச்சாவை அடைந்தான். தம்பி, வீரச் சாவடைந்ததும் அவனது அண்ணனும் 'அமைப்புக்குச் செல்கிறேன்’ என்று சொன்னபோது, நான் தடுக்கவில்லை. அவன் புலிகள் இயக்கத்தில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் போதே, விமானத் தாக்குதலில் இறந்தான். என் இரு பிள்ளைகளின் உடல்களையும் நான் காணவில்லை.
குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள வன்னிக்குச் சென்று நானே விரும்பி புலிகள் அமைப்பில் இணைந்து, ஒட்டுமொத்தமாக என் குடும்பத்தையே ஈழப் போராட்டத்துக்குக் கொடுத்தேன். காரணம், புலிகளின் கண்ணியம், நேர்மை, அர்ப்பணிப்பு. இரு மகன்களை இழந்த பின்னரும் அமைப்பின் மீதும், போராட்டத்தின் மீதும் நான் காட்டிய ஆர்வத்தைக் கண்ட தலைவர் பிரபாகரன், நேரடியாகவே என்னை அழைத்து ஊடகப் பணிகளை வழங்கி ஊக்குவித்தார்.
வாழ்க்கை எப்போதுமே எங்களுக்கு வசந்தமாக இருக்கவில்லை. ஒரு தீப்பெட்டி 10 ரூபாய், மண்ணெண்ணெய் 150 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை, பெட்ரோல் ஒரு லிட்டர் 1,500 ரூபாய். 10 தீப்பெட்டிகளின் மருந்தை எடுத்தால் ஒரு நாட்டு வெடிகுண்டைத் தயாரிக்க முடியும் என்பதால், ஏராளமான தீப்பெட்டிகள் கடத்தலில் வரும். மற்றபடி போர்க்காலமாக இருந்தாலும் சமாதானக் காலமாக இருந்தாலும், மின்சாரம், மருத்துவப் பொருள்கள் என எதுவுமே மக்களுக்கு இருந்தது இல்லை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் விறகுக் கட்டைகளும், 'டிரெஞ்ச்’ எனப்படும் பதுங்குகுழிகளும்தான். இப்படித்தான் 2008-ம் ஆண்டு வரை வாழ்க்கை ஓடியது.
ஆனால், அப்போதெல்லாம் 'நாங்கள் விழ மாட்டோம்’ என்ற நம்பிக்கை இருந்தது. இலங்கை இராணுவம் பல வருடம் போராடிப் பிடித்த இடங்களைக் கூட, எங்கள் பொடியள் சில நாள் சண்டையில் மீட்டிருக்கிறோம் எனும்போது அந்த நம்பிக்கை இயல்புதானே! மீண்டும் இந்த நகரத்துக்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையில்தான், தங்கள் வீடுகளின் கதவு ஜன்னல்களைக்கூட மக்கள் கழற்றிக்கொண்டு போனார்கள். ஆனால், 2008-க்குப் பிறகு நிலைமை தலைகீழ்!
மாவிலாறில் தொடங்கிய போர், சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக நடந்து முள்ளிவாய்க்காலில் முடியும் வரை எங்குமே புலிகளை இராணுவமும் பார்க்கவில்லை, இராணுவத்தைப் புலிகளும் பார்க்கவில்லை. அந்தப் போர் முறையே புதிதாக இருந்தது. நான்கைந்து மைல்களுக்கு அப்பால் இருந்து எறிகணை களை வீசி நிர்மூலமாக்கித் துடைத்து அழித்துவிட்டுத் தான் இராணுவம் வரும்.
கிளிநொச்சி இராணுவத்திடம் விழுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, மக்கள் கிளிநொச்சியைக் காலி செய்துவிட்டு வட்டக்கச்சி, தருமபுரம் விசுவமடு நோக்கி நகர்ந்து விட்டார்கள். மக்கள் இல்லாத கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றியது. பல திசைகளில் இருந்தும் வந்த மக்கள் அக்கராயன் சந்தியில் கூடியபோது சுமார் மூன்று லட்சம் மக்கள் மிகச் செறிவாக இருந்தனர்.
தேவிபுரத்தில் இருந்தபோது வீசப்படுகிற ஒவ்வொரு ஷெல்லும் பழுதில்லாமல் யாரோ ஒருவரைப் பதம் பார்த்தது. மக்கள் நம்பிக்கையோடு கொண்டுவந்த வீட்டுக் கதவுகளையும் ஜன்னல்களையும் முதலில் கைவிட்டார்கள். அது, திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையையும், கனவையும், ஆசைகளையும் கைவிடுவதாக இருந்தது.
பதுங்குகுழி பங்கர்களை, மூன்று அடிக்கு மேல் ஆழமாகத் தோண்ட முடியாது. கீழே தண்ணீர் வரும். தோண்டிய பங்கருக்குள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, என் எதிர் பங்கருக்குள் அமர்ந்து பிள்ளைக்குப் பால் கொடுத்தபடியே பேசிக்கொண்டிருந்த ஓர் இளம் தாய் அப்படியே சாய்ந்தாள். இடுப்புக்குக் கீழே அவளுக்கு எதுவுமே இல்லை.
முலைக்காம்பில் வாய் வைத்தபடியே சிதறி விழுந்தது குழந்தை. பொக்கணை எனும் குறுகலான இடத்தில் நிலைமை இன்னும் மோசம். வாழ்ந்த இடம் மயானமாக மாறியது என்று சொல்வதா? அல்லது மயானத்தில் வாழ்ந்தோம் என்று சொல்வதா? அங்கேயே பல நாட்களைக் கழித்தோம்!'' - சின்ன இடைவெளி கொடுத்துத் தொடர்கிறார் தமிழ்க் கவி.
கரையான் முள்ளிவாய்க்காலில் யுத்த முனையில் பொட்டம்மானின் மகன் கயல்கண்ணன் இருந்தார். ஒரு பங்கருக்குள் இருந்தபோது ஷெல் தாக்குதலில் அப்படியே இறந்துபோனார். இறந்துபோன பிணங்களைக்கூட யாரும் எடுத்து அடக்கம் செய்யவில்லை. மகளின் பிணத்தை தாய் கடந்து செல்கிறாள். தாயின் பிணத்தை மகள் கடந்து செல்கிறாள்.
பொட்டம்மான் மகன் அங்கு இறந்த பிறகு அவரின் குடும்பத்தை நான் காணவில்லை. ஆனால், தலைவர் பிரபாகரன், தளபதி சூசை போன்றோர் எங்கும் தப்பிச் செல்ல முயலவில்லை. அவர்கள் இறுதி வரை மக்களோடு மக்களாகவே இருந்தனர்.
ஒருநாள் பிரபாகரன் முக்கியமான தளபதிகளை அழைத்து, 'நம்பிக்கையோடு இருப்போம். சர்வதேசமும் சேர்ந்து நம்மை நசுக்குகிறது. நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள். மக்களுக்கு நம்பிக்கையை விதையுங்கள். அவநம்பிக்கை ஏற்படும் வகையில், மக்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார்!
இறுதிக் கணம் வரை புலிகளிடம் மிகப் பெரிய ஆள் பலம் இருந்தது. ஆனால், போராட ஆயுதங்கள் இல்லை. கடற்புலிகள் பலம் இழந்தார்கள். புலிகளின் மோட்டார் படையணி முற்றிலும் அழிந்து போனது. குவித்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் இராணுவத்தின் வான்வழிப் போருக்கு முன் எடுபடாமல் போயின. அந்த ஆயுதக்கிடங்குகளை வெடி வைத்துத் தகர்த்து, அதனுள் இருந்து உயிரை மாய்த்துக்கொண்ட போராளிக் குடும்பங்கள் உண்டு.
ஆயுதங்களை மௌனமாக்க வேண்டிய அவசியமே புலிகளுக்கு இல்லை. அவை, பல நாட்களுக்கு முன்பே மௌனமாகிவிட்டன. அவர்களுக்கு வந்து சேரவேண்டிய ஆயுதங்களும் வரவில்லை. ஒருகட்டத்தில் தன் வலுவை இழந்த புலிகள், மக்களை அவர்களின் விருப்பங்களுக்கே விட்டனர். மக்களுக்கு என்ன விருப்பம் இருக்க முடியும்? சரணடையலாம்... இல்லாவிட்டால், மெதுவாக நடந்து போகலாம். எங்கு போவது வீட்டுக்கா? என்ன செய்வது... தலைகுனிந்தபடியே கூட்டம் கூட்டமாக நடந்தோம்.
நான் ஓமந்தை இராணுவச் சாவடியில் பிடிபட்டேன். என்னுடன் ஏராளமான மக்களும் இருந்தார்கள். முதலில் ஒரு முகாமுக்குக் கொண்டு சென்றார்கள். 22 நாட்களுக்குப் பிறகு இன்னொரு முகாமுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கிருந்து பலரும் பிரிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்கள். பின்னர் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
நானும் பல பெண் போராளிகளும் விடுவிக்கப்பட்டோம். எங்களை தமிழ்ச் சமூகம் கண்டுகொள்ளவில்லை. புனர்வாழ்வு என்று சொன்ன அரசும் கண்டு கொள்ளவில்லை. எங்களைக்கொண்டே எங்கள் மக்களுக்கு எதிரானப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இதுதான் நிலை. இப்போது நாங்கள் மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படித்தானே வாழ முடியும்?