உள்நாட்டு அரசியல் நகர்வுகள் மற்றும்
காய்நகர்த்தல்களில் அடிக்கடி தளம்பல் நிலைமைகள் ஏற்படுவது வழமையாகும். அரசியல் கட்சிகளினதும் கட்சிகளின் முக்கியஸ்தர்களினதும் நிலைப்பாடுகள் அவ்வப்போது அரசியல் களநிலைவரங்களுக்கு ஏற்ப மாறுபடுவதுண்டு.பல்வேறு சமூகங்களில் ஏற்படுகின்ற புதிய நிலைமைகள் அல்லது பழைய விடயங்கள் மீண்டு வருகின்ற காரணங்களினால் அரசியல் சூழல்களில் அவ்வப்போது மாறுதல்களும் கூட்டுச்சேரும் நிலைமைகளும் உருவாகிவிடும். அந்தவகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வாரா? அல்லது மு.கா. அரசாங்கத்தைவிட்டு வெளியேறுமா என்பதே இவ்வாரம் முழுவதும் அதிகமானோரால் பேசப்பட்ட விடயமாகவுள்ளது.
அளுத்கம, பேருவளை மற்றும் தர்காநகர் ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட அசம்பாவிதங்களையடுத்து அமைச்சர் ஹக்கீம் அரசாங்கத்தைவிட்டு விலகிவிடப்போகின்றார் என்றும் இதன்மூலம் தனது அதிருப்தியை வெளியிடப்போகின்றார் என்றும் பரவலாகப் பேசப்பட்டது. இல்லை எதிர்பார்க்கப்பட்டது என்றே கூறலாம்.
இல்லாவிடின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தில் நீடிக்கின்ற நிலையில் அமைச்சர் ஹக்கீம் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து தனது எதிர்ப்பை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த கேள்விகளுக்கான பதில்கள் பழைய பல்லவியை போன்றே பாடப்பட்டது என்று கூறலாம்.
அரசாங்கத்தை அசெளகரியப்படுத்தும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லை என்றும் அமைச்சர் என்ற அந்தஸ்தில் இருந்துகொண்டு முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தன்னை அர்ப்பணிக்கப்போவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பகிரங்கமாக கூறியதிலிருந்து அவர் அமைச்சுப் பதவியிலிருந்து விலகமாட்டார் என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.
அமைச்சுப் பதவி விலகல் விவகாரம் குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் ஹக்கீம் ''அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கின்றேன் என்பதற்காக அனைத்துக்கும் தலையாட்டி பொம்மையாக நான் இருக்கவில்லை. இரண்டு தடவைகள் அமைச்சுப் பதவியை உதறித் தள்ளிய வரலாறு எனக்கு உள்ளது. அமைச்சரவையில் யாரும் அவ்வாறு செய்ததில்லை.
நான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதனால் பிரச்சினை தீரும் என்றால் அதற்கு நான் தயாராக இருக்கின்றேன். ஆனால் தற்போதைய நிலைமையில் இந்த அமைச்சுப் பதவியிலிருந்து கொண்டு அந்த அந்தஸ்துடன் எனது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விழைகின்றேன்'' என்று சற்று காட்டமாகவே கூறியிருந்தார்.
இந்நிலையில் நாட்டின் தற்போதைய ஏழாவது பாராளுமன்றத்தில் 160 ஆசனங்களுடன் வலம்வருகின்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தில் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெறுமனே இணைந்துவிடவில்லை. 2010 ஆம் ஆண்டில் அரசாங்கத்துக்கு 18 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான பாரிய தேவை காணப்பட்டது.
அந்தவகையில் 2010 ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சியுடன் இணைந்தது. கடந்த 2010 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. இந்நிலையில் தேர்தல் மூலமாக 6 ஆசனங்களும், ஐ.தே.க வின் தேசிய பட்டியலில் மு.கா.வுக்கு ஒதுக்கப்பட்ட 2 ஆசனங்களுமாக 8 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தேர்தல் முடிந்து சிறிது காலத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்டது.
கடந்த 2010 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான தேவை காணப்பட்டது. அதற்கு அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் அவசியமானது. இதன் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்து அமைச்சுப் பதவிகளை பெற்றது.
அதன் மூலம் அரசாங்கம் கொண்டுவந்த அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கியது. அதாவது 18 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச் சட்டம் செயலிழக்கின்றது என்று தெரிந்தும் அதன் மூலம் பல்வேறு அதிகாரங்கள் அற்றுப்போகின்றன என்று தெரிந்தும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து 18 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது.
அப்போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இந்த தீர்மானம் பல்வேறு விமர்சனங்களுக்கு உட்பட்டது. எனினும் கட்சியை பாதுகாப்பதற்காக இவ்வாறானதொரு முடிவை எடுக்க நேர்ந்ததாக அக்கட்சியின் தலைமை அப்போது அறிவித்தது.
அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 132,917 வாக்குகளை பெற்று 07 ஆசனங்களை பெற்றுக்கொண்டது. அந்தத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 4 ஆசனங்களையும் பெற்றிருந்தன.
நாட்டின் அரசியல் சூழ்நிலையில் தீர்க்கமான கட்டமாக பார்க்கப்பட்ட அந்தக் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்திருந்தால் கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைத்திருக்கலாம் என்றிருந்தது. ஐ.தே.கவும் த.தே.கூட்டமைப்பு ஒன்றினைய முடிவுசெய்து முதலமைச்சர் பதவியை மு.கா.விடம் ஒப்படைப்பதாகவும் கூறி அழைப்புவிடுத்தன.
இருந்தாலும் மு.கா அதனை பரிசீலித்த பின்னர் நிராகரித்துவிட்டது. நாட்டின் அரசியலில் புதிய நகர்வுகளும் திருப்பங்களும் இதன்மூலம் ஏற்பட்டிருக்கும். ஆனால் 14 ஆசனங்களை பெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துகொண்டது முஸ்லிம் காங்கிரஸ். தேசிய சுதந்திர முன்னணியின் ஒரு ஆசனத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கில் ஆட்சியமைத்தது.
அந்த சந்தர்ப்பத்திலும் சிறந்த வாய்ப்பை முஸ்லிம் காங்கிரஸ் இழந்ததாகவே விமர்சிக்கப்பட்டது. கடும் விமர்சனங்கள் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நோக்கி சென்றிருந்தன. அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் ஹக்கீம், 2012 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் இணைந்து கிழக்கில் ஆட்சியமைத்திருந்தால் அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியிருக்காது என்று வியாக்கியானம் செய்திருந்தார்.
இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற காலப்பகுதியிலேயே அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்தின் மீதான தொடர்ச்சியான அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. தம்புள்ளை பள்ளிவாசலிலிருந்து தற்போதைய அளுத்கம கலவரம் வரை அவற்றைக் கூற முடியும். அந்தவகையில் தற்போது ஏதாவதொரு பிரதான தேசிய மட்ட தேர்தல் நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்புக்கள் ஏற்பட்டுள்ளதன் பின்னணியிலும் அளுத்கம விவகாரம் காரணமாகவும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் அரசாங்கத்தில் நீடிக்கவேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதாவது அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கின்ற நிலையிலும் முஸ்லிம் சமூகத்துக்கு பிரச்சினைகள் ஏற்படுமாயின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசில் அங்கம் வகிப்பதில் என்ன பயன் என்பதே எழுப்பப்படுகின்ற கேள்வியாகும். இந்த அரசாங்கத்தில் நீதியமைச்சராக இருப்பதற்கு வெட்கமடைவதாக கூறும் அமைச்சர் ஹக்கீம் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு பாரிய தயக்கம் ஒன்றை காட்டிவருகின்றார்.
இது குறித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் ஹக்கீம் ''ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கின்ற நான் இந்த நாட்டின் நீதியமைச்சராக பதவி வகிப்பது தொடர்பில் வெட்கமடைகின்றேன். மக்களின் விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் என்னால் பதிலளிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் நான் இருக்கின்றேன்.
அந்தவகையில் எமது கட்சியானது அவசரமான அரசியல் தீர்மானம் ஒன்றை எடுப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. அவ்வாறு அரசியல் தீர்மானம் எடுக்கும் உரிமையை கட்சியின் அதியுயர் பீடம் எனக்கு வழங்கியுள்ளது'' என்று குறிப்பிட்டிருந்தார். இது இவ்வாறு இருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளைப்போன்ற நகர்வுகளை பின்பற்றுவது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை ஆராய்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய அரசியல் நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறைகளை பின்பற்றுவது குறித்து ஆராய்ந்துவருவதாகவும் அதன் வழியில் செயற்படுவது தொடர்பில் சிந்திப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை அண்மையில் தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கான அணுகுமுறைகள் இடம்பெறுவதாக தெரியவில்லை.
அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக ஆளும் கட்சியிலேயே நீடித்துவருவதையே விரும்புவதாக உணரப்படுகின்றது. எனினும் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் ஹக்கீம் ''முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு தொடர்பில் நாங்கள் தனித்துவமாக சிந்திக்கவேண்டியுள்ளது.
கொள்கை ரீதியாக எமக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒற்றுமையுள்ளது. எதிர்காலத்தில் நாங்களும் கூட்டமைப்பினரும் பல விடயங்களில் இணைந்து செயற்படும் நிலைமை உருவாகும்'' என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கலந்துகொண்டிருந்த ஒரு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் ஹக்கீம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்ட விவகாரத்தில் அதிகாரங்களைக் குறைக்கக்கூடிய வகையில் திருத்தங்கள் வரக்கூடாது என்பதில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உறுதியாகவே இருக்கின்றார். 13 ஆவது திருத்தச் சட்டத்தில் கைவைக்கக்கூடாது என்று அமைச்சரவையில் பல தடவைகள் அமைச்சர் ஹக்கீம் வாதாடிய சந்தர்ப்பங்களும் உண்டு.
13 ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாக்கவேண்டும் என்பதற்காக ஆளும் கூட்டணியில் உள்ள கடும்போக்குவாத கட்சிகளுடன் அடிக்கடி முட்டிமோதும் நிலைப்பாட்டிலேயே அமைச்சர் இருந்துவருகின்றார். ஆனால் இதுபோன்ற எந்தவொரு கட்டத்திலும் அரசைவிட்டு வெளியேறும் நிலைப்பாட்டை அமைச்சர் ஹக்கீம் எடுத்ததில்லை. மாறாக அரசாங்கத்துக்குள் இருந்தவாறு சாதிக்கப்போவதாகவே அவர் கூறிவருகின்றார்.
எனினும் அரசாங்கத்துக்குள் இருந்தவாறு சாதிக்கும் அவரது எண்ணக்கரு எந்தளவு தூரம் வெற்றியடைந்துள்ளது என்பதே இங்கு எழுப்பப்படுகின்ற கேள்வியாகும். இந்நிலையில் நாட்டின் அரசியல் நகர்வுகளையும் காய் நகர்த்தல்களையும் பொறுத்திருந்தே பார்க்கவேண்டியுள்ளது. அரசியல் என்பது ஒரே இரவில் சமூகத்திலும் நாட்டிலும் ஏன் உலகிலுமே மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டது.
எனவே இந்த விடயத்தில் எதிர்வரும் காலங்களில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படப்போகின்றன என்பதனை அடுத்தகட்ட நகர்வுகளிலிருந்தே எம்மால் புரிந்துகொள்ள முடியும். இந்நிலையில் விரைவில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் மேலோங்கியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் விரைவில் தீர்க்கமான அரசியல் முடிவு ஒன்றை எடுக்கலாம்.
காரணம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே அதற்கான அரசியல் வியூகங்கள் கட்சிகள் மட்டத்தில் அமைக்கப்படலாம். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகுமா? அல்லது அமைச்சர் ஹக்கீம் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவாரா என்பவற்றுக்கு கடந்த இரண்டு வருடங் களாகவே பதில் கிடைக்காமலேயே உள்ளது.
160 பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனும் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் சுதந்திரக் கட்சிக்கு பின்னர் அதிகூடிய எம்.பி.க்களுடன் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சி விலகுவதால் அரசுக்கு பாரிய பாதிப்புக்கள் அல்லது நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்கலாம்.
ஆனால் விலகுவதன் மூலம் வலுவான செய்தியையும் எச்சரிக்கையையும் விடுக்கலாம். அரசாங்கத்தின் அணுகுமுறையில் மாற்றத்தைக் கொண்டுவரலாம். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் என்ன மயக்கத்தில் இருக்கிறதோ தெரியவில்லை. அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த தயங்கிக்கொண்டிருக்கிறதா என்பதும் புரியவில்லை.
-ரொபட் அன்ரனி-