உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் கால்பந்தாட்டத்
திருவிழா இன்னும் சில தினங்களில் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை பிரேஸிலில் நடைபெறும் இத்தொடர் எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகி அடுத்த மாதம் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன் முதலாவது போட்டியில் இத் தொடரை நடத்தும் நாடான பிரேஸில் அணி குரோஷிய அணியை அந்நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா மைதானத்தில் சந்திக்கவுள்ளது.கால்பந்தாட்ட விளையாட்டில் ஆசிய நாடுகளை விட இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகள் ஜாம்பவான்களாக திகழ்கின்றன. குறிப்பாக பிரேஸில், ஆர்ஜென்டீனா, போர்த்துக்கல், ஸ்பெய்ன், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஜேர்மனி ஆகியன கால்பந்தாட்ட அரங்கில் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. எனினும், கால்பந்தாட்டத்தில் எதுவும் நடக்கலாம். பலமிக்க அணிகளை பலம்குன்றிய அணிகள் வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். கடந்த உலகக் கிண்ணத்தில் ஏற்பட்ட அதிசயிக்கத்தக்க நிகழ்வுகள் இம்முறையும் ஏற்படலாம். எனவே ஒவ்வொரு அணியும் கிண்ணத்தைக் கைப்பற்ற முழு மூச்சுடன் செயற்படும்.
வரலாறு 1934ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கால்பந்தாட்டத் தொடரில் உருகுவே அணி கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. அன்று தொடக்கம் 4 வருடங்களுக்கு ஒரு முறை இந்த உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. எனினும் 1942 மற்றும் 1946ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இரண்டாம் உலக மகா யுத்தம் காரணமாக இப்போட்டித் தொடர் நடைபெறவில்லை. இதுவரை அதிகமான 5 தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றி, அதிக தடவைகள் கிண்ணத்தை கைப்பற்றிய அணியாக பிரேஸில் காணப்படுகின்றது.
இதேவேளை, பிரேஸிலுக்கு அடுத்தபடியாக இத்தாலி 4 தடவைகளும் ஜேர்மனி 3 தடவைகளும் ஆர்ஜென்டீனா மற்றும் உருகுவே அணிகள் தலா 2 தடவைகளும் பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெய்ன் ஆகியன தலா ஒரு முறையும் கிண்ணத்தை சுவீகரித்துள்ளன. மேலும் அதிக தடவைகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணியாக பிரேஸிலுடன் ஜேர்மனியும் விளங்குகின்ற போதிலும் ஜேர்மனி 3 தடவைகள் மாத்திரமே கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டிகள் நடத்தும் முறை இத் தொடரில் பங்குகொள்ளும் 32 அணிகளும் தலா 4 அணிகள் வீதம் ஏ.பீ.சீ. டீ. ஈ. எப். ஜீ. எச். என 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு ள்ளன.
இந்த 8 குழுக்களுக்கான போட்டிகள் 'லீக்' முறையில் நடக்கும். அந்த 8 குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அடுத்த சுற்றான 'ரவுண்ட்- 16' என்ற 'நொக் அவுட்' சுற்றுக்குத் தகுதி பெறும். அவ்வாறு இந்த 'ரவுண்ட்- 16' சுற்றில் வெற்றிபெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெறும். இவ்வாறு வெற்றிபெறும் அணிகள் தொடர்ந்து அடுத்தகட்ட சுற்றான அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஜூலை 8ஆம் திகதி முதலாவது அரையிறுதிப் போட்டியும் ஜூலை 9ஆம் திகதி இரண்டாவது அரையிறுதிப் போட்டியும் ஜூலை 13ஆம் திகதி உலக சம்பியனை தெரிவு செய்யும் இறுதிபோட்டி ஆகிய மூன்று போட்டிகளும் ரியோ டி ஜெனிரோவில் இடம்பெறும்.
பங்குகொள்ளும் அணிகள் ஏ குழுவில் பிரேஸில், குரோசியா, மெக்ஸிக்கோ, கெமரூன் ஆகிய அணிகளும், பீ குழுவில் ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளும், சீ குழுவில் கொலம்பியா கிறீஸ், ஐவரி கோஸ்ட், ஜப்பான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஈ குழுவில் சுவிட்ஸர்லாந்து, ஈக்குவடோர், பிரான்ஸ், ஹொன்டுராஸ் ஆகிய அணிகளும், எப் குழுவில் கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாகக் கருதப்படும். ஆர்ஜென்டீனா, பொஸ்னியா ஹேர்ஸெகோவினா, ஈரான், நைஜீரியா, ஆகிய அணிகளும், ஜீ குழுவில் பலம் பொருந்திய அணிகளான ஜேர்மனி, போர்த்துக்கல், கானா, ஐக்கிய அமெரிக்கா ஆகியனவும் எச் குழுவில் பெல்ஜியம் அல்ஜீரியா, ரஷ்யா, தென் கொரியா ஆகியனவும் அங்கம் வகிக்கின்றன.
இதில் நடப்புச் சம்பியனான ஸ்பெய்ன் மற்றும் உப சம்பியனான நெதர்லாந்தும் அங்கம் வகிக்கும் பீ குழுவானது மிகவும் கடுமையான குழுவாக கணிப்பிடப்பட்டுள்ளது. பீ குழுவில் இவ்விரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன என கால்பந்தாட்ட அவதானிகள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு இவ்விரு அணிகளும் ரவுண்ட் 16' சுற்றுக்கு முன்னேறினால், தனது சொந்த மண்ணில் களமிறங்கும் பிரேஸில் அணிக்கு 'ரவுண்ட் 16' மிகவும் கடினமானதாக அமையும்.
காரணம், பிரேஸில் தனது குழுவில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினால் ஸ்பெய்ன் அல்லது நெதர்லாந்து அணிகளில் ஒன்றையே சந்திக்க நேரிடும். இந்த 8 குழுக்களில் போர்துக்கல், ஜேர்மனி ஆகியன இடம்பெற்றுள்ள ஜீ குழுவும் மிகவும் கடுமையானதாக காணப்படுகின்றன. இந்த இரு அணிகளும் கிண்ணத்தை வெல்லக்கூடிய அணிகளின் வரிசையில் உள்ளமையே இதற்கு காரணமாகும். பிரேஸிலுக்கு வாய்ப்பு உலகக்கிண்ணத்தை 5 தடவைகள் வென்ற பிரேஸில், இம்முறை தமது சொந்த மண்ணில் கிண்ணத்தை வெல்வதற்கு அதிகளவான வாய்ப்புக்கள் இருப்பதாக கால்பந்தாட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நடப்பு சம்பியனான ஸ்பெய்னை, கடந்தாண்டு நடைபெற்ற கொன்பெடரேஷன் கால்பந்தாட்டத் தொடரில் பிரேஸில் அணி வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியமை பிரேஸில் அணிக்கு மேலதிக உத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக நெய்மர் காணப்படுகிறார். எனினும் தற்போதுள்ள பிரேஸில் அணியில் அசாத்திய வீரர்களான ரொனால்டினோ, காகா மற்றும் ரொபினியோ ஆகியோர் இடம்பெறாமை பிரேஸில் அணிக்கு சற்றுப் பின்னடைவாகும். இவர்கள் அணியில் இணைத்துக்கொள்ளப்படாமை பிரேஸில் ரசிகர்களுக்கு ஏமாற்றமாகும்.
போட்டியை ஆரம்பித்து வைப்பது யார்? எப்போதுமே உலகக் கிண்ணத் தொடரை உலகின் பிரபல முக்கியஸ்தர் ஒருவர்தான் பந்தை உதைத்து தொடக்கிவைப்பார். ஆனால், இந்த முறை பந்தை எட்டி உதைத்து உலகக் கிண்ணத் தொடரை தொடக்கி வைக்கப்போவது ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இடுப்புக்குக் கீழே உணர்ச்சிகள் எதுவும் இல்லாத பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவன் ஒருவன்தான் உதைக்கக் காத்திருக்கிறான். சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து பந்தை உதைக்கும்போது, அதை அவன் உணர வேண்டும் என்பதற்காக அவன் உடலில் நவீன தொழில்நுட்ப ரீதியிலான சென்சர்களை பொருத்தவுள்ளனர்.
அதிக கோல்கள் உலக கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரராக பிரேஸிலின் ரொனால்டோ காணப்படுகிறார். இவர் 19 போட்டிகளில் பங்குபற்றி 15 கோல்களை அடித்துள்ளார். இவரையடுத்து ஜேர்மனியின் ஜேர்ட் முல்லர் மற்றும் மிரோஸ்லெவ் க்ளோஸ் ஆகியோர் 14 கோல்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர். இதில் இம்முறையும் தொடர்ந்து 4ஆவது தடவையாக உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் பங்குகொள்ளும் ஜேர்மனியின் மிரோஸ்லெவ் க்ளோஸ் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற ரொனால்டோவின் சாதனையை முறியடிப்பதற்கான சாத்தியம் அதிகம் காணப்படுகின்றதாக கால்பந்தாட்ட விற்பன்னர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அதி உன்னத சாதனையை படைப்பதற்கு இவருக்கு மேலும் இரு கோல்கள் தேவைப்படுகின்றன. இதேவேளை ஸ்பெய்னின் டேவிட் வில்லா 8 கோல்களையும் உருகுவேயின் டியகோ போர்லன் 6 கோல்களையும் ஜேர்மனி வீரர்களான தோமஸ் முல்லர், லூகஸ் பொடொல்ஸ்கி, நெதர்லாந்தின் வெஸ்லி ஸ்னெய்ஜ்டர் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் லென் டொன் டொன வன் ஆகி யோர் தலா 5 கோல்களை அடித்துள்ளனர். இதில் போர்த்துக்கலின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 3 கோல் களை மாத்திரமே அடித்துள்ளார். அத்துடன் கால்பந்தாட்ட அரங்கில் சிறந்த வீரராக விளங்குபவரும் அதிக இரசிகர் கூட்டத்தைக் கொண்டவருமான ஆர்ஜென்டீனா வின்ல யொனல் மெஸ்ஸி ஒரு கோலை மாத்திரமே அடித்துள்ளமை சற்று வருந்தத்தக்க விடயமாகும்.
இம்முறை இவ்விருவரும் கோல் மழை பொழிவார்களா என இரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். கிண்ணம் யாருக்கு? கால்பந்தாட்ட அரங்கில் கடைசி நிமிடம் வரை போட்டியின் முடிவை கணிப்பது என்பது சற்று கடினமாகும். இதில் நடப்பு சம்பியனான ஸ்பெய்ன் தொடர்ந்து கிண்ணத்தை தக்கவைக்கப் போராடும். அவ்வணியின் நட்சத்திர வீரர்களாக டேவிட் வில்லா, அன்ட்ரே இன்னியஸ்டா, பெர்னாண்டோ டொரஸ் ஆகியோர் காணப்படுவதுடன் கோல்காப்பாளரான ஈகர் கெஸ்ஸில்லாஸின் கோல்காப்பும் அவ்வணிக்கு பலமாகும். இதனால் ஸ்பெய்ன் கிண்ணத்தை தக்கவைக்க பாரிய முயற்சிகளை மேற்கொள்ளும். உப சம்பியனான நெதர்லாந்து அணியின் நட்சத்திர வீரராக ஸ்னெய்ஜ்டர் காணப்படுகிறார்.
அத்துடன் அவ்வணியில் பலம் வாய்ந்த பின்கள வீரர்கள் (டிபென்டர்ஸ்) காணப்படுகின்றமை அவ்வணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். உலகக் கிண்ண வரலாற்றில் மூன்று முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளபோதும் கிண்ணத்தை ஒருபோதும் வென்றதில்லை. அவற்றை நிவர்த்திசெய்யும் வகையில் முதல் முறையாக கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் இவ்வணி களமிறங்கவுள்ளது. பிரேஸிலை அடுத்து அதிக தடவைகள் (4) கிண்ணத்தை வென்ற அணியான இத்தாலி கிண்ணத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
கடந்த 2006ஆம் ஆண்டு பிரான்ஸின் ஸினேடின் ஸிடேன் இத்தாலி வீரரொருவரை தலையால் முட்டியதால் சிகப்பு அட்டை காட்டப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் பிரான்ஸ் அணி விளையாடியிருந்தது. இது இத்தாலி அணி க்கு சற்று சாதகத் தன்மையை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அதிக அனுபவமிக்க அணியான ஜேர்மனி கிண்ணத்தை வெற்றிகொள்ளும் என கூறப்படுகிறது. காரணம் அவ்வணியில் குளோஸ், பொடொல்ஸ்கி, தோமஸ் முல்லர் ஆகிய அனுபவ வீரர்கள் பலர் காணப்படுகின்றனர். இவ்வணி 7 தடவைகள் உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளபோதும் 3 தடவைகள் மாத்திரமே கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
1990ஆம் ஆண்டு இறுதியாக கிண்ணத்தை கைப்பற்றியிருந்ததுடன், இம்முறை கிண்ணத்தை கைப்பற்ற வேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளது. ஆர்ஜென்டீனா இதுவரை இரு தடவைகள் மாத்திரமே உலக கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. அதுவும் கால்பந்தாட்ட ஜாம்பவான மரடோனாவின் காலத்திலேயே ஆகும். மரடோனாவின் கால்பந்தாட்ட வாரிசாக கருதப்படும் மெஸ்ஸி கழக அணிகளுக்காக சிறப்பாக செயற்படுவதாகவும் தேசிய அணிக்கு பெரிதாக எதனையும் செய்ததில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது காண்படுகின்றது. மேலும் அவருக்கு அவ்வணியின் வீரர்கள் போட்டியின்போது போதிய ஒத்துழைப்பை வழங்குவதில்லை என்றும் கூறப்படுகின்றது.
எது எப்படியிருந்தாலும் இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு பதிலடிகொடுத்து தமது நாட்டுக்கு கிண்ணத்தை வென்றுகொடுக்க ஆர்ஜென்டீன வீரர்கள் முழு மூச்சுடன் செயற்படுவர். கிரிக்கெட்கெட்டிலும் சரி, கால்பந்தாட்டத்திலும் சரி இங்கிலாந்து அணி சற்று ராசியில்லாத அணியாகவே காணப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2010ஆம் ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 கிண்ணத்தை தவிர வேறேந்த பெரிய தொடரி லும் கிண்ணத்தை கைப்பற்றியதில்லை. அதுபோல் இங்கிலாந்து கால்பந்தாட்ட அணி ஒரு முறை மாத்திரமே கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
அதுவும் 1966ஆம் ஆண்டில் ஆகும். அதன் பின்னர் வந்த டேவிட் பெக்காம், மைக்கல் ஓவன் ஆகிய அதிசறந்த வீரர்கள் இருந்தபோதிலும் கிண்ணத்தை சுவீகரிக்க முடியவில்லை. இவ்வணிக்கு வெய்ன் ரூனி, ஸ்டீபன் ஜெராட் நட்சத்திர வீரர்களாக காணப்படுகின்றனர். திறமை மற்றும் அதிர்ஷ்டம் ஆகிய இரண்டும் கைகொடுத்தால் இங்கிலாந்து அணி கிண்ணத்தை வெல்லும். ஒரு தடவை மாத்திரம் கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ள பிரான்ஸ் அணியும் இம்முறை கிண்ணத்தை வெல்லும் முயற்சியில் களமிறங்கவுள்ளது. பிரான்ஸ் அணி அங்கம்வகிக்கும் ஈ குழுவில் சுவிட்ஸர்லாந்து, ஈக்குவடோர், ஹொன்டுராஸ் ஆகிய அணிகள் காணப்படுகின்றன.
இதனால் இவ்வணி "ரவுண்ட்- 16” சுற்றுக்கு இலகுவாக நுழைய முடியும் என கூறப்படுகின்றது. கால்பந்தாட்ட வரலாற்றில் இதுவரை ஒருமுறையேனும் கிண்ணத்தை கைப்பற்றாத அணியாக போர்த்துக்கல் காணப்படுவது சற்று ஆச்சிரியத்திற்குரியதாகும். எனினும் இம்முறை கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தலைமையில் களமிறங்கவுள்ளது. ஜீ குழுவில் அங்கம் வகிக்கும் இவ்வணிக்கு ஜேர்மனி அணி பாரிய சவாலாக அமையும் இவ்வணி எதிர் அணிகளின் வீரர்களின் குறை நிறைகளை கண்டறிந்து சற்றுப் பொறுமையுடனும் விவேகத்துடனும் விளையாடினால் கிண்ணத்தை கைப்பற்ற முடியும். முதலாவது உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய வரலாற்றில் இடம்பிடித்துள்ள உருகுவே அணி இரு முறை உலகக் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.
இவ் அணியை எளிதில் வீழ்த்த முடியாது. உருகுவே அணி இவ்வணியின் நட்சத்திர வீரராக காணப்படும் டியாகோ போர்லன் சிறந்த முன்கள வீரராவார். இந்த அணிகளைத் தவிர ஜப்பான், தென் கொரியா, ஈரான் ஆகிய ஆசிய அணிகளும் ஆசிய பிராந்தியத்தில் தெரிவான அவுஸ்திரேலிய அணியும் எதிர் அணிகளுக்கு சிம்ப சொப்பனமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வணிகளும் போட்டியை இலகுவாக விட்டுவிடாது என கால்பந்தாட்ட விற்பன்னர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் கானா, சுவிட்ஸர்லாந்து ஆகிய அணிகளும் அண்மைக்காலமாக திறன்பட விளையாடிவருகின்றனர்.
உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இதுவரை இலத்தீன் அமெரிக்கா நாடுகளும், ஐரோப்பா நாடுகளுமே கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன. ஆபிரிக்க நாடொன்றோ அல்லது ஆசிய நா டொன்றோ கிண்ணத்தை கைப்பற்றியதாக சரித்திரம் இல்லை. எனினும் ஆசிய அல்லது ஆபிரிக்க நாடொன்று கிண்ண த்தை கைப்பற்றினால் அது கால்பந்தாட்ட அரங்கில் மாபெரும் விடயமாகும். கால்பந்தாட்டத்தில் எதுவும் நடக்கலாம். எனவே ஒவ்வொரு அணியும் கிண்ண த்தை வெற்றிகொள்ள முயற்சிக்கும் யார் சம்பியனாக முடி சூடப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப் போம். எது எப்படி இருந்தாலும் விளையாட்டுப் பிரியர்களுக்கு குறிப்பாக கால்பந்தாட்ட பிரியர்களுக்கு இது ஒரு மாபெரும் விருந்து படைக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. – எம்.எம். சில்வெஸ்டர்












