பிரான்சில் ஐரோப்பிய ரீதியாக நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளுக்கான செயலமர்வும், பயிற்ச்சிப்பட்டறையும் - TK Copy பிரான்சில் ஐரோப்பிய ரீதியாக நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளுக்கான செயலமர்வும், பயிற்ச்சிப்பட்டறையும் - TK Copy

  • Latest News

    பிரான்சில் ஐரோப்பிய ரீதியாக நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளுக்கான செயலமர்வும், பயிற்ச்சிப்பட்டறையும்


    பிரான்சில் தமிழ்ச்சோலையின் தலைமைப்பணியகமும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பும், தமிழர் விளையாட்டுத்துறையும் இணைந்து ஏற்பாடு செய்த இப்பயிற்ச்சிப்பட்டறை 24.05.2014 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான சார்சல் மாநகரத்தில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. இவ் அமர்வில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழர் விளையாட்டுத்துறையின் பொறுப்பாளர்கள், மற்றும் உத்தியோகத்தர்களும் பிரான்சின் புறநகர் பகுதியில் நடுவர்களாக கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். ஆரம்ப அறிமுக நிகழ்வை தமிழ்ச்சோலை தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. nஐயக்குமாரன் அவர்கள் ஆற்ற அதனைத்தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப்பொறுப்பாளர் அனைவரையும் வரவேற்றுக்கொண்டதோடு எமது அடுத்த சந்ததிகள் உடலாலும், உளத்தாலும் ஆரோக்கியமாக இருப்பதற்கு விளையாட்டின் அவசியத்தையும், முக்கியத்துவம் பற்றியும், எமது விளையாட்டுக்களும் போட்டிகளும் இன்னும் வளர்ச்சியடையச்செய்து அவைகளை சரியான வழியில், சரியான பாதையில் உண்மையுடன் , நேர்மையுடனும் பக்கசார்பில்லாது கொண்டு செல்ல உழைக்க வேண்டும் என்றும் அதனை அர்ப்பணிப்புடன் தொடர்ந்து செய்வோரை புடம் போடுகின்றதின் ஒரு செயற்பாடாகவே இப்பட்டறை அமைகின்றது என்று கூறியிருந்தார். இனி வரும் காலங்களில் இவ்வாறான பயிற்ச்சிப்பட்டறைகளில், போட்டிகளில் கலந்து கொள்பவர்களே சரியான நடுநிலையானவர்களாக கருதம் முடியும் என்று பட்டறையில் கலந்து கொண்ட அனைவரின் கரங்களையும் நன்றியோடு பற்றிக்கொள்வதாகவும் கூறியிருந்தார்.


    தொடர்ந்து பிரான்சு தமிழர் விளையாட்டுத் துறையின் மெய்வல்லுனர் போட்டிகளின் முகாமையாளரும், தாயகத்தில் விளையாட்டுத்துறையில் கடமையாற்றிவரும் ,விஞ்ஞான ஆசிரியருமாகிய ஆசிரியருமாகிய திரு. இராஐலிங்கம் அவர்கள் செயலமர்வை நடாத்தியிருந்தார். ஆரம்பத்தில் தனது கருத்தாக புலம் பெயர்ந்த மண்ணில் நாம் வாழ்ந்தாலும் எமது தாய்நாட்டிற்கும், எமது மண்ணிற்கும் நாம் வாழும் நாட்டிற்கும் எவ்வாறு பெருமையைத் தேடிக்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக தேசியக்கொடிகள் ஏற்றும் முறமைகள் அதன் முக்கியத்துவம், ஒழுங்கு முறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும். தெரிவித்திருந்தார். மைதானத்தில் நடைபெற வேண்டிய அணிவகுப்புக்கள், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், மேற்கொள்ப்பட வேண்டிய உறுதிப்பிரமாணம், அதற்கேற்ற வகையில் நடுவர்கள் எவ்வாறு நடத்தல், போட்டிகள் ஆரம்பிப்பாளர் முதற் கொண்டு ஒவ்வொரு போட்டியின் தலைமை நடுவர், போட்டிச்செயலாளர், நேரக்கணிப்பாளர்கள், என்று ஒவ்வொரு பொறுப்பு மிக்க செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் பற்றி மிகவும் தெளிவாக விளங்கம் கொடுத்திருந்தார்.



    கடந்த காலத்தில் சர்வதேச ரீதியாகவும், தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் திறமை மிக்க வீரர்கள் நடுவர்களின் தீர்ப்பினால் எதிர்கொண்ட பிரச்சனைகள் , கொடுக்கப்பட்ட தீர்ப்புகள், ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றி உதாரணங்களை காட்டி விளக்கம் கொடுக்கப்பட்டது. விளையாட்டு வீரர்களின் மனநிலை, தீர்ப்பாளர்களின் பார்வை, ஆதரவாளர்கள் மக்களின் எதிர்பார்ப்பு முடிவுகள் ஏற்படுத்திய தாக்கங்கள், முடிவுகள் எடுக்கப்படுவதற்கு காரணிகளாக உள்ள சர்வதேச மெய்வல்லுனர் சட்டவழிமுறைகள், 2013 முதல் 2015 ம் ஆண்டு வரைக்கான நூலில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய சட்டயாப்புகள் பற்றியும் விளக்கியிருந்தார். இவருடன் அவ்வப்போது கடந்த காலங்களில் தாயகத்திலும் சர்வதேசத்திலும் எவ்வாறு மெய்வல்லுனர் போட்டிகள் நடாத்தப்பட்டன என்பதை தாயகத்திலும், புலத்திலும் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக விளையாட்டுத்துறையில் பணியாற்றி வருபவரும், தாய் மண்ணில் பல போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்று தமிழர்களுக்கு புகழ்சேர்ந்த திரு. பீலிக்ஸ் அவர்களும், தாயகத்தில் விளையாட்டுத்துறையில் தன்னை மிளிரச்செய்து வட மாகாணரீதியில் ஒட்டப்போட்டிகளில் சாதனைகளை நிலைநாட்டியவரும், இசை ஆசிரியருமாகிய திரு. சேயோன் அவர்களும் இச்சிறப்பான பட்டறையை நடாத்துவதற்கு உறுதுணையாகவிருந்தனர். பிற்பகல் 2.30 மணிவரை நடைபெற்ற இச்செயலமர்வு மதிய உணவுடன் நிறைவு பெற்று தொடர்ந்து மைதானத்தில் நேரடிப்பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தனர். செயலமர்வில் கற்றுக்கொண்டவைகளை நேரடியாக மைதானத்தில் உடனேயே கடமையில் ஈடுபடுபவர்கள் பயிற்சியும் பெற்றுக்கொண்டது அனைவருக்கும் மிகுந்த பலனை தந்திருந்தது.


    இன்றைய காலச்சூழலில் வீதிக்கு எங்கும் சங்கங்களும், விளையாட்டுக்கழகங்களும் உருவாகின்றவர்கள் எமது சந்ததியை சரியான வழியில் சகலதுறைகளிலும் வளர்த்துச் செல்ல வேண்டிய தலையாய பொறுப்பு அவர்கள் எல்லோருக்கும் உண்டு. விளையாட்டுப்போட்டிகளை நடாத்துபவர்கள் சர்வதேச மற்றும் எமது தாயக புதியசட்ட விதிமுறைகள் அறிந்திருக்கவேண்டும். தமது ஐய்யப்பாடுகளை தீர்த்துக்கொள்ளவும் வேண்டும். மாறாக எம்மவர்கள் தமது பண்டைய கால தாம் விளையாடிய யாப்பு விதிகளுக்கமைய நடாத்த முற்படுவது எமது புதிய தலைமுறையை நல்லதோர் எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல விடாது முடக்குகின்ற செயற்பாடகவுமே பார்க்கப்படுகின்றது. அத்துடன் நடுநிலை வகிப்போரும் சட்டவிதிகளை தெரிந்து கொள்ளாது போட்டிகளில் எடுக்கின்ற முடிவுகளும், சரியான முறைகளில் தெரிந்து கொள்ளல், பட்டறைகள் , பயிற்ச்சிகள் மூலமும் எடுக்கப்படும் உண்மையான முடிவாளர்களுக்கும் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது நடைபெற்று வரும் நிகழ்கால செயற்பாடுகளாகும். எனவே இனி வரும் காலங்களிலாவது விளையாட்டு ஆர்வலர்கள் இவ்வாறான பயிற்ச்சிப்பட்டறைகளில் ஒரு நாள் அர்ப்பணிப்புடன் கலந்து கொண்டு தம்மை பட்டைதீட்டிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.








    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: பிரான்சில் ஐரோப்பிய ரீதியாக நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளுக்கான செயலமர்வும், பயிற்ச்சிப்பட்டறையும் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top