பக்கங்கள்
▼
நரேந்திர மோடியும் - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் - நிலாந்தன்-
நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின் போது
இடம்பெற்ற ஒரு சம்பவம் இது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயர் மட்டக் குழுவொன்று யப்பானின் சிறப்புத்தூதுவர் யசூசி அகாஷியைச் சந்தித்தது. இதன்போது அந்த இயக்கத்தின் தலைமையால் எழுதப்பட்ட ஒரு கடிதம் யசூசி அகாஷியிடம் கையளிக்கப்பட்டது. அக்கடிதத்தில் தமிழ் மக்களுடைய நியாயமான கோரிக்கைகளை யப்பான் அங்கீகரிக்க வேண்டும் என்ற தொனிப்பட வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தாக அப்பொழுது தகவல்கள் வெளிவந்தன. அகாஷி அதை வாசித்துவிட்டு பின்வரும் தொனிப்படப் பதில் சொன்னாராம்... ''யப்பான் ஒரு பெரிய கப்பலைப் போன்றது. அதை திடீரென்று திருப்புவது கடினமானது' என்று.யப்பான் மட்டுமல்ல, அதைப் போன்ற பெரிய கேந்திர முக்கியத்துவம் மிக்க எந்தவொரு நாடும் அதன் வெளியுறவுக் கொள்கையை எடுத்த எடுப்பில் செங்குத்தாகத் திருப்ப முடியாது. ஏனெனில், நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகள் எனப்படுகிறவை அவ்வக் காலத்தின் பிராந்திய மற்றும் அனைத்துலக வலுச் சமநிலைகளைப் பிரதிபலிப்பவைதான். வலுச் சமநிலைகளைச் சடுதியாக மாற்றலாம் என்றால் வெளியுறவுக் கொள்கையையும் அப்படி மாற்ற முடியும்.
ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கை எனப்படுவதை அதன் மிக எளிமையான வடிவத்தில் விளக்கிக்கொள்வோமாக இருந்தால் அதை இரண்டு பிரதான காரணிகள் தீர்மானிக்கின்றன. ஒன்று மாறாக் காரணிகள் மற்றது மாறும் காரணிகள்.
மாறாக் காரணிகள் எனப்படுபவை குறிப்பிட்ட நாட்டின் புவியியல் அமைவிடம் அதன் பருமன் அதன் இயற்கை வளங்கள் போன்றனவாகும்.
மாறும் காரணிகளானவை குறிப்பிட்ட நாட்டின் சனத்தொகையும் படைப்பலமும் அந்நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் (அதாவது வெளிநாடுகளிலும்) காணப்படும் சமுகப் பொருளாதார அரசியல் தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டுச் சூழல்களும் ஆகும்.
முதலில் மாறிலியான காரணிகளை சிறிது விளக்கமாகப் பார்க்கலாம். நெப்போலியன் ஒரு முறை சொன்னார் ''எந்தவொரு நாட்டினதும் வெளியுறவுக் கொள்கையை அந்நாட்டின் புவியியல் தான் தீர்மானிக்கின்றது' என்று.
ஒரு நாட்டின் புவியியல் அமைவிடமும் அதன் பருமனும் அநேகமாக மாறிலிகள்தான். உலகளாவிய அசாதாரண புவியியல் மாற்றங்கள் ஏற்படும்போதோ அல்லது பேரரசு உருவாக்கத்தின்போதோ ஒரு நாட்டின் எல்லைகள் மாறக்கூடும். பேரரசு உருவாக்கத்தின்போது நாட்டின் எல்லைகள் அகட்டப்படுவதுண்டு. எதுவாயினும், ஒரு நாட்டின் அமைவிடமும் அதன் பருமனும் அது தொடர்பாக அது கொண்டிருக்கக்கூடிய கேந்திர முக்கியத்துவமும் அதன் வெளியுறவுக் கொள்கையை பெருமளவுக்குத் தீர்மானிக்கின்றன.
மற்றது மாறக்கூடிய காரணிகள். நாடுகளின் சனத்தொகைஇபடைபலம்இஅவற்றின் சமூகப் பொருளாதார தொழில்நுட்ப அரசியல் மற்றும் கலாசாரச் சூழல் போன்றவை மாறக்கூடியவை. குறிப்பிட்ட ஒரு நாட்டின் அரசாங்கம் மாறும்போது அதன் பொருளாதாரக் கொள்கைகள் மாறக்கூடும். இதுவும் வெளியுறவுக் கொள்கைகளில் தாக்கங்களை ஏற்படுத்தும். அதுபோலவே ஒரு நாட்டின் சமூகச் சூழல் அதாவது, இனங்கள், மதங்கள், சமூகங்களிற்கிடையிலான அமைதி குலையும்போது அதை வெளிச்சக்திகள் தமது தேவை கருதிக் கையாள முடியும். இதுவும் பிராந்தியத்தின் வலுச்சமநிலையைப் பாதிக்கக்கூடியது. எனவே, வெளியுறவுக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையிற் பார்த்தால் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் ஏதும் மாற்றங்கள் ஏற்படுவதாயிருந்தால் அது மாறிலியான அம்சங்களால் ஏற்படுவதாயிராது. மாறாக, அது மாறக்கூடிய அம்சங்களால் தான் ஏற்பட முடியும். அதாவது, அந்த நாட்டிற்குள்ளும் வெளியிலும் ஏற்படக்கூடிய சமூகப் பொருளாதார அரசியல் தொழில்நுட்ப மற்றும் பண்பாட்டு மாற்றங்களால் எற்பட முடியும்.
இந்த விளக்கத்தின் வெளிச்சத்தில் வைத்து இனி மோடியின் வெளியுறவுக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் எவையெவை என்று பார்க்கலாம்.
மோடியின் வெளியுறவுக் கொள்கை எப்படி அமையக்கூடும் என்று ஆரூடம் கூறுவது இக்கட்டுரையின் நோக்கமன்று. பதிலாக அவருடைய வெளியுறவுக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களைச் சுட்டிக்காட்டுவதே இன்று இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முதலில் மேற்கண்ட விளக்கத்தின் அடிப்படையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எது என்று பார்க்கலாம். அதன் அமைவிடம் பருமன், ஜனத் தொகை, படைப் பலம், பொருளாதாரம், பண்பாடு, ஆட்சி முறை என்பவற்றைக் கருதிக் கூறின் அது ஒரு பேரரசு. பிராந்தியப் பேரரசு. எனவே, ஒரு பிராந்தியப் பேரரசின் வெளியுறவுக் கொள்கை எப்படி அமையும்? பிராந்தியத்தில் அதன் மேலாண்மையைப் பேணுமொன்றாகத்தானே அமையும்?
இந்தியப் பேரரசின் வெளியுறவுக் கொள்கையின் மாறா அடிப்படை அது. மகாத்மா காந்தியே பிரதமராக வந்தாலும்கூட இந்த அடிப்படையை மாற்றுவது கடினம்.
இந்திய வெளியுறவுச் சேவையில் 37 ஆண்டுகள் சேவையற்றிய முன்னாள் ராஜந்திரியான ரி.பி. சிறினிவாசன் அப்படித்தான் கூறியுள்ளார். மஞ்சரி சட்டர்ஜி மில்லர் அண்மையில் ஃபொறின் எஃபயர்ஸ் (Foreign affairs) சஞ்சிகையில் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு கூறியுள்ளார். ''அதன் பரந்த வடிவத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கை ஏறக்குறைய ஐந்து தசாப்தங்களாக மாறாது காணப்படுகிறது. அப்படியேதும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவை சடுதியானவை அல்ல. அரசியல் ரீதியானவையும் அல்ல. அவை பிரதமரின் அரசியல் கோட்பாடுகளின் பாற்பட்டவையும் அல்ல' என்று.
அதாவது, கடந்த சுமார் ஐந்து தசாப்த காலமாக குறிப்பாக, இருதுருவ உலக ஒழுங்கின்போதும் அதன் சரிவின்போதும் அதன் பின் உருவான ஒரு துருவ உலக ஒழுங்கின்போதும் அந்த ஒரு துருவ உலக ஒழுங்கிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியிருக்கும் இந்நாள் வரையிலுமான ஏறக்குறை அரைநூற்றாண்டு காலத்துக்கு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையானது பெரியளவில் மாறவில்லை என்பதே ஒரு பொதுவான அதவானிப்பாகக் காணப்படுகிறது.
எனவே, நரேந்திர மோடி வந்தாலும் அதில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர முடியாது என்பதே ஒரு பொதுவான வாதமாகவும் காணப்படுகிறது.
ஆனால், இந்த இடத்தில் ஒரு முக்கியமான விடயப் பரப்பைச் சுட்டிக்காட்ட வேண்டும். ஒரு பரந்துபட்ட பார்வையில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறாதிருக்கிறது என்பது சரிதான். ஆனால், அந்த வெளியுறவுக் கொள்கையை செயற்படுத்தும் பிரயோக உத்திகளில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அதாவது, பிராந்திய மேலாண்மையைப் பேணிப் பாதுகாப்பது என்ற மூலோபாயத்தில் மாற்றமில்லை. ஆனால், அந்த மேலாண்மையை எப்படிப் பேணுவது என்ற செய்முறைத் தந்திரங்களில் அல்லது பிரயோக உத்திகளில் மாற்றங்கள் ஏற்பட முடியும்.
பிராந்தியத்தில் தனது மேலாண்மையை மீறிப் போகும் அயலவர்களை எப்படிக் கையாள்வது எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதில் கடந்த பல தசாப்தங்களில் மாறுபட்ட அணுகுமுறைகளை இந்தியா கைக்கொண்டு வந்திருக்கிறது. இம்மாறுபாடுகளைப் பிரதானமாக பின்வரும் காரணிகள் தீரு;மானித்திருக்கின்றன.
01) இந்தியாவில் ஆட்சிக்கு வரும் தலைமைத்துவம் எத்தகையது என்பது.
02) பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய ஆட்சி மாற்றங்களும், அதனால் ஏற்படக்கூடிய புதிய அணி சேர்க்கைகளும்.
03) உலக அளவில் ஏற்படக்கூடிய சமூக, பொருளாதார அரசியல் மாற்றங்களும், புதிய அணி சேர்க்கைகளும்.
மேற்படி காரணிகளைப் பொறுத்து இந்தியாவின் பிரயோக உத்திகளும் வித்தியாசப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, இந்திராகாந்தி ஒரு இரும்புப் பெண்ணாகக் காட்சியளித்தார். அவருடைய முதிர்ச்சியும் மிடுக்கும் பிராந்தியத்தில் அவரை கேள்விக்கிடமற்ற ஒரு பேரரசியாக நிறுவியிருந்தன. அவர் கெடுபிடிப் போர்க் காலத்துக்குரியவர். கெடுபிடிப் போர் நிலைமைகளுக்கேற்ப அவர் அதிரடியாகச் சில முடிவுகளை எடுத்தார். ஆனால், அவருடைய மகன் ரஜீவ் அப்படியல்ல. அவர் தாயைப் போல முதிர்ச்சியும் மிடுக்கும் ஜனவசியமும் மிக்கவராகக் காணப்படவில்லை. அவரோடு ஒப்பிடுகையில் இலங்கைத்தீவில் ஜெயவர்த்தன ஒரு பழுத்த அரசியல் வாதியாகக் காணப்பட்டார். மத்தியஸ்தராக வந்த இந்தியாவை விளையாட்டு வீரராக மாற்றுமளவுக்கு ஜெயவர்த்தன தந்திரங்களில் தேர்ந்தவராகவும் காணப்பட்டார். மேலும் அது கெடுபிடிப் போரின் முடிவுக் காலம். எனவே, ரஜீவினுடைய முடிவுகள் அவருடைய ஆளுமை, முதிர்ச்சியின் அளவு எதிர்த்தரப்பின் முதிர்ச்சி, தந்திரம் மற்றும் காலச் சூழல் என்வற்றால் வரையறைக்குள்ளாக்கப்பட்டிருந்தன.
இந்திராவுக்குப் பின் இரும்பு மனிதர்கள் இந்தியத் தலைமைத்துவத்திற்கு வரவில்லை. இப்பொழுது இந்தியாவுக்குத் தேவை. (Visionaries) தரிசனமுடைய தலைவர்கள் அல்ல. யதார்த்த பூர்வமான (Pragmatic) தலைவர்களே என்று குளொடி ஆர்பி எழுதியுள்ளார். சர்தார் பட்டேலைப் போன்ற இரும்பு மனிதர்களே இப்பொழுது இந்தியாவுக்குத் தேவை என்பது அவருடைய கருத்து. மோடியும் பட்டேலைப் போல யதார்த்தபூர்வமானவர் என்றே பொதுவான ஒரு கணிப்பு உண்டு. அதாவது, பல தசாப்தங்களுக்குப் பின் இந்தியத் தலைமைத்துவத்தில் ஒரு இரும்பு மனிதர் வந்திருக்கிறார்.
எனவே, இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கும் மாறிலியான அம்சங்களின் அடிப்படையில் ஒரு பிராந்தியப் பேரரசாக அதன் பிராந்திய மேலாண்மையை எப்பொழுதும் பேண முற்படும். அதேசமயம் மாறும் அம்சங்களின் அடிப்படையில் உள்நாட்டிலும் நாட்டுக்க வெளியிலும் தலைமைத்துவ மாற்றங்கள் மற்றும் புதிய அணிச் சேர்க்கைகள் உருவாகும்போது இந்தியா அதன் வெளியுறவுக் கொள்கையை அமுல்படுத்தும் பிரயோக உத்திகளை மாற்றுவதுண்டு.
இப்படிப் பார்த்தால் மோடியின் வருகை ஒரு மாற்றம். இது உள்நாட்டில.; அதேசமயம், பிராந்திய மற்றும் அனைத்துலக அரங்கில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன?.
அமிற்றாவ் ஆச்சார்யா வொஷிங்டன் டி.சி.யில் அமைந்திருக்கும் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் அனைத்துலக உறவுகள் துறையில் பேராசிரியராக இருக்கிறார். ''அமெரிக்க உலக ஒழுங்கின் முடிவு' என்று ஒரு புதிய நூலை அவர் வெளியிட்டிருக்கிறார்.
சீன மற்றும் மோடியின் எழுச்சியோடு உலகம் ஒரு துருவ (unipolar) உலக ஒழுங்கிலிருந்து இரு துருவ (bipolar) அல்லது பல துருவ (multipolar) ஒழுங்கொன்றை நோக்கிச் செல்வதாகக் கூறப்படுவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. பல துருவ உலக ஒழுங்கிற்குப் பதிலாக பலதுருவ கலப்புலகம் (multiplex world order) ஒன்று உருவாகக் கூடிய சாத்தியக்கூறுகளைப் பற்றி அவர் சுட்டிக்காட்டுகிறார். பலதுருவ கலப்புலகம் எனப்படுவது ஒரு துருவம் மட்டும் உலகில் மேலோங்கிக் காணப்படுவதற்கு பதிலாக ஒன்று மற்றத்தில் தவிர்க்க முடியாதபடி தங்கியிருக்கின்ற பிராந்திய பேரரசுகள் மற்றும் பிராந்திய ஒன்றியங்கள் போன்ற பல்வேறு புதிதாக எழுச்சிபெறும் துருவங்களின் கூட்டிருப்பாகும்.
ஐ.நா. மன்றில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்போது அதில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத நாடுகளின் எண்ணிக்கை இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. உலக சமூகத்தில் அமெரிக்காவும் அதன் எதிரிகளும் என்ற கறுப்பு வெள்ளைப் பிரிவினைக்கு மாற்றாக புதிய போக்குகள் உருவாகி வருவதை இது காட்டுவதாகவும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
திறந்த சந்தைப் பொருளாதாரத்தைப் பொறுத்த வரை உலகம் ஏறக்குறைய ஓரலகாகிவிட்டது. ஆனால், அதற்காக அனைத்துலக அரசியலை அதற்கூடாகத் தட்டையாக விளங்கிக்கொள்ளத் தேவையில்லை. ஓரே திறந்த சந்தைப் பொருளாதார அமைப்புக்குள்ளும் தேசிய உணர்வுகள் காரணமாகவோ அல்லது பிராந்திய மேலாண்மைக்கான வேட்கை காரணமாகவோ அல்லது உலக மேலாண்மைக்கான வேட்கை காரணமாகவோ புதிய துருவ இழுவிசைகள் உருவாகி வருகின்றன.
உக்ரெய்ன் விவகாரமானது அரசியலில் மென்சக்தி அணுகுமுறைக்குள்ள வரையறைகளை மட்டுமல்ல, உலகப் பேரரசான அமெரிக்காவிற்குள்ள சில வரையறைகளையும் உணர்த்தியிருப்பதாகவே கருதப்படுகின்றது.
உலக வங்கியின் உதவியுடன் உலகம் தழுவிய பொருளாதார ஒப்பீட்டுச் செயன்முறைத் திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளின் படி இந்த ஆண்டின் முடிவில் சீனாவானது உலகின் ஆகப் பெரிய பொருளாதாரமாக மேலெழுந்து விடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னிருந்து உலகின் ஆகப் பெரிய இராணுவச் சக்தியாக இருந்து வரும் அமெரிக்கா அடுத்த ஆண்டிலிருந்து உலகின் ஆகப் பெரிய பொருளாதார சக்தியில்லை என்ற ஒரு நிலை முதன் முதலாகத் தோன்றப்போகிறது என்று அமிற்றாவ் ஆச்சார்யா கூறுகிறார்.
இதில் மூன்றாவதாக இந்தியா நிற்கின்றது. மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் மேற்படி புகோள ஓட்டப் பந்தயத்தில் இந்தியா புதிய உத்வேகத்துடன் ஓடத் தொடங்கும் என்ற ஓர் எதிர்பார்ப்பு மேற்கத்தைய விமர்சகர்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. மோடியை இந்தியாவின் மாக்கிறட் தட்சர் என்று வர்ணிக்கும் சில விமர்சகர்கள் பிரித்தானியாவில் மாக்கிறட் தட்சர் அவருடைய ஆட்சிக் காலத்தில் சாதித்ததைப் போல மோடியும் இந்தியப் பொருளாதாரத்தை முடுக்கிவிடுவார் என்று எதிர்பார்க்கின்றார்கள்.
சந்தைப் போட்டியில் சீனாவை முந்துவதே மோடியின் கனவாயிருந்தால் அவர் தனது முழுக்கவனத்தையும் அதில் குவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இது விசயத்தில் சீனா தனது பொருளாதாரத்தை முன்னுக்குக் கொண்டுவருவதற்காக எப்படி வெளிவிவகாரங்களில் அதிகம் முட்டுப்படாமல் விலகி இருந்து வருகிறதோ அதே பாணியை மோடியும் கையாள்வாரா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
பதவியேற்பு வைபவத்திற்கு சார்க் தலைவர்களை அழைப்பது என்ற முடிவு முதலில் எடுக்கப்படவில்லையாம். நவாப் ஷெரீப்பை வரவழைப்பதன் மூலம் முஸ்லிம்களின் அவநம்பிக்கையைப் போக்கலாம் என்று மோடி விரும்பினாராம். நவாப் ஷெரீப்பை மட்டும் தனியாக அழைப்பது துருத்திக்கொண்டு தெரியும் என்பதால் சார்க் தலைவர்கள் எல்லோரும் அழைக்கப்பட்டார்களாம்.
ராஜபக்ஷவின் வருகையை எதிர்த்து டில்லிக்குப் போன வைகோவை மோடி சுமார் 35 நிமிடங்கள் சந்தித்தார். இச்சந்திப்பின்போது மோடி எதுவுமே பேசாமல் வைகோ கூறியவற்றை கேட்டுக்கொண்டிருந்தாராம். அருகிலிருந்த அருண் ஜெட்லி தான் சில தடவைகள் குறுக்கிட்டுக் கதைத்திருக்கிறார். பின்னர் ராஜபக்ஷவைச் சந்தித்த போது மோடி இந்தியாவுக்கு அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு மட்டும் கூறவில்லையாம். தமிழ் நாட்டில் இருக்கும் தனது நண்பர்களில் சிலர் பிரிவினையை ஆதரித்தபோதும் தனது அரசாங்கம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஓர் இறுதித் தீர்வு காணப்படுவதையே ஆதரிக்கும் என்ற தொனிப்படவும் உரையாடியதாக ஒரு தகவல் உண்டு.
அதோடு,ஜெயலலிதா பெற்ற அமோக வெற்றியும் ராஜபக்ஷவின் வருகைக்கு தமிழ் நாட்டில் காட்டப்பட்ட எதிர்ப்பின் பருமனும் தமிழ் நாட்டைக் குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய ஒரு நிலைக்கு டில்லியிருப்பவர்களை தள்ளியிருப்பதாகவும் ஒரு தகவல் உண்டு.
மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டவர் அருண் சொளரி. ஆனால், அவர் பின்னர் தெரிவு செய்யப்பட்டவில்லை. ஊடகவியலாளராகிய ரவி அகர்வாலிடம் அவர் அண்மையில் பின்வருமாறு கூறியிருக்கிறார். ''மோடியின் திட்டங்களைத் தெரியும் என்று யாராவது சொன்னால் அவர்களுக்கு மெய்யாகவே எதுவும் தெரியாது. ஆனால் யாருக்கு அவை தெரியுமோ அவர்கள் கதைக்கமாட்டார்கள்' என்று.
அப்படி இருக்கலாம். ஆனால், அதற்காக மோடியின் வெளியுறவுக் கொள்கையானது புதிர்களும் மர்மங்களும் நிறைந்ததாக இருக்கப்போகிறது என்று கருதத் தேவையில்லை. மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் இந்தியா தனது பிராந்திய மேலாண்மையை எப்படி நிலைநாட்டப்போகிறது என்பதே இங்கு ஈழத் தமிழர்களுக்கு முக்கியமான ஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கான விடையில்தான் தமிழர்களுடைய எதிர்காலம் தொங்கிக் கொண்டிருக்கிறது.
மன்னாரில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்
புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் சர்வதேச
புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினமாகிய இன்று சனிக்கிழமை காலை மன்னாரில் நடைபெற்றது. இலங்கை செஞ்சிலுவைசங்கத்தின் மன்னார் மாவட்ட கிளை மற்றும் மாவட்ட சுகாதார பணிமனை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்விற்கு செஞ்சிலுவைசங்கத்தின் மன்னார் கிளையின் செயலாளர் ரகு சங்கர் தலைமை தாங்கினார்.இன்று காலை 9:00 மணியளவில் ஆரம்பமாகிய ஊர்வலத்தில் புகைத்தலுக்கு எதிரான விழிப்புனர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பலர் கலந்துகொண்டனர். மாவட்ட சுகாதார தினைக்களத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு மன்னார் வலயகல்வி பணிமனைக்குச் சென்று பிரதான விதி, வைத்தியசாலை வீதி, புனித செபஸ்தியார் வீதி ஊடாக மன்னார் நகர பகுதியை அடைந்து மன்னார் மாவட்ட செயலகம் முன் ஊர்வலம் நிறைவடைந்தது.
நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜே.ஜே.கெனடி, மன்னார் மாவட்ட சுகாதார அதிகாரி றோய் பிரீஸ், மன்னார் மாவட்ட சர்வ மத இணைத்தலைவர் அருட்தந்தை நேசன் அடிகளார், அருட்சகோதரி , பாடசாலை மாணவர்கள், மன்னார் மாவட்ட சுகாதார பணிமனை உத்தியோகத்தர்கள், செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெண் பொலிஸாருக்கென புதிய சீருடை அறிமுகம்!
இது தொடர்பில், பொலிஸ் மா அதிபர் முன்வைத்த பரிந்துரைக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது பெண் பொலிஸார் பயன்படுத்தும் சீருடைக்கு மேலதிகமாக புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. புதிய சீருடை தற்பொழுது பயன்படுத்தும் காக்கி நிறத்தைக் கொண்டதாக தயாரிக்கப்பட உள்ளதோடு பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் சார்ஜன்ட் பதவியிலுள்ள பெண்களுக்கு நீண்ட காற்சட்டையுடன் கூடியதாக புதிய சீருடை இருக்கும்.
உதவிப் பொ லிஸ் அத்தியட்சகர் தரம் மற்றும் பொலிஸ் பரிசோதகர் தரம் உள்ள பெண் பொலிஸாருக்கும் நீண்ட காற்சட்டையுடன் புஷ் கோட்டும் வழங்கத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
பெண் பொலிஸாரின் அலுவலக உத்தியோகபூர்வ கடமைகளையும் மற்றும் வசதிகளையும் கருத்திற்கொண்டு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படுகிறது.இது தவிர பொலிஸ் சேவையில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கும் புதிய சீருடையொன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அரசியல் மாற்றமும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்
பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே இனப்பிரச்சினைக்கு அரசியல்
தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வெளியில் அரசியல் தீர்வுக்கான எந்தப் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படமாட்டாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது.
தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வெளியில் அரசியல் தீர்வுக்கான எந்தப் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படமாட்டாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது.
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி மகிச்த ராஜபக்சவிடம் அதிகாரப் பரவலாக்கல் பற்றி பேசிய இந்தியப் பிரதமர்இ 13 ஆவது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தகவல்களுக்கு இந்திய ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிட்டிருந்தன.
இந்தியப் பிரதமருடனான பேச்சுக்களின்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்ததாகவும் இந்தியத் தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தப் பின்னணியில்தான் ஜனாதிபதி மகிநத ராஜபக்ச புதுடில்லியில் இருந்து நாடு திரும்பியதும், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று அடித்துக் கூறியிருக்கின்றார்.
‘இலங்கையின் அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது பலவந்தமாகவே திணிக்கப்பட்டது, எனவே, அது தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பேச்சுக்கள் நடத்தி முடிவுக்கு வரவேண்டும். இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்’ என்று அமைச்சர் சிறிபால டி சில்வா அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கின்றார்.
புதிய இந்தியப் பிரதமரும் ஜனாதிபதியும் சந்தித்தபோது, பல்வேறு விடயங்கள் பற்றி பேசப்பட்டிருக்கின்றது. அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டம் பற்றியும் பேசப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கிக் கூறியபோதே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்.
‘இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்று இருந்தால்இ அது இலங்கையின் உள்ள ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும். எமது பிரச்சினை எம்மாலேயே தீர்க்கப்பட வேண்டும். எமது உள்ளக விடயத்தில் எந்தவொரு வெளிநாடும் தலையிட முடியாது. கருத்துக்களை நாங்கள் செவிமடுப்போம். ஆனால் பிரச்சினைக்கான தீர்வை நாங்களே எடுப்போம்’ என்று அவர் மேலும் விளக்கமளித்திருக்கின்றார்.
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றிய இந்த அறிவித்தலும், விளக்கமும், தமிழ் மக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதையே காண முடிகின்றது. இந்தியாவில் புதிய அரசாங்கம் பதவியேற்றதும், இலங்கை அரசாங்கத்தின் போக்கிலும், அதன் நிலைப்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படும் என்று அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன.
முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கும் மேலாகவும் நாங்கள் செயற்படுவோம் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருந்தார். இதனை 13 பிளஸ் என்று ஊடகங்கள் வர்ணித்திருந்தன. ஆயினும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை. மாறாக அந்தத் திருத்தச் சட்டத்தையே இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போதுதான்இ இந்தியாவின் தலையீட்டுடன் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் இணங்கி வந்தது. அதனையடுத்து அந்தத் தேர்தலும் நடத்தப்பட்டது. ஆனால், வடமாகாண சபைக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் எதனையும் பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கம் இன்றளவிலும் முன்வரவில்லை. மாறாக 13 ஆவது திருத்த்ச் சட்டத்திலும் பார்க்கக் குறைந்த அதிகாரங்களையே வடமாகாண சபைக்கு அரசு அனுமதித்திருக்கின்றது. இதனை 13 மைனஸ் என்று ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.
இந்த நிலைமையில்தான் நடந்து முடிந்துள்ள இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திரமோடியிடம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதி உறுதியளித்திருக்கின்றார் என்ற செய்தியும்இ அதனைத் தொடர்ந்து இலங்கை மீது திணிக்கப்பட்டுள்ள அந்தத் திருத்தச் சட்டத்தைப் பற்றி நாங்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பேசி முடிவெடுக்க வேண்டியுள்ளது என்று அமைச்சர் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.
இரட்டை நிலைப்பாடு
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவரும், அமைச்சரும், அரசாங்கத்தி;ன் பேச்சாளருமாகிய சிறிபால டி சில்வா அரசாங்கத்தின் நிலைப்பாடாக இந்தக் கருத்துக்களைக் கூறியிருந்தாலும், சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். அதிகாரப் பரவலாக்கல்இ அரசியல் தீர்வு போன்ற முக்கியமான விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடுபற்றி அமைச்சர் சிறிபால டி சில்வா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் வைத்து அரசாங்கத்தின் நிலைப்பாடாகக் குறிப்பிட்டு, இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பதானது, இந்தக் கருத்து அரசாங்கத்தின் கருத்தா அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தா என்று கேள்வி கேட்கத் தூண்டியிருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்து சுமார் ஒரு வருட காலத்திற்குப் பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் அரசியல் தீர்வுக்காக நடத்திய பேச்சுவார்த்தைகள் ஒரு வருடம் நீடித்திருந்தது. பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு காலம் கரைந்து, ஒரு வருடம் நிறைவை எட்டியபோது, அந்தப் பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் அல்ல என்று அரசாங்கத்தின கருத்தாக அரச தரப்பினர் அப்போது தெரிவித்திருந்தார்கள். அத்துடன் தனியொரு கட்சியாகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களானது, அதிகார பலமற்றது. எனவே அந்தப் பேச்சுவார்த்தைகள் செல்லுபடியாகாது என்று அடாவடியாக அறிவித்திருந்தார்கள். அறிவித்ததைப் போலவே, அந்தப் பேச்சுக்களின் முடிசுளையும் பேச்சுக்களின் போது அரசாங்கத் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவே இல்லை.
இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற விடயத்தில் அரசாங்கம் உளப்பூர்வமான ஆர்வத்துடன் அப்போது ஈடுபட்டிருக்கவில்லை என்பதை அரசாங்கத்தின் அப்போதைய அறிவித்தல்களும், செயற்பாடுகளும் வெளிப்படுத்தியிருந்தன. பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்பதும், இதன் மூலம் வெளிப்பட்டிருந்தது.
இந்த நாட்டில் மோசமான யுத்தம் ஒன்று மூள்வதற்கு மூலகாரணமாக இருந்த இனப்பிரச்சினைக்கு அதிகார பரவலாக்கலின் மூலம், ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதில் கொஞ்சமும் அரசாங்கத்திற்கு அக்கறையில்லை என்பதையே யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகின்ற நிலையிலும் அவதானிக்க முடிகின்றது.
இந்திய அரசாங்கத்துடனான பேச்சுக்களில் பங்கெடுக்கின்ற ஜனாதிபதி, அந்தச் சந்திப்புக்களின்போது கூறுகின்ற கருத்துக்களுக்கு எதிர்மாறான கருத்துக்களையே உள்நாட்டில் அரசாங்கத்தின் சார்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடாக அமைச்சர்களும், அரசாங்கத்தின் பேச்சாளராகிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் கூறி வந்திருக்கின்றனர் அதேபோன்ற ஒரு இரட்டை நிலைப்பாட்டைக் கொண்ட முரண்பட்ட கருத்துக்கள் இப்போதும், இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்தித்து இருதரப்புப் பேச்சுக்களை நடத்திய பின்னர்இவெளியிடப்பட்டிருக்கின்றன.
இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படமாட்டாது என்பதையேஇ அரசாங்கத்தின் இத்தகைய இரட்டை நிலைப்பாடு எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகளை இல்லாதொழித்ததன் பின்னர்இ இனப்பிரச்சினை என்ற ஒன்று இலங்கையில் கிடையாது என்பதை நிலைநாட்டுவதற்கான அரசியல் எத்தனங்களையும் அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது. இதன் காரணமாகத்தான், ‘இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்று இருந்தால், அது இலங்கையின் உள்ள ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும்’ என்று சொற்களைத் தேடியெடுத்து மிகவும் நிதானமாகச் சொல்லியிருக்கின்றார்.
விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காகவே ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களின் அஹிம்சைப் போராட்டங்களினாலும்இ அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழையாத இயக்கத்தினாலும் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லை. பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக அஹிம்சை வழி போராட்டங்களை ஆயுத பலம் கொண்டு அரசாங்கம் அடக்கியொடுக்கியது. 1956, 1977இ 1983 போன்ற காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் மீது அரச ஆதரவு வன்முறைகள் அளவு கணக்கின்றி கட்டவிழ்த்துப்பட்டிருந்தன. இதனால் குறைவடைவதற்குப் பதிலாகஇ பிரச்சினைகள் அதிகரித்தன. இதன் காரணமாகவேஇ தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இந்த ஆயுதப் போராட்டத்திற்கு இந்தியா முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. இது வரலாற்று உண்மை.
ஆயினும் ஆயுதப் போராட்டத்தையும் அடக்கியொடுக்குவதற்கு அதிகூடிய இராணுவ பலத்தை அரசாங்கம் பயன்படுத்தத் தொடங்கியபோதேஇ இந்தியா இலங்கை விவகாரத்தினுள் நேரடியாகத் தலையிட்டது. பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் அதிகாரங்களைப் பரவாலக்கும் விதத்தில் மாகாண சபை முறைமையை அறிமுகம் செய்து இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில்இ அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தின் விளைவாகவே இலங்கையின் அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்த வகையில் இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா நீண்டகாலமாகவே நேரடியாகப் பங்கேற்று வந்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல் இலங்கையின் நெருக்கமான அயல்நாடு என்ற வகையிலும்இ இலங்கை விவகாரங்களில் இந்தியா அக்கறை செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இதற்கும் அப்பால் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் ஆளுமை, பாதுகாப்பு, பொருளாதார ரீதியான வளர்ச்சி என்பவற்றில் கேந்திர முக்கியத்துவமிக்க தீவாகிய இலங்கையின் ஊடாக பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும் இந்தியா இலங்கை மீது நெருக்கமான உறவையும் அவதானிப்பையும் கொண்டிருக்க வேண்டிய நிலைமைக்குள் ஆழ்ந்திருக்கின்றது.
இத்தகைய புறக்காரணங்களினால், இந்தியா விரும்பியோ விரும்பாமலோஇ இலங்கையின் எரியும் பிரச்சினையாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற இனப்பிரச்சினையிலும், தீவிர கவனம் செலுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பைக் கொண்டிருக்கின்றது. காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான இந்திய அரசுகள் மீது, கடந்த காலங்களில் இந்தப் பொறுப்பைச் சரியான முறையில் கொண்டு நடத்தவில்லை என்ற வெளிப்படையான குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்இ மானுடத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்பவற்றுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு தொடர்பில் சர்வதேச மட்டத்தில் குறிப்பாக ஐநா மனித உரிமைகள் பேரவை மட்டத்தில் இந்தியா உரிய முறையில் செயற்படவில்லை என்ற ஆதங்கம் இலங்கைத் தமிழ் மக்களிடம் இருக்கின்றது. இந்த ஆதங்கத்தை அவர்கள் பகிரங்கமாகவும்இ நேரடியாகவும் வெளிப்படுத்தியிருந்தார்கள். நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறக் கூடாது என்ற விருப்பத்தைக் கொண்டிருந்ததுடன் தேர்தலில் அந்தக் கட்சி அடைந்த தோல்வியைக் கண்டு அவர்கள் வெளிப்படையாகவே மகிழ்ந்திருந்தார்கள்.
இந்த நிலைமையில் புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் உறுதியாகச் செயற்பட வேண்டும். அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர்இ இலங்கை அரசாங்கம் இராணுவ மேலாதிகத்துடன் செயற்பட்டு வருவதனால் எற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு முடிவு கட்டுவதற்கு இந்திய அரசாங்கம் முன்வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.
இந்த எதிர்பார்ப்பின் பின்னணியிலேயே இந்தியப் பிரதமருக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும், அந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இலங்கை அசாங்கத்தின் நடவடிக்கைகள் எப்படி அமையப் போகின்றன என்பதையும், அந்த நடவடிக்கைகள் தொடர்பில் புதிதாகப் பதவியேற்றுள்ள இந்திய அரசாங்கத்தின் பிரதிபலிப்புக்கள் எப்படி இருக்கப் போகின்றன என்பதையும் இலங்கைத் தமிழ் மக்கள் ஆர்வத்தோடு நோக்கியிருக்கின்றார்கள்.
இராணுவ ஆக்கிரமிப்பும், நில அபகரிப்பும்
வடக்கும் கிழக்கும் தமிழர்களுடைய பாரம்பரிய தாயகப் பிரதேசம். அங்கு அவர்கள் சுயமாகத் தமது நிர்வாகத்தை எந்தவிதத் தலையீடுமின்றி தஙர்களே கொண்டு நடத்தக் கூடிய ஆட்சிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் அரசியல் அபிலாஷையாகும். அவர்கள் தமது தனித்துவத்தைப் பேணியவாறு கொழும்பில் இருந்து செயற்படுகின்ற அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பமாகும். பெரும்பான்மை இன மக்கள் எவ்வாறு சுதந்திரமான ஆட்சி முறையைக் கொண்டிருக்கின்றார்களோ மேற்கொள்கின்றார்களோ அந்த வகையில் தமிழர்கள் தமது காரியங்களை மேற்கொள்வதற்குரிய அதிகார பலமும், சுதந்திரமும் கெண்ட ஆட்சி முறைமையொன்று தங்களுக்கும் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பாகும்.
ஆனால் இந்த எதிர்பார்ப்பானது பெரும்பான்னை இனத்தவராகிய சிங்கள அரசியல்வாதிகளினால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. அல்லது, பெரும்பான்மை இனம் என்ற காரணத்தினால் ஏனைய சிறுபான்மை இனமக்கள் தங்களுக்குக் கீழே அடிபணிந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடுஇ தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்பை வேண்டுமென்றே தவறாக அர்த்தப்படுத்திஈ அவர்களின் எதிர்பர்ப்பை இல்லாமல் செய்ய முயன்று வருகின்றார்கள்.
இதன் காரணமாகத்தான் இணைந்திருந்த வடக்கும் கி;ழக்கும் அரசியல் உள்நோக்கத்துடன் நீதிமன்றத்தின் துணையோடு சிங்கள தீவிர்வாதிகளின் மூலமாக அரசாங்கத்தினால் பிரிக்கப்பட்டது என்பது அவர்களுடைய குற்றச்சாட்டாகும். அது மட்டுமல்லாமல் இந்த இரு மாகாணங்களும் இணைந்துவிடக் கூடாது என்பதற்காக இவற்றுக்கிடையில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதும் அவர்களின் குற்றச்சாட்டாகும்.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு அப்பால் விடுதலைப்புலிகள் இறுதி யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், தேசிய பாதுகாப்புக்காக என்ற பெயரில் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு நிரந்தர தளங்களை அமைப்பதற்கும் நிரந்தர இராணுவ குடியிருப்புக்களை அமைப்பதற்குமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது என்று குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
வலிகாமம் வடக்கில் பொதுமக்கறுக்குச் சொந்தமான 6000 ஏக்கர் காணிகளும் வவுனியா செட்டிகுளத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் முகாமாகிய மனிக்பாம் முகாம் அமைந்திருந்த 6000 ஏக்கர் நிலப்பரப்பும் இராணுவத் தேவைக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதேபோன்று மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்கான பெருமளவு நிலப்பரப்பும் அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டு அங்கு குடியிருப்புக்களை அமைக்கும் பணியில் இராணுவத்தினரை அரசு ஈடுபடுத்தியிருக்கின்றது.
இதேபோன்று இராணுவ முகாம்கள்இ பொலிஸ் நிலையங்கள் என்பவற்றை அமைப்பதற்கும் அல்லது யுத்த காலத்தில்இ அந்தச் சூழலின் தேவையைக் கருத்திற்கொண்டு இராணுவமும் பொலிசாரும் நிலைகொண்டிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளையும் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொதுமக்களும்இ பொதுமக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களும் முறையிட்டிருக்கின்றார்கள்.
இந்த வகையில் அண்மைய நடவடிக்கையாக யாழ்ப்பாணம் அச்சுவேலியில் பொலிஸ் நிலையம் இயங்கி வருகி;ன்ற மாடி வீட்டுடன் கூடிய தனியாருக்குச் சொந்தமான காணியை பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமாக்குவதற்கான சுவீகரிப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது.
அதேபோன்று அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அந்தக் காணியையும் அதன் அயலில் உள்ள தனியாருக்குச் சொந்தமான 4 ஏக்கர் காணியையும் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்களுக்குச் சொந்தமான பெருமளவு காணிகள் இராணுவத்தினராலும் அரசினாலும் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் சுமார் இருபதினாயிரம் இடம்பெயர்ந்த குடும்பங்கள் சொந்தக் காணிகளில் குடியேற முடியாமலும் உரிய குடியிருப்புக்கான காணிகளின்றியும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த குடும்பங்கள் அனைத்தும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக அரசாங்கம் பிரசாரம் செய்து வருகின்றது. உண்மையாகவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாமல் தவித்துக் கொண்டிக்கின்ற நிலைமையில்தான் மன்னார் முசலி பிரதேசத்தில், முன்னர் சிங்கள மக்கள் இல்லாத ஒரு பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் என்ற பெயரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
மீள்குடியேற்றப்படுகின்ற குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்த காலத்தில் எங்கு வசித்தார்களோ அந்தப் பிரதேசத்தில் உள்ள அரச அதிகாரிகளின் உறுதிக்கடிதம் கொண்டு வந்தால் மட்டுமே மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த சிங்களக் குடும்பங்களுக்கு அத்தகை விதிமுறைகள் மீறப்பட்டு எந்தவிதமான ஆவணங்களும் கோரப்படாமல்இ மீள்குடியேறுவதற்காக விண்ணப்பித்திருக்கின்றார்கள் என்ற காரணத்தை மட்டும் முன் வைத்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
அரச உயர்மட்டச் சந்திப்புக்களில் அதிகாரப் பரவலாக்கல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை பற்றி உறுதி அரச தலைவர்கள் உறுதியளிப்பதும், மறுபுறத்தில் உள்நாட்டில் அமைச்சர்களும் அரசு சார்ந்தவர்களும் அதற்கு முரணான கருத்துக்களை வெளியிடுவதும் காலம் காலமாக நடந்து வருகின்றது. அதேநேரம் மறுபக்கத்தில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதிலும்இ இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்வதிலும் பல நடவடிக்கைகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் போக்கு இனப்பரம்பலின் இயல்பு நிலையைப் பாதிக்கச் செய்வதுடன், பாரதூரமான எதிர்கால விளைவுகளை ஏற்படுத்தவுமே வழிவகுக்கும். எனவே இந்தியாவி;ல் பதவியேற்றுள்ள புதிய அரசாங்கமும், புதிய பிரதமர் நரேந்திரமோடியும் காலம் கடத்தாமல் இலங்கை விவகாரத்தில் உடன் கவனம் செலுத்தி உண்மை நிலைமைகளைக் கண்டறிந்து பிரச்சினைகள் கைமீறிச் செல்லாமல் தடுப்பதுடன் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
- செல்வரட்ணம் சிறிதரன் -
நன்றி – வீரகேசரி
13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த தயார்!- இந்தியாவுக்கு அறிவிப்பு
இலங்கை அரசியல் அமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தில்
உள்ள பொலிஸ் அதிகாரத்தை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களை அமுல்படுத்த முடியும் என அரசாங்கம், இந்தியாவுக்கு அறிவித்துள்ளது.இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி , அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையான அமுல்படுத்துமாறு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் இதனை கூறியுள்ளது.
பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால், பொலிஸ் திணைக்களம் முற்றாக வீழ்ச்சியடையும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள ஏனைய அதிகாரங்களை அமுல்படுத்த முடியும் என அரசாங்கம் இந்தியாவிற்கு தெரியப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, இலங்கை அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் சென்ற அதிகாரத்தை மாகாணங்களுக்கு பரவலாக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் மேற்படி தனது முடிவை இந்தியாவுக்கு அறிவித்துள்ளது.
கொபி அனானுக்கு வீசா வழங்குவதா? இல்லையா? முடிவில்லை
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி
அனானுக்கு இலங்கைக்கு வர வீசா அனுமதி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமிக்க உள்ள விசாரணைக் குழுவின் தலைவராக கொபி அனான் நியமிக்கப்பட உள்ளார்.
விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட உள்ள கொபி அனானுக்கு இலங்கைக்குள் வர கட்டாயம் வீசா அனுமதி வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்தில் உள்ள ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இலங்கைக்குள் வந்து அவ்வாறான விசாரணைகளை நடத்த எவருக்கும் வீசா அனுமதி வழங்கப்படாது என்ற அரசாங்கத்தின் கொள்கையை கொபி அனானுக்கும் செயற்படுத்த வேண்டும் என மற்றைய தரப்பு கோரி வருகிறது.
மட்டக்களப்பில் மாவை எம்.பி.மயக்கமடைந்தார் தற்போது நல்ல நிலையில் உள்ளார்
“அனைத்துல சமூகமும் தமிழ் தேசிய அரசியலும் - ஒரு சமகால பார்வை” எனும் கருத்தரங்கில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மயங்கி விழுந்து விட்டார்.
சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் வடக்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சம்பங்கள் தொடர்பில் உணர்வுபூர்வமாக உரையாற்றிக்கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மயங்கி சரிந்து வீழ்ந்த நிலைமையானது அங்கு கூடியிருந்த பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தின் பின்னர் அவர் பழைய நிலைக்கு திரும்பிய பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் பதற்றம் நீங்கியது.
அனைத்துல சமூகமும் தமிழ்த் தேசிய அரசியலும் -ஒரு சமகால பார்வை- கருத்தாடல் நிகழ்வு
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையாக அனைத்துலக சமூகமும் தமிழ் தேசிய அரசியலும் ஒரு சமகால பார்வையென்ற தலைப்பில் நேற்று மட்டக்களப்பு கல்லடியில் கருத்தாடல் நிகழ்வு இடம்பெற்றது.
நேற்று பிற்பகல் 3.00மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,சிரேஸ்ட சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் என பெருந்திரளானொர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் இறுதியாக சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் வடக்கில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சம்பங்கள் தொடர்பில் உணர்வுபூர்வமாக உரையாற்றிக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மயங்கி சரிந்துவீழ்ந்த நிலைமையானது அங்கு கூடியிருந்த பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து சிறிது நேரத்தின் பின்னர் பழைய நிலைக்கு திரும்பிய பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் பதற்றம் நீங்கியது.
ஆதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைமைகள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிரேஸ்ட சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பதிலளித்தனர்.
டென்மார்க்கில் தொடர் கவனயீர்ப்பு நிகழ்வு! கோரக் காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்ட வேற்றின மக்கள்
Holbæk நகரத்ததில் நடைபெற்ற Carnival நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான டெனிஸ் மற்றும் வேற்றின மக்கள் இன அழிப்புக் கோரக் காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டனர்.
உலகில், அநாகரீகமாகவும் காட்டுமிராண்டித் தனமாகவும் மனித நேயம் அறவே அற்ற, இரத்த வெறிபிடித்த, கொடிய சிறீலங்கா அரசைக் கண்டிக்கத் தவறிய, ஐ.நா.வையும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.
மானிட வரலாற்றில் இப்படி ஒரு இனப்படுகொலை இதுவரை நிகழ்ந்ததில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கதென, தங்களின் ஆதங்கங்களை முன்வைத்தார்கள்.
ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடை செய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி தமிழீழ மண்ணில் ஒரு இனவழிப்பை சிங்களப் பேரினவாதம் அரங்கேற்றியது.
தொடர்த்தும் எமது தாயக பூமியில் சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டு மிகவேகமாக சிங்கள குடியேற்றங்களையும் நடாத்தி, தமிழர் நிலப்பரப்பில் எமது கலாசார, பண்பாட்டு சின்னங்களை அழித்தும் பௌத்த சிலைகளை நிறுவியும், சிங்கள பெயர் மாற்றங்களை செய்தும் எமது தாயக பூமியை ஆக்கிரமித்து வருகின்றது.
இதைத் தடுப்பதற்காக டென்மார்க் அரசு உடனடி நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த நிகழ்வில் டெனிஸ் மக்களுக்கு டெனிஸ் மொழியில் திசைகள் இனளயோர் அமைப்பினர்கள் விளக்கம் கொடுக்கப்பட்டதுடன், துண்டு பிரசுரங்கள் வழங்கி தமிழீழ மக்கள் மீது நடத்தப்படுக் கொண்டிருக்கின்ற இனவழிப்பை விளங்கப்படுத்தியுள்ளார்கள்.




.jpg)
