பிரபாகரன் இனி திரும்பி வரமாட்டார் ? - TK Copy பிரபாகரன் இனி திரும்பி வரமாட்டார் ? - TK Copy

  • Latest News

    பிரபாகரன் இனி திரும்பி வரமாட்டார் ?

    கடவுளைப் போலவே அவரும் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வுகளைச் செய்யாமல்- அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என கருதுகின்றோம். எங்கோ ஓர் இடம் போயுள்ளார் என்றும், என்றோ ஒரு நாள் அவர் திரும்பி வருவார் என்றும் காத்திருக்கின்றோம். எமது மனங்களில் என்ன இருந்தாலும், நாம் நம்ப மறுத்தாலும் அவர் இனித் திரும்பி வரப் போவதில்லை என்பதே உண்மையானது என்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பதை அனைவரும் ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஈழக் கட்டுரையாளர் தி.வழுதி. 

    இதுதொடர்பாக புதினம் இணையத் தளத்தில் வழுதி எழுதியுள்ள கட்டுரை... அது நடந்துவிட்டது என்பதனை நம்புவதற்கு நம்மில் பலருக்கு இப்போதும் முடியாமல் இருக்கின்றது. தெளிவாக அறிவுக்குத் தெரிகின்ற ஒரு விடயத்தைக் கூட மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத உளவியல் தாக்கத்தில் நாம் தவிக்கின்றோம். சிறிலங்கா காட்டிய அந்தப் படங்களில் இருந்த அந்த உடல் அவருடையது அல்ல என்றே எம்மில் சிலர் இப்போதும் நம்புகின்றோம். வாழும் காலத்திலேயே கடவுளுக்கு நிகராக நாங்கள் அவருக்கு கொடுத்திருந்த புனித நிலை இப்போது இன்னும் உறுதியானது ஆகின்றது. கடவுளைப் போலவே அவரும் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வுகளைச் செய்யாமல் - அவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டும் என கருதுகின்றோம். 

    எங்கோ ஓர் இடம் போயுள்ளார் என்றும், என்றோ ஒரு நாள் அவர் திரும்பி வருவார் என்றும் காத்திருக்கின்றோம். எமது மனங்களில் என்ன இருந்தாலும் - நாம் நம்ப மறுத்தாலும் - அவர் இனித் திரும்பி வரப் போவதில்லை என்பதே உண்மையானது. தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை பற்றிய தூய்மையான கனவைச் சுமந்து - 37 ஆண்டுகளாக அந்தக் கனவை நனவாக்குவதற்கு மட்டுமே போராடிய அந்த உன்னதமான மனிதர் - எமது இனத்தின் பெருந் தலைவர் - அந்தப் போராட்டக் களத்திலேயே வீழ்ந்து போனார். 'தமிழீழத் தனியரசு' ஒன்றே தமிழர்களுக்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுத்தரும் என்று அவர் நம்பினார். அதனை அமைப்பதற்குச் சிறந்த வழி என தான் நம்பிய ஒரு வழியை அவர் தேர்ந்தெடுத்தார். 

    அந்த வழியிலே தன் பின்னால் அணிதிரண்ட ஆயிரமாயிரம் போராளிகளுக்கு அவர் தலைமையேற்றார். அந்த வழியிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்து எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்யாமல் போராடினார். அந்த வழியிலேயே தன்னைப் பின்தொடர்ந்து வந்த ஒவ்வொரு போராளியையும் அவர் அனுப்பி வைத்தார். அந்த வழியிலேயே அந்தப் போராளிகளை வழிநடத்திய தனது தளபதிகளையும் அனுப்பி வைத்தார். அந்த வழியிலேயே தானும் போராடி எமது கண்களை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து அவர் போய்விட்டார். அந்தப் படங்களைப் பார்த்தேன்: தமிழ்த் தேசிய இனத்தின் கடந்த ஐநூறு ஆண்டுகால வரலாறு அங்கே சரிந்து கிடந்தது. விடுதலைப் போராட்டம் பெற்ற அரசியல் வெற்றிகளின் பெருமை பாலா அண்ணையைச் சாரும். விடுதலைப் போராட்டம் பெற்ற ராணுவ வெற்றிகளின் பெருமை தீபன், பால்ராஜ், சூசை, பொட்டு, கே.பி.... என இன்னும் சிலரைச் சாரும். 

     விடுதலைப் போராட்டத்திற்கு இயங்கு சக்தியைக் கொடுத்த பெருமை தமிழ்த் தேசிய இனத்தையும், அந்தச் சனத்திலிருந்து வந்த எம் போர் வீரர்களையும் சாரும். ஆனால் - சதிகளும், தோல்விகளும், துரோகங்களும், விலை போதல்களும், நெருக்கடிகளும் நிறைந்து கிடந்த மிகக் கரடு முரடான பாதை வழியாக - மனம் தளராமல் - விடுதலைப் போராட்டத் தேரை முன்னோக்கி ஓட்டிச் சென்ற பெருமை பிரபாகரனையே சாரும். கடைசிக் காலத்தில் என்னவிதமான சிந்தனைகள் அவரது மனதில் ஓடியிருக்கும் என்ற யோசனை எழுவதை என்னால் தடுக்க முடியவில்லை. தமிழர் பேராட்டத்தில் நீதியும் தர்மமும் இருந்தும் ஏன் எல்லாம் இவ்வாறு அழிந்து போய் விட்டது என்று யோசித்திருப்பாரா?... அல்லது - 'நீதியும் தர்மமும் இந்த உலகை இயக்குவதில்லை; வல்லரசுச் சக்திகளின் கேந்திர நலன்கள் சார்ந்து மாறி வரும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப நாமும் மாற்றங்களைச் செய்து இயங்க வேண்டும்' என்று பாலா அண்ணை திரும்பத் திரும்பச் சொல்லிய ஆலோசனைகளைக் கிரகித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று நினைத்திருப்பாரா?...

     அல்லது - வெளிநாட்டுப் பணயங்களை முடிந்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் தன்னிடம் திரும்பி வரும் தமிழ்ச்செல்வன், மாறி வரும் உலகின் போக்கு பற்றி சரியான தகவல்களைத் தராமல் தன்னைத் தவறாக வழி நடத்தி விட்டார் என்று நினைத்திருப்பாரா?... அல்லது - உறுதியான ஒர் அரசியல் அடித்தளத்தைப் போடாமல், ராணுவ இயந்திரத்தை மட்டுமே கட்டி வளர்த்ததால் - தமிழினத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தை ராணுவ பலத்தை மட்டுமே அடிப்படையாக்கி வளர்த்ததால் - இன்று அந்த ராணுவக் கட்டமைப்பு உடைந்து நொருங்கும் போது - தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமே நொருங்கி விழுகின்றது என்று உணர்ந்திருப்பாரா?... அல்லது - கடந்த காலங்களில் செய்யப்பட்ட சில விடயங்களைச் செய்யாது தவிர்த்திருக்க வேண்டும் என்றோ, செய்யாது தவிர்த்த சில விடயங்களைச் செய்திருக்க வேண்டும் என்றோ நினைத்திருப்பாரா?.. 

     அல்லது - தவறுகள் பற்றிய எந்தச் சிந்தனையுமே இன்றி - எல்லாவற்றையும் தான் சரியாகவே செய்து, எல்லா முடிவுகளையும் தான் சரியாகவே எடுத்திருந்ததாக நம்பியிருப்பாரா?.. எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் - கடைசிக் காலத்தில் - குழப்பங்கள் ஏதுமற்று அந்த மனிதர் மிகத் தெளிவாக இருந்திருக்கின்றார் என்பதை என்னால் உணர முடிகின்றது. தப்பி ஓடி வேறு ஊர்களுக்குச் சென்று விடாமல் அந்த மண்ணிலேயே அவர் வாழ்ந்திருக்கின்றார். வீட்டுக்கு ஒரு பிள்ளையைப் போராட்டத்திற்காகக் கேட்டவர், தனது பிள்ளைகளையும் அதே போராட்டத்திற்காக அனுப்பி சாகக் கொடுத்திருக்கின்றார். உருவங்கள் மாற்றி மறையாமல் - தலைமயிருக்கு கறுப்பு மை பூசி, சீராக முகத்தைச் சவரம் செய்து - கலக்கம் இல்லாமல், ஒழுக்கம் கலையாமல் அவர் இருந்திருக்கின்றார். 

     அடையாளம் மறைத்து காணாமல் போகாமல் - தான் கனவு கண்ட "தமிழீழம்" என்ற நாட்டிற்கென அவரே உருவாக்கி - மக்களுக்கு வழங்கிய அந்த 'தேசிய குடிமக்கள் அட்டை'யைத் தன் கழுத்திலே அவர் சுமந்திருக்கின்றார். மாற்று உடை தரித்து மாயமாய் போகாமல் தமிழீழத்தின் தேசியப் படைக்கென அவரே உருவாக்கி தன் போராளிகளை களங்களில் அணியச் செய்த சீருடையை அவர் நேர்த்தியாக அணிந்திருக்கின்றார். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் அணிவித்து களத்திற்கு அனுப்பிய சயனைட் நச்சுக் குப்பியை தன் கழுத்திலும் அவர் அணிந்திருக்கின்றார். எத்தனையோ கரும்புலிகளின் உடல்களில் அணிந்து அனுப்பி வைத்த வெடி குண்டு அங்கியை துப்பாக்கிக் குண்டு பட்டு தற்செயலாக வெடித்து விடலாம் என்ற முன்னெச்சரிக்கையுடன் பொட்டம்மான் வற்புறுத்திக் கழற்றும் வரையிலும் தன் உடலில் அவர் அணிந்திருந்திருக்கின்றார். 

    எல்லாவற்றுக்கும் மேலாக தானே துப்பாக்கியை ஏந்திப் போரிட்டு, இறுதியில் தன்னைத் தானே சுட்டு களத்தில் அவர் மடிந்திருக்கின்றார். மில்லர் முதல், திலீபன் முதல் - தான் வழியனுப்பி வைத்த ஒவ்வொரு கரும்புலி வீரரிடமும் - "நீங்கள் முன்னாலே செல்லுங்கள் நான் பின்னாலே வருவேன்" என்று எவ்வளவு தெளிவுடன் சொன்னாரோ அதே தெளிவுடனேயே அவர்கள் பின்னாலேயே அவரும் சென்றிருக்கின்றார். தன்னால் செய்ய முடியாத ஒன்றைச் செய்யும் படி அடுத்தவர்களிடம் கேட்காத மகோன்னதமான தலைமைத்துவப் பண்பின் இலக்கணமாக அவர் வாழ்ந்திருக்கின்றார்... வீழ்ந்திருக்கின்றார். முப்பது வருட காலமாகப் போராடி - சிறிது சிறிதாக அவர் பார்த்துப் பார்த்து கட்டி வளர்த்த தமிழ் சாம்ராச்சியம் - அவரது கண்களுக்கு முன்னாலேயே துகள்களாக உடைந்த நொருங்கி மண்ணோடு மண்ணாகி விட்டது. ஆனால் - இந்த முப்பது வருட காலப் போராட்டத்தில் பிரபாகரன் சாதித்தது உண்மையில் அவர் இந்த மண்ணுக்கு மேலே கட்டி வளர்த்த அந்தத் தமிழ் சாம்ராச்சியம் அல்ல. 

    ஏனெனில் - மண்ணுக்கு மேலே கட்டப்படும் சாம்ராச்சியங்கள் எழுவதும் வீழ்வதுமே வரலாறு. பிரபாகரன் படைத்த உண்மையான சாதனை என்பது - ஒவ்வொரு தமிழனின் மனங்களுக்கு உள்ளும் அவர் கட்டியெழுப்பிய தமிழ் சாம்ராச்சியம் தான். அது நிமிர்ந்து எழுந்து கம்பீரமாக நிற்கின்றது. அது வீழ்ச்சி அற்றது. "தமிழீழம்" என்ற விதையை எம் ஒவ்வொருவரது ஆத்மாவிற்குள்ளும் அறிவிற்குள்ளும் அவர் ஆழப் புதைத்துவிட்டு சென்றிருக்கின்றார். விடுதலை பெற்ற மனிதர்களாக - மதிப்புடனும் பெருமையுடனும் - இந்த உலகில் நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற வெறியையும், வாழ முடியும் என்ற நம்பிக்கையையும் எமக்குள் அவர் ஊட்டிவிட்டுச் சென்றிருக்கின்றார். 

    தமிழ்த் தேசியத்தை திடப்படுத்தி, தமிழர் தாயகக் கோட்பாட்டை வலுப்படுத்தி, தமிழர் தன்னாட்சி உரிமைக் போரிக்கையைப் பலப்படுத்தி - எங்கள் இனத்தின் சின்னமாக, எங்களது அரசியல் அடையாளமாக, எங்கள் தேசியத்தின் குறியீடாக, எங்கள் கோபத்தினதும் சோகத்தினதும் மகிழ்ச்சியினதும் வெளிப்பாடாக - தனது சாவுக்குப் பின்னாலும் நின்று நிலைத்து வாழும் வகையான ஒரு கொடியைத் தமிழுக்கு அவர் தந்துவிட்டுச் சென்றிருக்கின்றார். இன்று இந்த உலகமும், சிங்களவர்களும், இந்தியாவும் அச்சப்படும் விடயம் - பிரபாகரன் எங்கள் மனங்களுக்குள் கட்டியெழுப்பிவிட்டுச் சென்றிருக்கும் அந்த வீழ்த்த முடியாத சாம்ராச்சியம், அவர் எமக்கு ஊட்டிவிட்டுச் சென்றிருக்கும் உறுதியும் துணிவும் வீரமும் தான்.  
    பிரபாகரன் தோன்றுவதற்கு முன்னால் - வீரம், துணிவு, உறுதி என்பவை பற்றியெல்லாம் தமிழர்கள் புத்தகங்களில் படித்து, திரைப்படங்களில் பார்த்ததோடு சரி. ஆயுதப் போராட்டமே ஒரே வழி எனத் துணிந்து வந்தவர்கள் கூட இந்தியாவின் ஆதிக்க ஆளுமைக்கு விட்டுக்கொடுத்து தமிழர்களின் உரிமைகளைக் கைவிடும் நிலைக்குள் தள்ளப்பட்டனர். சரியோ தவறோ - அந்த மனிதர் மட்டுமே தொடர்ந்து நடந்தார்; அந்த மனிதர் மட்டுமே - எங்கள் ஆத்ம தாகத்தின் முகமாக இந்த உலகிலே திகழ்ந்தார். அந்த மனிதர் மட்டுமே - எங்களாலும் முடியும் என்று எங்களையே நம்ப வைத்தார். தம்மைத் தாமே ஆளும் வகையான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இந்த உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆகுவதற்கு அந்த மனிதர் மட்டுமே காரணம். 

    சரிகளுக்கும் தவறுகளுக்கும் அப்பால் அந்த மனிதர் ஒரு புனிதமான கனவோடு வாழ்ந்தார். நாம் எல்லோருமே சுமந்த அந்தக் கனவை நிறைவு செய்வதற்குச் சிறந்த வழி எனத் தனக்குப்பட்ட ஒரு வழியில் எந்தச் சலசலப்பும் இன்றி அவர் நடந்தார். அந்தப் பணயத்தில் சில தவறுகளைச் செய்யும் சூழ்நிலைக்குள் வரலாறு அவரை நிர்ப்பந்தித்தவிட்டது. தவறுகளாகப் பார்க்கப்படும் இன்னும் சில நிகழ்வுகள் உண்மையிலேயே தவறுகள் தானா என்பதை அந்த வரலாறே நாளை தீர்மானிக்கட்டும். தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலை என்ற அதியுயர் இலக்கு நோக்கிய ஒரு மிகப் பிரமாண்டமான போராட்டத்தை நகர்த்திச் செல்லும் போது - அந்த இலக்கு மட்டுமே அவரது கண்களுக்குத் தெரிந்ததால், ஏனைய சில விடயங்களை அவர் பார்க்கத் தவறிவிட்டார் என்பது உண்மை தான். 

    அவரைப் பொறுத்தவரையில் - தமிழ் மக்களைத் தலைநிமிர்ந்து வாழ வைக்க வேண்டும் என்பது தான் அவர் வரித்துக் கொண்ட இலட்சியம். அந்த இலட்சியத்தில் களங்கமற்றவராகவே அவர் எப்போதும் இருந்தார். அந்த இலட்சியத்திற்காகவே வாழ்ந்து, அந்த இலட்சியத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து, அந்த இலட்சியத்திற்காகவே வீழ்ந்தும் போனார் அந்தப் பெரு மனிதன். அவரது இழப்பைத் தாங்கும் மனத் திடம் எமக்கு இல்லாமலிருக்கலாம்; அல்லது, அவரது வீரச்சாவை ஏற்க முடியாமல் வேறு ஏதும் காரணங்கள் எம்மைத் தடுக்கலாம்; ஆனால், அத்தகைய எமது மனப் பலவீனங்களோ, அல்லது வேறு காரணங்களோ - 37 ஆண்டுகளாக எமக்காகவே போராடி வீழ்ந்த அந்த மாதலைவனுக்கு நாம் செலுத்த வேண்டிய இறுதி வணக்க மரியாதைகளைச் செய்ய விடாமல் எம்மைத் தடுப்பவையாக இருப்பது நியாயப்படுத்த முடியாத பெரும் தவறு... 

    ஒரு வகையில், அது நாம் அவருக்கு இழைக்கும் துரோகமும் கூட. அவர் "இருக்கிறார்" என்றும் "இல்லை" என்றும் ஒரு மர்மத்தை நீடித்துச் சென்று, அவர் இருப்பதைப் போலவே ஒரு மாயையை வளர்த்துச் சென்று, திரும்பவும் எழுந்தருளி அவர் வருவார் என்ற பொய்யான நம்பிக்கையை ஊட்டிச் செல்வது ஏற்றுக்கொள்ள முடியாத பெரும் தவறு... ஒரு வகையில், அது அவரை நம்பி இந்தப் போராட்டத்தின் முதுகெலும்பாய் இருந்த மக்களுக்குச் செய்யும் இரண்டகம். அவரது இல்லாமையை ஏற்றுக்கொண்டு, அவருக்குரிய இறுதி வணக்கங்களைச் செலுத்திவிட்டு, விடுதலைப் போராட்டம் பற்றிய முழுமையான தெளிவைப் பெற்றுக் கொண்டு, அவர் விட்டுச் சென்றிருக்கும் தலைமைத்துவ இடைவெளியைப் பொருத்தமான முறையில் நிவர்த்தி செய்துகொண்டு - வரலாற்றை அடுத்த கட்டத்திற்கு நாம் எல்லோருமாகச் சேர்ந்து நகர்த்துவதே தேவையானதும் நேர்மையானதுமாகும்... 

    ஒரு வகையில் அதுவே நாம் அவருக்குக்கு வழங்கும் மரியாதையும் கூட. தேசத் தந்தை எஸ். ஜெ.வி செல்வநாயகத்தி்ன் மறைவுடன் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்ட 'தமிழீழப் போர் - 1' முடிவுக்கு வந்தது. தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் வீரச்சாவுடன் ஆயுதம் தாங்கி முன்னெடுக்கப்பட்ட 'தமிழீழப் போர் - 2' முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் - தமிழர் போராட்டம் இன்னும் முடிவுக்கு வந்துவிடவில்லை. ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இழந்த எமது ஆட்சியும், கடந்த அறுபது ஆண்டு காலமாக நாம் இழந்து வரும் எம் அடிப்படை அரசியல் உரிமைகளும் இன்னும் மீளவும் வென்று எடுக்கப்பட்டுவிடவில்லை. மிகக் கொடூரமான இன அழிப்புப் போரிற்குள் சிக்கி - உருக்குலைந்து - முட்கம்பி வேலிகளுக்குள் முடங்கிச் சிறையிடப்பட்டிருக்கும் எமது மக்களின் கெளரவமான வாழ்வு இன்னும் மீளவும் பெற்று எடுக்கப்பட்டுவிடவில்லை. 

    முன்னாலே சென்றுவிட்ட அந்தத் தலைவன் வழியில் பின்னாலே செல்வதே இப்போது எம் முன்னால் உள்ள தலையாய கடமை. பிறந்திருக்கின்ற இந்தப் புதிய சூழலில் - புதிய சிந்தனையுடன், புதிய வழிமுறைகளில் - இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்கர்கள் என்று பிரிந்திருக்காமலும் அமைப்புக்கள், இயக்கங்கள், கட்சிகள் என்று சிதறியிருக்காமலும் - திறந்த மனதுடன் - "தமிழர்கள்" என்ற ஒரே அடையாளத்தின் கீழ் மட்டும் நாம் அணிதிரள்வோம். அவர் காட்டிய உறுதியுடன்... அவர் காட்டிய விடா முயற்சியுடன்... அவர் காட்டிய ஒழுக்கத்துடன்... அவர் காட்டிய இன பக்தியுடன்... - முப்பது ஆயிரம் தமிழ் போர் வீரர்கள் அணிவகுத்த - அவர் ஏற்றி வைத்துவிட்டுப் போயிருக்கும் எங்கள் தேசத்தின் தேசியக் கொடியின் கீழ் நாமும் அணிதிரள்வோம். அவர் விட்டுச் சென்ற இடத்திலிருந்து புதிய வேகத்துடன், முன்னெடுப்போம்... என்று கூறப்பட்டுள்ளது.
    Newer Post
    Previous
    This is the last post.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: பிரபாகரன் இனி திரும்பி வரமாட்டார் ? Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top