வட மாகாணத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் கேட்ட ஊடகவியலாளர்களுக்கு தான் கணக்காளர் இல்லை என்ற பதிலை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இன்று தெரிவித்துள்ளார்.
வடக்கிலுள்ள இராணுவத்தினரின் அளவைக் குறைத்து அவர்களை இலங்கையின் வேறு இடங்களில் பணியில் அமர்த்த முகாம் அமைப்பதற்கும் மக்கள் எதிர்த்து வருகின்ற அதேவேளை வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுமாறும் சிலர் கொந்தளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராணுவப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்மையில் ஹொறண – றய்கம தோட்ட மக்கள் இராணுவ முகாம் அமைப்பதற்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இது குறித்து கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர், அந்த தோட்டத்திலுள்ள 20 ஏக்கர் நிலப்பரப்பை பணம் கொடுத்து கொள்வனவு செய்ய இராணுவம் தீர்மானித்துள்ளதாக கூறினார்.
இதற்கு அந்த தோட்ட முகாமையும் இணக்கம் வெளியிட்டிருப்பதாகவும், அரசாங்கத்தினால் இராணுவத்துக்காக ஒதுக்கப்படும் நிதியிலிருந்தே இந்த செலவை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.மேலும் செட்டிக்குளம் - ஆண்டியா புளியங்குளம் பகுதியில் மட்டுமல்ல, ஸ்ரீலங்காவில் எந்த பகுதியிலும் எவ்விதத்திலும் இராணுவம் பலவந்தமாக காணிகளை சுவீகரிப்பதில்லை என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
தேவைப்படும் பட்சத்தில் சட்டரீதியாக தேவையான இடத்தில் முகாம்களை அமைக்க காணிகளைக் கொள்வனவு செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்போது வடக்கில் உள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்த இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, அந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ள தான் கணக்காளர் இல்லை என பதிலளித்தார்.மேல் மாகாணத்தில் இராணுவத்தின் 30 சதவீத படையினர் அமர்த்தப்பட்டிருப்பதாகவும், அவ்வாறு பார்க்கும்போது வடக்கில் உள்ள படையினரின் அளவைக் கணித்துக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.