சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக, மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக முன்னிறுத்தியுள்ள எதிரணியின் சார்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரபூர்வமற்ற பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் தேர்தல் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் அமைப்பாளர் வண.மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.இந்தப் பேச்சுக்களில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்குச் சாதகமான சமிக்ஞைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால், இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எதிரணியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடன்பாடு எதிலும் கைச்சாத்திடாத போதிலும், பொதுவேட்பாளருக்கு ஆதரவளிப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அதிபர் தேர்தல் தொடர்பாக, மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் எதிரணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் அதிகாரபூர்வமற்ற கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக, எதிரணியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.