ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படைக்கு ஒத்துழைப்பு
வழங்குவதற்காக இனப்படுகொலை இராணுவம் எனக் குற்றச்சாட்டிலுள்ள இலங்கை விமானப்படையைச் சேந்த 17 அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று எம்.ஐ.17 ஹெலிகொப்டர் சகிதம் மத்திய ஆபிரிக்க குடியரசுக்கு புறப்படுச் சென்றுள்ளது.இலங்கை விமானப்படையின் ஏற்பாட்டில் விமானப்படைத்தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான்வணிகசூரிய, விமானப் படையின் பதில் ஊடகப் பேச்சாளர் வின்ங் கொமான்டர் பி.என்.டி.கொஸ்தா, உட்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
அங்கு தொடர்ந்தும் விமானப்படைத் தளபதி உரையாற்றுகையில்,
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையானது அதன் அமைதிப்படையில் இலங்கை படைத்தரப்பினரையும் உதவிகளை வழங்குமாறு கோரியிருந்தது. இருப்பினும் நாட்டில் காணப்பட்ட அசாதாரண நிலைமையினால் அவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்ளமுடியாது போனது. அதற்குப் பின்னரான காலப்பகுதியில் இராணுப்படையினர் ஐ.நா.படையினருக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக சென்றிருந்தனர்.
இந்நிலையில் முதற்தடவையாக இலங்கையின் விமானப்படையினர் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையினருக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக மத்திய ஆபிரிக்க குடியரசுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 17விமானப்படை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் எம்.ஐ 17 ஹெலிகொப்டர் சகிதம் புறப்பட்டுள்ளனர். இக்குழுவில் விமானிகள், பொறியியலாளர்கள், மற்றும் ஏனைய துறைசார்ந்த வல்லுநர்கள் உள்ளடங்கியுள்ளனர். இத்துடன் அவர்களுக்கான அனைத்து உபகரணங்களும் கப்பல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
எமது நாட்டு படைத்தரப்பின் செயற்பாட்டு சாதனைகள் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நன்மதிப்பை பெறுதற்கு உறுதுணையாக இருக்கும். அத்துடன் இவ்வாறு ஐ.நா.அமைதி காக்கும் படையில் பங்கேற்கும் எமது விமானப்படைக் குழாமானது பிரபுக்களின் பயணத்திற்கு உதவுதல், கரையோரக் கண்காணிப்பு, காயப்பட்டவர்களுக்கான போக்குவரத்து, உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் செல்லல், உள்நாட்டு வான்பயணங்கள் ஆகிய பிரிவுகளில் கடமையாற்றவுள்ளனர். இவர்கள் சுமார் ஒருவருடத்திற்கு இக்கடமையில் இருப்பார்கள்.
அதேநேரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழே அமைதிகாக்கும் படையில் செயற்படுவதற்காக மொத்தமாக 100 முதல் 150வரையிலான அதிகாரிகளும் மூன்று எம்.ஐ.17ஹெலிகொப்டர்களும் மற்றும் உபகரணங்களும் எம்மால் அனுப்பிவைப் பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இரண்டாவது கட்டமாக தென்சூடானுக்கு எம்.ஐ.17 ஹெலி கொப்டர் சகிதம் குழுவொன்று அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.