கழுத்தில் கத்தி கலக்கத்தில் விஜய் -விகடன் - TK Copy கழுத்தில் கத்தி கலக்கத்தில் விஜய் -விகடன் - TK Copy

  • Latest News

    கழுத்தில் கத்தி கலக்கத்தில் விஜய் -விகடன்

    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


    இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய், இங்கிலாந்தைச்
    சேர்ந்த'லைக்கா டெல்’ நிறுவனம்... என பிரமாண்ட கூட்டணியில் உருவாகியுள்ளது 'கத்தி’ திரைப்படம். தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களில் தமிழ் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருப்பது இதைத்தான். ஆனால், இப்போது அந்தத் திரைப்படத்தின் கழுத்துக்குக் கத்தியைத் தொங்கவிட்டுள்ளனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். ஐங்கரன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் கருணா மூர்த்தியும் இயக்குநர் முருகதாஸும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை அண்மையில் இது தொடர்பாக சந்தித்துப் பேசினார்கள்.

    ஆனாலும், 'கத்தி’க்கு ஏற்பட்டுள்ள அபாயம் இன்னும் நீங்கவில்லை. இதுபற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னி அரசுவிடம் பேசினோம்.
    ''கத்தி திரைப்படத்தின் இயக்குநர் முருகதாஸ், நடிகர் விஜய் மற்றும் படத்தின் கதையோடு எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரனும் 'லைக்கா புரொடஷன்ஸ்’ என்ற அவருடைய தயாரிப்பு நிறுவனமும்தான் இப்போது பிரச்னை. 
    இந்த நிறுவனம், இலங்கையில் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்தி அங்கிருந்த தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நேரடியான பினாமி நிறுவனம். 
    லைக்கா டெல், லைக்கா ஃபிளை, லைக்கா மணி, லைக்கா டிராவல்ஸ் என்று பல வியாபாரங்களில் இதுவரை ஒன்றாக செயல்பட்டு வந்த இவர்கள், இப்போது லைக்கா புரொடக்ஷன் என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பில் இறங்கியுள்ளனர். ராஜபக்ஷேவுக்கு எதிராக உலகத் தமிழர்களிடையே இருக்கும் மனநிலையை மாற்றுவதுதான் இவர்களின் செயல்திட்டம்.
    இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதற்கு முன், காமன்வெல்த் பிசினஸ் ஃபோரம்-2013 என்ற பெயரில் அங்கு பல அந்நிய முதலீட்டாளர்களின் கூட்டமும் நடைபெற்றது. அப்போது அதிகப்படியாக ஸ்பான்ஸர் கொடுத்து 'கோல்டன் ஸ்பான்ஸர்’ ஆக இருந்தது லைக்கா டெல் நிறுவனம். 
    ஆரம்பத்தில் காமன்வெல்த் மாநாட்டுக்காக இலங்கை செல்ல மாட்டேன் என்று சொன்ன பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனை, சமாதானம் செய்து இலங்கைக்கு அழைத்து வந்ததும் லைக்கா டெல் நிறுவனம்தான். டேவிட் கேமரூனின் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு லைக்கா நிறுவனம் ஏராளமான நன¢கொடையை தொடர்ந்து வழங்கியிருந்ததால் அது சாத்தியமானது. 
    இதுகுறித்து கேள்வி எழுப்பிய லேபர் பார்ட்டியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாம் பிளங்கின்ஷாப், 'ராஜபக்ஷேவின் தயவில் செயல்படும் லைக்கா நிறுவனத்திடம் இருந்து கன்சர்வேட்டிவ் பார்ட்டி தொடர்ந்து நன்கொடை பெறுகிறது. அதனால்தான், மக்களின் உணர்வுகளை மதிக்காமல் டேவிட் கேமரூன் இலங்கை சென்றார். அது ஒரு நாடகம்’ என்று விமர்சனம் செய்தார்.
    'டூரிஸம் பேக்கேஜ்’ என்ற பெயரில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வேலையையும் லைக்கா நிறுவனம் நடத்தி வருகிறது.
    சுபாஷ்கரன் அவரது தாய் ஞானாம்பிகையின் பேரில் இலங்கையில் நடத்தும் 'ஞானம் ஃபவுண்டேஷன்’, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்த மாவட்டங்களில் நேரடியாக நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. வடக்கு மாகாண அமைச்சர்களைக்கூட அந்தப் பகுதிக்குள் இலங்கை ராணுவம் அனுமதிப்பது இல்லை. 
    ஆனால் ராணுவ ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, இதுபோன்ற உதவிகளை சுபாஷ்கரனும் அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் செய்கிறார்கள் என்றால், அவருக்கும் ராஜபக்ஷேவுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொள்ள முடியும்.
    தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக உள்ள மனநிலையை மாற்ற வேண்டும் என்பதுதான் இவர்களின் திட்டம். அதற்கு விஜய், முருகதாஸ் போன்றவர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். திரைப்படத்துக்கு எதிராக அத்தனை வழிகளிலும் போராடி அந்தத் திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதைத் தடுப்போம்'' என்றார்.
    'கத்தி’ திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியான சுந்தரராஜன் நம்மிடம் பேசினார். '' 'கத்தி’ திரைப்படம் தமிழர்களுக்கு எதிரான படமும் அல்ல. தமிழர்களுக்கு எதிரானவர்கள் தயாரித்த படமும் அல்ல. சுபாஷ்கரன் என்ற ஈழத்தமிழருக்கு சொந்தமான லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள படம். 1980-களில் ஈழத்தைவிட்டு வெளியேறிய சுபாஷ்கரன் தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களின் கௌரவமான அடையாளமாக இருந்து வருகிறார். 
    தன்னுடைய தாயார் ஞானாம்பிகை பெயரில் 'ஞானம் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பைத் தொடங்கி இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் நேரடியாக பல நலத்திட்ட உதவிகளைச் செய்துவருகிறார். ராஜபக்ஷேவை அவர் எப்படி ஏற்றுக்கொள்வார்? அவருக்கு எப்படி பினாமியாக செயல்படுவார்? இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளுக்குக் காரணம், லைக்கா நிறுவனத்தில் இருந்து வெளியேறி தனியாகத் தொழில் நடத்தும் சில போட்டியாளர்கள்தான். இப்படிப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி பிரச்னைகளைத் தூண்டிவிடுகின்றனர். இதை வைத்து பணம் சாம்பாதிக்க நினைப்பவர்கள், எங்களைப் புரிந்துகொள்ளாதவர்களைப்போல் நடிக்கின்றனர். நிச்சயமாக தீபாவளிக்கு 'கத்தி’ திரைப்படம் ரிலீஸ் ஆகும்'' என்றார்.
    தீபாவளிக்கு முன்னரே பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிட்டது!
    சுபாஷ்கரனின் பின்னணி என்ன?
    யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர் சுபாஷ்கரன். இவரது தந்தை அல்லிராஜா. தாயார் ஞானம்பிகை. இவர் 1980-களில் இலங்கையைவிட்டு வெளியேறி பல்வேறு வெளிநாடுகளில் வசித்தவர். அந்த சமயங்களில் போரினால் பாதிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைபவர்களுக்கு தங்க இடம், வேலை ஆகியவற்றை ஏற்பாடுசெய்து சம்பாதித்து வந்தார். 
    இலங்கையில் இருந்து வந்தவர்கள் தங்கள் சொந்த நாட்டில் உள்ள உறவினர்களுக்கு தொலைபேசியில் பேசுவதற்கு எக்கச்சக்க கட்டணம். அந்தச் சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுபாஷ்கரன், வெளிநாடு வாழ் இந்தியரான மிலிந்த காங்லி என்பவருடன் சேர்ந்து லைக்கா டெல் என்னும் செல்போன் நிறுவனத்தை 2003-ல் ஆரம்பித்தார்.
    விவகாரம் வெளிவந்தது எப்படி?
    லைக்கா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், சுபாஷ்கரனுடன் சேர்ந்து லைக்கா நிறுவனத்தைத் தொடங்கியவருமான வெளிநாடுவாழ் இந்தியர் காங்லி, கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷ்கரனை விட்டுப் பிரிந்து சென்றார். பிரிந்துபோன அவர், தனியாக லிபரா என்ற மொபைல் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். 'இவர்தான் கத்தி படம் பற்றி நெகட்டிவ் தகவல்களை மீடியாவில் பரப்புகிறார் என்று லைக்கா ஆட்கள் சொல்லிவருகிறார்கள்.’
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கழுத்தில் கத்தி கலக்கத்தில் விஜய் -விகடன் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top