யானையைப்பற்றி நரிகள் தப்புக்கணக்கு போடக்கூடாது -முதலமைச்சர் - TK Copy யானையைப்பற்றி நரிகள் தப்புக்கணக்கு போடக்கூடாது -முதலமைச்சர் - TK Copy

  • Latest News

    யானையைப்பற்றி நரிகள் தப்புக்கணக்கு போடக்கூடாது -முதலமைச்சர்


    படுத்திருக்கும் யானை பலமற்ற யானை
    என்று தப்புக்கணக்குப் போடக்கூடாது. இவ்வாறு உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசரும், வடமாகாண முதலமைச்சருமான சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

    சாவகச்சேரி நகர சபையினால் 77 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பொன்விழாக் கலாச்சார மண்டபத்தை இன்று சனிக்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சுற்றில் இருப்போர் மனங்குளிரும்படியாக ஒன்றைக் கூறுவது பின்னர் அதற்கு நேர்மாறாக நடப்பது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குக் கைவந்த கலையாகியுள்ளது.

    எனக்குத் தருகிறேன் என்று ஜனவரி 2ம் திகதி கூறியவற்றில் ஒன்றை, அதாவது பிரதம செயலாளரை உடனே மாற்றுகின்றேன் என்பதை, தொடர்ந்து ஜனவரி 19ம் திகதி வரையில் அதாவது தெல்லிப்பளை புற்றுநோய்க் கட்டிடத் திறப்பு விழா மட்டும் இந்தா தருகின்றேன், அந்தா தருகின்றேன் என்று கூறியிருந்தார்.

    கூட்டம் முடிந்ததும் நொண்டிச் சாட்டொன்றைக் கூறி முடியாமைக்கு வருந்துகிறேன் என்றார். அதாவது எங்கள் பிரதம செயலாளரை மாற்றினால் அவரின் தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும். ஆகவே உடனே அதைச் செய்ய முடியாது என்றார்.

    நான் கூட்டத்தை முடித்து வெளியில் வந்ததுந்தான் தெரிந்து கொண்டேன், மாகாணசபை பிரதம செயலாளர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட உடனேயே, பொது நிர்வாக சேவை தொழிற்சங்கத்தின் உறுப்பினராகத் தொடர்ந்து இருக்கக்கூடிய தகைமையை இழந்து விட்டார் என்று.




    எனவே, எங்கள் பிரதம செயலாளர் சார்பில் எவருமே தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிந்து கொண்டு அதிமேதகு ஜனாதிபதி உண்மைக்குப் புறம்பான விதத்தில் எனக்குப் பதில் அளித்தார். தரமாட்டேன் என்று எங்கள் பிரதம செயலாளர் ஊடாகத் தான் ஜனாதிபதி தெரிவித்தார்.


    அதாவது வடமாகாண பிரதம செயலாளர் வடமாகாணத்தின் மீது கரிசனை கொள்ளாது ஜனாதிபதியின் கருத்தை வெளியிடும் கருவியாக அங்கு மாறியிருந்தார். அவர் அவ்வாறு கருவியாகக் கடமையாற்றுவதால்த்தான் எமது வேலைகள் தடைப்படுகின்றன, தாமதம் அடைகின்றன, தடுக்கப்படுகின்றன.

    நாங்கள் மாற்றார் கையை நம்பியிராமல் எம்கையே எமக்குதவி என்றவாறு எமது காரியங்களைச் சாதித்துச் செல்வதே இன்றைய காலகட்டத்தில் உசிதமென எமக்குத் தெரிகின்றது. இப்பொழுது இன்னுமொரு நாடகத்தை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.

    மாகாணசபை தானாக ஏதேனும் ஒரு செயற்றிட்டத்தை வகுத்து நடைமுறைப்படுத்த எத்தனித்தால், உடனே அரச சார்புடைய அரசியல்வாதிகள் அதே இடத்திற்குச் சில தினங்களுக்கு முன்னர் போய்த் தாங்களே அச்செயற்திட்டத்திற்குக் காரணகர்த்தாக்கள் என்று மக்களுக்குக் கூறி வருகின்றார்கள்.

    மாவை கந்தசாமி ஆலய புனருத்தாரணம் பற்றி நாங்கள் உரிய அமைச்சருடன் கதைத்திருக்க நேற்றைய தினம் சிலர் கோயிலுக்குப் போய் உதவிகள் செய்யப் போவதாகக் கூறியுள்ளார்கள்.

    எமது மாகாண சபையினர் இதற்காகப் போட்டா போட்டியில் இறங்கி அரசியல் முரண்பாடுகளை ஏற்படுத்தாமல் மக்கள் நலன் கருதி எதனையும் அனுசரித்து வருகின்றார்கள்.

    இத்தனை பெருந்தெருக்களைப் போட்ட அரசின் சார்பான அரசியல் கட்சிகளை எதிர்கொண்டு எமக்கு வாக்களித்த எமது மக்களுக்குத் தெரியாதா இக்கட்சிகளினதும் அரசாங்கத்தினதும் திருகு தாளங்கள். ஆனால் சுற்றி நிற்கும் நரிக் கூட்டங்கள். படுத்திருக்கும் யானை பலமற்ற யானை என்று தப்புக்கணக்குப் போடக்கூடாது.

    அண்மையில் இன்னுமொரு ஒரு நடவடிக்கை நடந்தது. அதே ஆளுநரை (ஜி.ஏ.சந்திரசிறியை) மீண்டும் நியமித்து விட்டார்கள். ஆகவே யானை படுத்தது படுத்தே விட்டது. இனி எழமாட்டாது என்று தெற்கில் உள்ள பத்திரிகைகள் எக்காளம் ஊதின.

    என்னிடம் கேட்ட பத்திரிகைகள் யாவற்றிற்கும் நான் கொடுத்த பதில் ஒன்றுதான். 'தான்தோன்றித்தனமாகத் தப்புக்கணக்குப் போடாதீர்கள். எங்கள் பணி சிறப்பாகத் தொடர்ந்து கொண்டு போகின்றது. சில்லறைக் கனவுகளில் திளைக்காதீர்கள்' என்றேன்.

    இன்று எங்கள் பிரதிநிதிகள் மக்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டு மக்களுக்காக சேவையாற்றி வருகின்றனர். பலவிதமான சவால்களையும் எதிர்கொண்டு முன்நோக்கி நடந்து செல்கின்றார்கள்.

    ஆளணிப் பற்றாக்குறை, அறிவு செறிந்த, அனுபவம் நிறைந்த அலுவலர் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை ஒருபுறம், இராணுவ உள்ளீடல்களும் தலையீடுகளும் மறுபுறம், அதிகாரத் துஸ்பிரயோகங்கள் இன்னொரு புறம், குடியேற்றங்கள் வேறொரு புறம், 13வது திருத்தச் சட்டத்தின் கையாலாகாத நிலை மேலும் ஒரு புறம், இவ்வாறு பல சவால்களின் மத்தியிலும் எமது வடமாகாணசபை வெற்றிநடை போட்டுச் செல்வதைப் பார்க்கச் சகிக்காதவர்கள் 'என்ன செய்தீர்கள்?' என்று கேட்கின்றார்கள். 



    எமது சேவையைப் பெற்ற எங்கள் சகோதர சகோதரிமாரிடம் போய்க் கேளுங்கள் இந்தக் கேள்வியை. செருப்பெடுத்து அடிப்பார்கள். பிறநாட்டார் நிதியத்தில் பாரிய செயற்திட்டங்களை உருவாக்கி எம்மைக் கடனாளிகளாக ஆக்கி அவற்றின் நிழலில் இருந்து கொண்டு தமது பைகளையும் நிரப்பிக் கொண்டு பத்திரிகைகளுக்கும் அறிக்கை கொடுக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படவில்லை என்பதை எம்மிடம் கேள்வி கேட்பவர்களுக்குக் கூறி வைக்கின்றோம்.

    உரிய தருணத்தில் எங்கள் சாதனைகள் வெளிவருவன. நாம் சாதிப்பவற்றைச் சரியச் செய்ய சதி செய்யும் எமது எதிர்க்கட்சிச் சகோதரர்களுக்கு நாங்கள் எமது சாதனைகளைக் கூறவேண்டிய அவசியம் கிடையாது என அவர் மேலும் தெரிவித்தார்.

    ஏனைய பிரமுகர்களின் உரைகள் 




    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: யானையைப்பற்றி நரிகள் தப்புக்கணக்கு போடக்கூடாது -முதலமைச்சர் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top