பொன்னம்மானுடன் தமிழ் நாட்டில் சுற்றித் திரிந்த அனுபவங்கள் - TK Copy பொன்னம்மானுடன் தமிழ் நாட்டில் சுற்றித் திரிந்த அனுபவங்கள் - TK Copy

  • Latest News

    பொன்னம்மானுடன் தமிழ் நாட்டில் சுற்றித் திரிந்த அனுபவங்கள்


    பயிற்சி முகாம் முடிந்துஈழத்துக்கு போக தயாரான
    அந்த நாட்கள்! அது 1985.ராஜபாளையத்துக்கு அருகில் உள்ள மலை முகாமில் பயிற்சி முடிந்து,நாம் சிறு சிறு குழுக்களாக மதுரைக்கு அனுப்ப பட்டோம். பொன்னம்மான் ஒவ்வொருவரையும் அப்போது சந்தித்து -ஒவ்வொருவருடனும் பேசினார்.

    "எங்க போக விருப்பம்"? என்று என்னிடம் கேட்டார் "நாட்டுக்குத்தான் அம்மான்.." என்று அடுத்த நிமிடம் பதில் சொன்னேன். "சிங்கள ராணுவத்தோட சண்டை பிடிக்க தயார் ஆகி விட்டியளோ? "என்று கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டே கேட்டார். "அவங்களை அழிக்கவேணும் அம்மான்.." என்று உணர்வு பொங்கச் சொன்னேன்.

    "சரி..நானும் அங்கதானே வரப்போறன்? எல்லோரும் சேர்ந்து போவோம்" என்று சொல்லி மீண்டும் கொடுப்புக்குள் சிரித்தார். பயிற்சி முடிந்த அநேகம் பேருக்கு அன்றே ,மத்தியானத்துக்குள் மூட்டை முடிச்சுகளுடன் தயாராய் இருக்குமாறு கட்டளை வந்தது. எனக்கு இன்னும் வரவில்லை. என்னைப்போல் இன்னும் சில போராளிகளும் அதையே எதிர் பார்த்து காத்திருந்தனர்.

    இரவும் வந்தது தூக்கம்தான் வரவில்லை நாட்டுக்கு போகவேண்டும் என்று எத்தனை மனக் கோட்டைகளை பல மாதங்களாக கட்டி இருப்போம் என்பது எங்களுக்குத்தான் தெரியும்  கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் அந்த மண்ணின் ஓர் கிராமத்தில்,ஒரு ஓலைக் கொட்டிலில் வாடைக் காற்றின் வருடலில்,ஆட்காட்டிக் குருவிகளின், நள்ளிரவின் அபாய ஒலிக்கு மத்தியில்,அதிகாலையில் வன்னிக் காட்டை நோக்கிப் பறக்கும் கிளிக் கூட்டத்தின் மரபுக் கவிதைகளைக் கேட்டுக் கொண்டு படுப்பதில் உள்ள சுகம் ,இங்கே எத்தனை மலைகள் மீது ஏறி இறங்கினாலும் கிடைக்குமா என்ன?

    அந்த குளிர் மலையில் நாங்கள் சூரியனைக் காண்பதற்கு முன்பாகவே எழும்பி விடுவது வழக்கம். ஆனால் அன்று சூரியன் வெளிவந்து வெகு நேரம் ஆகியும் நாம் எழும்பவில்லை எம்மை எழுப்ப அங்கே மூத்த போராளிகள் யாரும் இருக்கவில்லை காலையில் அவித்த பயறை உண்டுவிட்டு இருந்தபோது, ஒரு மூத்த போராளி வந்து ஒரு துண்டை எனது கையில் கொடுத்தார். அதில் ஆறு போராளிகளின் பெயர்கள் இருந்தன. "உங்கள் ஆறுபேரையும் மதுரையில் உதயனுக்கு போகட்டாம் என்று பொன்னம்மான் சொன்னார்"-என்று ஒரு வெடி குண்டை தூக்கிப் போட்டார்.

    ஒ..நாட்டுக்(கனவுக்) கோட்டை தகர்ந்துவிட்டது அம்மான் வேறு ஏதோ திட்டத்துடன் இருக்கிறார் என்று முடிவு செய்து கொண்டோம். துணிப் பைகளுடன் நாங்கள் ஆறுபேரும் கிளம்பினோம். மதுரைக்கு போய் அங்கேயுள்ள எமது மருத்துவ மனையில் நின்றபோது ஒருநாள் பொன்னம்மான் ஒரு ஜீப்பில் வந்தார். "ஏறுங்கள் ஜீப்பில்" என்றார், ஏறினோம் மதுரை,திண்டுக்கல்,என்று பல இடங்களுக்கும் எம்மை அழைத்துச் சென்று சுற்றிக் காட்டினார்.

    என்ன உணவு வேண்டுமோ அவைகளை வாங்கி கொடுத்தார் இரு நாட்களுக்கு பின்னர் மீண்டும் மதுரைக்கு வந்தோம் அப்போது எமக்காக ஓர் துக்கச் செய்தி காத்திருந்தது அப்போது எமது மூத்த உறுப்பினர் பொட்டம்மான் ராமேஸ்வரம் அருகே படகுப் போக்கு வரத்தை கவனித்துக் கொண்டிருந்தார் பொட்டம்மானை ஈழ தமிழ்க் குழு ஒன்று கடத்திக் கொண்டு போய்விட்டதாம் என்பதுதான் அந்தச் செய்தி! எமது கைகள் அப்போது துடித்தன. புலிகளோடா விளையாட வருகிறார்கள்? "எல்லோரும் வெளிக்கிடுங்கோ.." என்று பொன்னம்மான் கட்டளை இட்டார்.

    அப்போது எம்மிடம் மூன்றே மூன்று தானியங்கிகள்தான் இருந்தன. அவற்றோடு...கத்தி,அரிவாள்,என்று சிலவற்றை எடுத்துக் கொண்டு பொன்னம்மானின் ஜீப்பில் பலர் ஏறி அமர்ந்தோம்.ஜீப் சந்தேகத்துக்கு இடமான பல இடங்களை நோக்கி சென்றது. சில தமிழ்க் குழுக்களின் முகாம்களுக்கு சென்றோம். விசாரித்தோம்..தமக்கு அதுபற்றி தெரியாது என்று சொல்லி அவர்கள் நடுங்கினார்கள். மதுரையை விட்டு வெளியேறி, ராமேஸ்வரம் நோக்கி போனது ஜீப். சில மைல் தூரம்தான் போயிருப்போம். அப்போது பொன்னம்மானின் வோக்கிக்கு' ஒரு அவசர செய்தி வந்தது.

    "பொட்டம்மான் அந்த குழுவின் பிடியில் இருந்து தப்பி வந்து விட்டாராம்" என்பதுதான் அது. ஒ..இனிய செய்தி அது..என்று மகிழ்ந்து ஆர்ப்பரித்தோம். அந்தச் செய்திமட்டும் அன்று கிடைக்காமல் இருந்திருந்தால் அன்று ராமேஸ்வரத்தில் ஓர் இரத்தக் களறியே ஏற்பட்டிருக்கும். அப்போதும் கூட தமிழ் நாட்டு மக்களுக்கு எம்மால் அங்கே எந்தவித தீங்கும் ஏற்படவில்லை.. ஏற்பட்டிருக்காது.. நினைவில் இருந்து அழியாத சம்பவம் இது!

    பொன்னம்மான் பற்றி தேசியத்தலைவர்




    -மு.வே.யோகேஸ்வரன்-
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: பொன்னம்மானுடன் தமிழ் நாட்டில் சுற்றித் திரிந்த அனுபவங்கள் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top