இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள்
தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஐ.நா. நிபுணர் குழுவின் தலைவராக நியூஸிலாந்தைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதிபதியெருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் பெண் நீதிபதி டேம் சில்வியா கார்ட்ரைட் என்பவரே விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகும் என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் எதிர்வரும் ஜூலை மாதம் இவரது தலைமையிலான ஐ.நா. நிபுணர்குழுவின் விசாரணை ஆரம்பமாகவுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஐ.நாவின் முன்னாள் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
நியூஸிலாந்தின் முதல் பெண் மாவட்ட நீதிபதியாக டேம் சில்வியா கார்ட்ரைட் தெரிவு செய்யப்பட்டு, நீதிபதியாக இருந்த காலத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக பல கௌரவ விருதுகளையும் பெற்றுள்ளார். அத்துடன், கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின், இரண்டு நீதிபதிகளில் ஒருவராக இவர் பணியாற்றியுள்ளார். 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரை இவர் நியூஸிலாந்தின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.
அத்துடன் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைக் களைவதற்கான குழுவிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற மீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. விசாரணைக்கு குழு நியமிக்கப்பட்டதும், இலங்கையில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அங்கு செல்வதற்கு நுழைவிசைவுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.