வட மாகாண சபைக்கான பொலிஸ் அதிகாரம் பற்றி
விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில் அவசர அவசரமாக விசேட அதிரடிப்படையினர் வட புலத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் அதிகாரத்தின் ஒரு பகுதியை வழங்குவது பற்றி அரசு தரப்பில் சமிக்ஞை காட்டப்பட்டுள்ள நிலையில் முதல் தடவையாக வடக்கில் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.ஏற்கனவே இங்கு பணியாற்றி வரும் பொலிஸாருடன் நாமும் செயற்பட்டு வருகின்றோம் என வட மாகாண விசேட அதிரடிப்படைப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜே.கே.ஆர்.ஏ. பெரேரா ஊடகமொன்றிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ; வட மாகாணத்தில் தற்போது திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே பொதுமக்களின் நலனைக் கருத்திற் கொண்டு வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
இதன்படி பொலிஸாருடன் எமது படையினரும் இணைந்து விசேட செயற்றிட்டம் ஒன்றினை சனிக்கிழமை முதல் முன்னெடுத்துள்ளனர். யுத்தம் முடிந்த பின்னரும் வீதிச் சோதனைகள் நடத்தப்படுகின்றன என அச்சம் கொள்ள வேண்டாம். இதனால் பொது மக்களுக்கே நன்மை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.