அட்டவணைப்படுத்தப்படாத ஆளணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். பதவிகளுக்கு நாங்கள் ஆளணி சேர்க்கும் போது அதற்கென ஒரு படிமுறை உள்ளது. அதன் அடிப்படையில் உரியவாறு வேலைக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டால் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது.
வெங்கலச் செட்டிக்குளம் பிரதேசசபை அட்டவணைப்படுத்தப்படாத ஆளணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம், வவுனியா, செட்டிக்குளம் பிரதேச சபை வாளாகத்தில் 10.06.2014ந் திகதியன்று காலை 10 மணிக்கு இணை பிரதம விருந்தினர் உரை
குருர் ப்ரம்மா...........
தலைவரவர்களே! இணை பிரதம விருந்தினர் அவர்களே, கௌரவ விருந்தினர்களே, சிறப்பு அதிதிகளே, சிறப்பு விருந்தினர்களே, எனதருமைச் சகோதர சகோதரிகளே!
அட்டவணைப்படுத்தப்படாத ஆளணியினருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
பதவிகளுக்கு நாங்கள் ஆளணி சேர்க்கும் போது அதற்கென ஒரு படிமுறை உள்ளது. அதன் அடிப்படையில் உரியவாறு வேலைக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டால் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது. சில நேரங்களில் அவசரத்தின் நிமித்தம் நாம் ஆட்களைச் சேர்க்கின்றோம். தேவைக்கு ஏற்ப அது நடைபெறுகிறது.
குறித்த அவசரம் முடிந்த பின் அவர்களின் பதவி நிலை பெற வேண்டுமா இல்லையா, நிலைபெற வேண்டுமானால் சட்டப்படி என்ன செய்யவேண்டும் என்று நாம் சிந்திப்பதில்லை. காலம் கடந்தபின் பல இடர்களையும் தாமதங்களையும் இப்பேர்ப்பட்ட தற்காலிக அவசர ஆளணியினர் எதிர்நோக்குகின்றார்கள்.
இவை எல்லாவற்றிற்கும் பின்னணியில் அரசியல் இருக்கின்றது. அரசியலில் நன்மை பெற நாம் எது வேண்டுமானாலும் செய்யப் பார்கின்றோம். இப்பேர்ப்பட்ட நிலை விரைவில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். எங்கள் அதிகாரங்களை முடக்க மத்திய அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்தாலும் நாம் எது சரியோ அதைச் செய்யப் பின்நிற்க மாட்டோம்.
பொது வாழ்க்கையில் மற்றும் நிர்வாகத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஏழு விதிகளை பிரித்தானியாவில் நோலான் என்பவர் அறிமுகப்படுத்தினார்.
எமது அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினரும் நிர்வாக அலுவலர்களும் அவற்றை மனதில் வைத்திருந்து கடமையாற்றுவது சாலச் சிறந்தது என்று நான் நம்புகின்றேன். அரசியலுக்காக, அடுத்த தேர்தலுக்காக அந்த விதிகளை உதாசீனப் படுத்துவது எமக்கே பாதிப்பை உண்டுபண்ணும் என்பதை நாங்கள் மறக்கக் கூடாது. அந்த விதிகள் யாவன என்றால் -
1. சுயநலமற்ற தன்மை. ஆங்கிலத்தில் Selflessness என்பார்கள்
2. நேர்மை. அதாவது Integrity
3. புறநிலை மெய்மை அல்லது Objectivity
4. பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு. இதனை Accountlity என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள்.
5. வெளிப்படைத்தன்மை அல்லது Openness
6. உண்மையுடன் நடக்குந்தன்மை அல்லது Honesty
7. எடுத்துக்காட்டாக வாழ்தல் அல்லது Leadership என்பதாகும்
சுருக்கமாக இவை ஒவ்வொன்றைப் பற்றியும் கூறுவதானால்
1. முதலாவது - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அல்லது பொதுமக்கள் சேவையில் கடமையாற்றும் அரச அலுவலர்கள் பொது மக்கள் சார்பில் அவர்கள் நன்மை கருதி நடந்து கொள்ளுவதுந் தன்னலம் மறந்து சுயநலமற்ற முறையில் பொது வாழ்க்கையில் ஈடுபடுதலையுமே இந்த முதலாவது விதி குறிப்பிடுகிறது. அது தான் Selflessness.
ஆகவே பொது வாழ்க்கையில் தனக்கென பொருள் சேர்த்தலை அதாவது பொதுமக்கள் காணிகளை மடக்கிப் பிடித்தல் தமக்கென காசு பணம் சேர்த்ல் போன்றவற்றை நோலான் விதிகளுள் முதல் விதி பிழையென்று சுட்டிக் காட்டுகின்றது.
2. இரண்டாவது நேர்மை என்பதாகும். வெளியாரிடம் இருந்து பணத்தையோ பொருட்களையோ காணிகளையோ அரசியலுக்கு வரமுன் பெற்று வந்திருந்தால் அல்லது அரசியலுக்கு வந்தபின் பெற்றால் அந்த உறவின் தாக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றது விதி. அதாவது அந்த புற நபர்கள், வெளியார்கள், எங்களிடம் கேட்கும் சலுகைகளுக்கு நாம் ஈடு கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டிவரும். ஏனென்றால் நாம் அவர்களுக்குக் கடமைப்பட்டவர்கள். அதைத் தவிர்க்க வேண்டும் என்கின்றது இந்த இரண்டாவது விதி. அதுதான் ஆங்கிலத்தில் Integrity என்ற சொல்லில் அடங்குகிறது.
3. மூன்றாவது விதி முக்கியமானது. புறநிலை மெய்மை சார்ந்த தன்மை என்றால் வெளியில் இருந்து பார்க்கும் போது சரியாகவே நடக்கின்றது என்று கருதக் கூடிய நிலையே இந்த Objectivity என்ற அந்த நிலை. ஆளணி சேர்க்கும் போது தகைமை அடிப்படையிலேயே சேர்க்க வேண்டும் என்கின்றது அந்த விதி. அரசியல் காரணங்களுக்காக அல்லது அடுப்பங்கரைப் பக்கமாக கிடைக்கும் அந்த அற்ப கையூட்டுக்காக நாங்கள் தகைமை அற்றவர்களைப் பதவியில் நிறுத்தினால் வேலைகள் செவ்வனே நடைபெறா. வேலைகள் தடைப்படுவன. வேண்டாத காரியங்கள் நடைபெறுவன.
4. தொடர்ந்து நான்காவது விதியைப் பார்ப்போம். பதில் சொல்ல வேண்டிய கடமையை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றது அந்த விதி. Accountlity என்பது பற்றிக் கூறுகிறது இந்த விதி. நாங்கள் எதைச் செய்தாலும் மக்கள் அதைப் பரிசீலித்துப் பார்த்து எங்கள் உண்மை நிலையை எங்கள் முடிவுகளை அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் நடப்பதையே இது குறிப்பிடுகிறது.
5. ஐந்தாவது விதி வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றது. அதாவது மக்கள் நலன் கருதி சில முடிவுகளை நாம் வெளியிடாதிருக்க வேண்டிய ஒரு கடப்பாடு இருந்தால் அல்லாது மற்ற வேளைகளில் எமது முடிவுகளுக்குத் தகுந்த சட்டப்படியான காரணங்களை எடுத்துரைக்கக் கூடியதாக நாம் நடந்து கொள்ளுதல் வேண்டும்.
6. ஆறாவது விதி கூட ஒரு முக்கியமானதொன்று. எமது பொது வாழ்க்கையில் தனிப்பட்ட எமது நல உரித்துக்கள் எட்டிப்பார்க்க நேர்ந்தால் எமது வேலையில் முரண்பாடுகள் தெரியத் தொடங்கிவிடும். ஆகவே ஏதாவது தனிப்பட்ட நல உரித்துக்கள் எங்கள் பொது வேலைகளுக்கு முரண்பட்டதாக அமைந்திருந்தால் அதை ஏற்கனவே மக்களுக்கு வெளியிட வேண்டும் என்கின்றது அந்த விதி. அவ்வாறான தனிப்பட்ட காரணங்களினால் மக்களின் நன்மை பாதிக்கப்படாது இருக்க வேண்டும் என்கின்றது அந்த விதி.
7. கடைசி விதி நாங்கள் முறையாக நடந்து மக்களுக்க எடுத்துக் காட்டாக விளங்க வேண்டும் என்கின்றது.
ஆகவே ஆளணிகள் சேர்க்கும் போதும் இப்பேர்ப்பட்ட கருத்துக்களை நாங்கள் மனதில் நிறுத்திக் கொண்டால் நிரந்தர நியமனங்கள் வழங்க தாமதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
பொது வாழ்க்ககையில் ஈடுபடும் போது நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காக கடமையில் நிறுத்தப்பட்டவர்கள் என்பதையும் மக்கள் நலன் நாடியே எங்கள் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதையும் நாங்கள் மறக்கக் கூடாது.
பொது சேவையில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்களும் அவ்வாறுதான் மக்கள் பணத்தில் அவர்கள் வாழ்கின்றார்கள், மக்கள் சேவைக்காக அவர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள், எனவே மக்கள் நல உரித்துக்களைப் பாதுகாக்கும் வண்ணமாகவே அவர்களின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதை மறக்கக் கூடாது.
சொந்த நன்மைகள் கருதி பொதுமக்கள் சேவையில் ஈடுபடுவது பொது மக்களுக்குத் தான் பிரச்சனைகளை ஏற்படுத்தும். என் நண்பர் ஒருவர் 1977ல் மந்திரி பதவி பெற்றார். என்ன செய்யப் போகின்றாய் என்று அவரிடம் கேட்டேன். நான் தேர்தலுக்குச் செலவு செய்த பணத்தை உடனே உழைத்தெடுக்கப் போகின்றேன் என்றார். உழைத்தவர் நன்றாக உழைத்தார். கடைசியில் துஏP அவரைச் சுட்டுக் கொன்றது.
இன்றைய காலகட்டத்தில் பொது நன்மை கருதும் அரசியல்வாதிகளுக்கும் சுய நன்மை கருதும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் பெருத்த பகையும் முரண்பாடுகளும் எழுவதை நாங்கள் பார்க்கக் கூடியதாக உள்ளது. பொது வாழ்க்கையில் இருந்து கொண்டு பொது மக்களின் வளங்களைச் சிலர் சூறையாடுவது தெரிகின்றது.
சூறையாட எத்தனிப்பதும் புரிகின்றது. சுட்ட மண்ணும் சுடாத மண்ணும் சேராது என்பார்கள். எனவே அவ்வாறு சுயநலம் கருதி வாழ்பவர்களுடன் மற்றையவர்கள் சேர்ந்து வாழ்வது கடினமே.
ஆனால் பொதுவாக சுயநலத்துடன் மக்கள் அபிலாஷைகளை உதாசீனம் செய்து சுயநலத்துடன் வாழும் மக்கட் தலைவர்களை விரைவில் மக்கள் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். இதுதான் ஜனநாயகத்தின் சக்தி. அதன் வலு. இன்று இந்தியாவில் நடந்துள்ளது அதுதான். மக்களுக்காக வாழ்கின்றோம் என்று பாசாங்கு செய்து தமக்கென வாழ்ந்த ஒரு கட்சியை மக்கள் எடுத்தெறிந்து விட்டார்கள்.
அவ்வாறான சூழ்நிலையை நாங்கள் எதிர் கொள்ளாது விட வேண்டும் என்றால் அரசியல்வாதிகள், அரச அலுவலர்கள் யாவரும் மேற்குறிப்பிட்ட ஏழு விதிகளையும் தமது நாளாந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பளித்த யாவருக்கும் என் நன்றியறிதல்களைத் தெரிவித்து எனது இணைப் பிரதம விருந்தினர் அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து அமர்கின்றேன்.
நன்றி. வணக்கம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்