விடுதலைக்காக போராடிய வீரர்களின் புகைப்படங்களுடன்,
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் கேரள கல்லூரியின் ஆண்டு மலரில் வெளியானதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா சிறப்பு மலரில் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி உட்பட 7 பேரின் படம் வெளியிடப்பட்டுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் கல்லூரி முதல்வர், உட்பட 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம் குளத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் 2012–2013–ம் ஆண்டு விழாவுக்கான சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் வெளியான அக்கல்லூரி விழா சிறப்பு மலரின் ஒரு பக்கத்தில் நல்ல முகங்கள் என்ற தலைப்பில் மகாத்மா காந்தி, அன்னை தெரசா, தாகூர், விவேகானந்தர், லெனின், நெல்சன் மண்டேலா உட்பட பலரது படங்கள் வெளியிடப்பட்டு இருந்தன.
மலரின் மற்றொரு உள்பக்கத்தில், எதிர்மறை முகங்கள் என்ற தலைப்பின் கீழ் பிரபல சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன், தீவிரவாதி அஜ்மல் கசாப், பின்லேடன், சர்வாதிகாரிகள் ஹிட்லர், முசோலினி, தமிழீழ விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரன், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் படங்கள் பிரசுரிமாகியுள்ளன.
இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கல்லூரி ஆண்டு விழா சிறப்பு மலரை தீவைத்து எரித்தனர். அவர்கள் அளித்த முறைப்பாட்டினையடுத்து, அரசு கல்லூரி முதல்வர், மாணவர் மலர் ஆசிரியர் உள்பட 7 பேர் மீது குன்னம் குளம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஆண்டு விழா மலரை தடை செய்ய கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.