நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
நடைமுறைப்படுத்துவது சம்பந்தமான செயலமர்வு ஒன்று ட்ரான்பரன்சி இன்ரர்நஷனல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு நீர்கொழும்பில் நடத்தப்பட்டு வந்தது. இச்செயலமர்வுக்காக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து 8 ஊடகவியலாளர்களும், கிழக்கு மாகாணத்தில் இருந்து 5 ஊடகவியலாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கு நீர்கொழும்பில் நடைபெற்றுவந்த செயலமர்வு பொதுபலசேனா ஆதரவாளர்களின் முற்றுகைப் போராட்டத்தினால் தற்போது கைவிடப்பட்டுள்ளது. செயலமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த ஹோட்டலை பொதுபலசேனா ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட இச்செயலமர்வு இன்று சனிக்கிழமையும் தொடர்ந்தும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அங்கு வந்த பொதுபலசேனா ஆதரவாளர்கள் செயலமர்வினை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பொலிஸார் அழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஆனாலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மாலை 6.30 மணிவரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு கலைந்துசென்றனர். செயலமர்வில் பங்குபற்றியவர்களை 3 மணிநேரத்துக்குள் ஹோட்டலை விட்டு வெளியேறுமாறு அதன் நிர்வாகம் கேட்டுக்கொண்டதை அடுத்து அங்கிருந்த ஊடகவியலாளர்கள் ஹோட்டலை விட்டு வெளியேறிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.