ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும்
இரண்டு நாட்களே எஞ்சியிருக்கின்றன. இதில் போட்டியிடும் கட்சிகள் மாகாணம் முழுதும் அனல் பறக்கும் பரப்புரையை மேற்கொண்டுள்ளன.
இரண்டு நாட்களே எஞ்சியிருக்கின்றன. இதில் போட்டியிடும் கட்சிகள் மாகாணம் முழுதும் அனல் பறக்கும் பரப்புரையை மேற்கொண்டுள்ளன.
கட்சித் தலைவர்கள் மக்களை சிறு சிறு நகர மண்டபக் கூட்டங்களிலும் மக்கள் கூடும் இடங்களிலும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை வாக்களிக்குமாறு கேட்கிறார்கள்.
பாரிய பொருட் செலவில் தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் என ஊடகங்கள் அனைத்திலும் விளம்பரங்கள் வருகின்றன. ஒரு கட்சி இன்னொரு கட்சியை தாக்கி வெளியிடும் விளம்பரங்கள் தான் மிக அதிகம்.
பல ஊழல்களில் சிக்குண்ட லிபரல் கட்சியின் முன்னாள் தலைவர் டால்ரன் மக்குயின்ரி தனது முதல்வர் பதவியைத் துறந்ததை அடுத்து கத்லீன் வின் பெப்ரவரி 13, 2013 இல் ஒன்ராறியோ முதல்வராகப் பதவியேற்றார். இதன் மூலம் அவர் இரண்டு சாதனைகளைப் படைத்தார். ஒன்று அவர்தான் ஒன்ராறியோ மாகாணத்தின் முதல் பெண் முதல்வர். இரண்டு அவர்தான் முதல் ஓரினப்பால் முதல்வர்.
டால்ரன் மக்குயின்ரி மூன்றாவது முறையாகத் தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 106 உறுப்பினர்கள் கொண்ட மாகாண நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சிக்கு 48 இருக்கைகளே கிடைத்தன. முற்போக்கு பழமைவாதக் கட்சிக்கு 34 இருக்கைகளும் புதிய ஜனநாயக் கட்சிக்கு 21 இருக்கைகளும் கிடைத்தன.
ஆளும் சிறுபான்மை லிபரல் கட்சியின் நடப்பு ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைப் புதிய ஜனநாயக் கட்சியின் தலைவர் Andrea Horwath ஆதரிக்க மறுத்த காரணத்தாலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு முந்திய தேர்தல் ஒக்தோபர் 06, 2011 இல் நடைபெற்றது.
கருத்துக் கணிப்புக்கள் இம்முறையும் போட்டி கடுமையாக இருக்கும் எனச் சொல்கின்றன. மீண்டும் ஒரு சிறுபான்மை அரசு வரலாம் என எதிர்வு கூறப்படுகிறது. யூன் 09 இல் எடுத்த கருத்துக் கணிப்பு பின்வருமாறு அமைந்துள்ளது.
வாக்குக் கணிப்புப் பெரும்பாலும் பிழைப்பதில்லை. ஆனால் பிழைத்தும் இருக்கின்றன.
இந்தத் தேர்தலில் நிருவாக ஊழல், பணவிரயம், வேலை வாய்ப்பு, வரிக் குறைப்பு, பாதாள தொடர்வண்டி போன்ற பேசுபொருள்கள்தான் முக்கியம் வகிக்கின்றன. மேலும் தொடருமுன் ஒன்ரேறியோ மாகாணம் பற்றிய சில புள்ளி விபரங்களை அறிந்து கொள்வோம்.
லிபரல் கட்சி 2007 இல் பதவிக்கு வந்த போது இரண்டு வாயு மின் நிலையங்கள் கட்டுவதற்கான உடன்படிக்கைகள் எழுதப்பட்டன. ஒன்று மிசிஸ்சாக்காவிலும் மற்றது ஓக்வில்லிலும் கட்டப்பட இருந்தது. இதற்கு அந்தப் பகுதியில் வாழும் பொது மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது. சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் அமைப்புக்களும் போர்க்கொடி உயர்த்தின. தேர்தலில் லிபரல் கட்சியைத் தோற்கடிக்குமாறு குரல் எழுப்பின. எதிர்ப்பைக் கண்டு பயந்துபோன லிபரல் கட்சி தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்க (செம்தெம்பர் 28, 2011) தாம் ஆட்சிக்கு வந்தால் இந்த வாயு மின்நிலையங்களுக்கான உடன்படிக்கைகளை இரத்து செய்யப் போவதாக அறிவித்தது.
ஒக்தோபர் 6 அன்று நடந்த தேர்தலில் லிபரல் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஒக்தோபர் 7 ஆம் நாள் மிசிஸ்சாக்கா மற்றும் ஓக்வில் வாயு மின்நிலையங்கள் கட்ட எழுதப்பட்ட உடன்படிக்கைகள் இரத்து செய்யப்பட்டு விட்டதாக லிபரல் அரசு அறிவித்தது. மின் நிலைய ஒப்பந்தகாரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இழப்பீடு மிசிஸ்சாக்கா மின்நிலையத்துக்கு 190 மில்லியன் டொலரும் ஓக்வில் மின்நிலையத்துக்கு 40 மில்லியன் டொலரும் மொத்தம் 230 மில்லியன் வரும் என எரிசக்தி அமைச்சர் கிறிஸ் பென்ட்லி அறிவித்தார். இழப்பீட்டை மதிக்க அரசு ஒரு வல்லுநரை நியமித்தது. அவர் இழப்பீடு 1.1 பில்லியன் வரும் எனக் கணித்துச் சொன்னார். ஆனால் முதல்வர் டால்ரன் மக்குயின்ரி தொடர்ந்து இழப்பீட்டுத் தொகை 230 மில்லியன் டொலரைத் தாண்டாது என அடம் பிடித்தார்.
ஆனால் எதிர்ப்பு நாலா பக்கத்திலும் அதிகரிக்கவே அவர் தனது பதவியை விட்டு விலகினார். எரிசக்தி அமைச்சர் கிறிஸ் பென்ட்லியும் தனது பதவியைத் துறந்தார்.
ஆனால் எதிர்ப்பு நாலா பக்கத்திலும் அதிகரிக்கவே அவர் தனது பதவியை விட்டு விலகினார். எரிசக்தி அமைச்சர் கிறிஸ் பென்ட்லியும் தனது பதவியைத் துறந்தார்.
இந்த வாயு மின்நிலைகளை மூடியதால் ஏற்பட்ட இழப்பு இந்தத் தேர்தலில் பூதாகாரமாக எழுந்து லிபரல் கட்சித் தலைவர் கத்லீன் வின்னைத் துரத்துகிறது. அவர் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டும் எதிர்க்கட்சிகள் அவரை விடுவதாக இல்லை. கத்லீன் வின்தான் 2011 லிபரல் தேர்தல் பரப்புரைக்கு தலைமை வகித்தவர். ஆன காரணத்தால் அவர் பொறுப்பில் இருந்து தப்ப முடியாது என எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன. போதாக் குறைக்கு இந்த நேரம் பார்த்து இந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக காவல்துறை (RCMP) விசாரணை நடத்தும் செய்தி வெளிவந்துள்ளது. இந்த விசாரணை கத்லீன் வின்னை மேலும் சங்கடத்துக்குள் மாட்டியுள்ளது.
அதுமட்டுமல்ல டால்ரன் மக்குயின்ரி முதல்வராக இருந்த காலத்தில் ஒறேஞ், e.Health, Ontario Lottery and Gaming Corprations போன்ற அரச நிறுவனங்களில் நடந்த ஊழல், பண விரயம் இன்றைய முதல்வர் கத்லீன் வின்னை தூங்கவிடாமல் துரத்துகின்றன. மீறித் தூங்கினால் அவை கனவில் வந்து வெருட்டுகின்றன. மாகாண அரசின் கீழ் கையளவு தொலைவில் 560 வாரியங்கள், ஆணையங்கள் இயங்குகின்றன. இவையெல்லாம் திறமாக இயங்குகின்றனவா? தக்க முறையில் கண்காணிக்கப் படுகிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
முற்போக்கு பழமைவாதக் கட்சித் தலைவர் தனது தேர்தல் அறிக்கையில் 100,000 ஆயிரம் அரச பணியாளர்களை அடுத்த 4 ஆண்டுகளில் வேலையில் இருந்து துரத்தப் போவதாகவும் அதே சமயம் பெரும் தொழில்நிறுவனங்களுக்கான வரியை 30 விழுக்காட்டால் குறைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த 8 ஆண்டுகளில் 10 இலட்சம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கப் போவதாகவும் அட்டகாசமான உறுதிமொழிகளை வாக்காளர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் பொருளாதார வல்லுநர்கள் இது பிழையான கணக்கு எனச் சொல்கிறார்கள்.
ஒரு இலட்சம் அரச பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் குடாக்கின் திட்டத்துக்கு லிபரல், புதிய ஜனநாயக் கட்சி, தொழிற் சங்கங்கள், செய்தித்தாள்கள் போன்றவற்றில் இருந்து பாரிய எதிர்ப்பு குடாக்குக்கு எதிராக எழுந்துள்ளது. இந்த அறிவிப்பை வைத்துக் கொண்டு எல்லோரும் அவரை வறுத்து எடுக்கிறார்கள். ஆனால் அவரோ ஒன்ரேறியோ மாகாண அரசுக்கு 1. 2 மில்லியன் ஊழியர்கள் தேவையில்லை என அடித்துச் சொல்கிறார்.
ரிம் குடாக் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஒன்ரேறியோ அரச பணியில் இருப்பவர்கள் எடுக்கிற சம்பளத்துக்கு வேலை செய்வதில்லை. வெள்ளி பிற்பகல் அரச அலுவலங்களுக்குப் போனால் பாதிப் பேர் இருக்கைகளில் இருக்க மாட்டார்கள். அவர்கள் தங்களது வீட்டுக்கு வேளையோடு கிளம்பி இருப்பார்கள். பொதுவாக அரச பணியாளர்களை, முக்கியமாக கீழ் நிலை அரச பணியாளர்களை, தேர்வு மூலம் பணியில் சேர்த்துக் கொள்வதில்லை. ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் தங்களது உறவினர், நண்பர்களைப் பின் கதவால் காதோடு காதாகச் சேர்த்து விடுகிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் வேலை பார்க்கிறார். அவரது மகள் பட்டம் பெற்று வெளியேறியதும் தான் பணி செய்யும் அதே திணைக்களத்தில் மகளைச் சேர்த்துவிட்டார்.
இந்தத் தேர்தலில் ஒரு சிறப்பு அம்சம் 3 தமிழர்கள் – அதுவும் தமிழ் சமூகத்துக்கு நன்கு அறிமுகமானவர்கள் – போட்டியிடுகிறார்கள். இவர்கள் இனப்பற்றும் மொழிப்பற்றும் உடையவர்கள். இவர்கள் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்
1) நீதன் சண் – புதிய ஜனநாயக் கட்சி (ஸ்காபரோ றூச் றிவர்)
2) சாண் தயாபரன் – முற்போக்கு பழமைவாதக் கட்சி (மார்க்கம் யூனியன்வில்)
3) கென் கிருபா – முற்போக்கு பழமைவாதக் கட்சி (ஸ்காபரோ கில்வுட்)
3) கென் கிருபா – முற்போக்கு பழமைவாதக் கட்சி (ஸ்காபரோ கில்வுட்)
இந்தத் தொகுதிகளில் கணிசமான தமிழ் வாக்களார்கள் இருக்கிறார்கள். அவர்களது வாக்குகளே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் எனச் சொல்லப்படுகிறது. எனவே தமிழ் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் இந்த வேட்பாளர்களுக்கு அளித்தால் அவர்கள் வெற்றி பெறுவது நிச்சயம்.
இதில் நீதன் சண் கடந்த தேர்தலின் போது போட்டியிட்டு இரண்டாவது இடத்துக்கு வந்தவர். 2147 (5.91விழுக்காடு) வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்தவர். இவர் பெற்ற வாக்குகள் 13,088 (35.97 விழுக்காடு). 2007 இல் நடந்த தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகளை விட 22.43 விழுக்காடு அதிகமாகும்.
இந்தத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை உறுப்பினராக இருக்கும் பாஸ் பால்கிசூடனோடு (லிபரல்) மீண்டும் நீதன் சண் மோதுகிறார்.
கென் கிருபா ஸ்காபரோ கில்வுட் தொகுதியில் ஓகஸ்ட் 01, 2013 இல் இடம்பெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு 1,247 (5.56 விழுக்காடு) வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்தவர். இவருக்கு விழுந்த வாக்குகள் 7,605 (30.80 விழுக்காடு) ஆகும்.
எந்ததெந்தத் தொகுதிகளில் எந்தெந்த சமூகம் பெரும்பான்மையாக உள்ளதோ அந்தந்தத் தொகுதிகளில் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரை தேர்தலில் நிறுத்துவதை அரசியல் கட்சிகள் ஒரு எழுதாத விதியாக வைத்திருக்கின்றன.
ரொறன்ரோ நகரிலும் அதைச் சுற்றியுள்ள நகரங்களிலும் பெரும் எண்ணிக்கையான தமிழ்மக்கள் வாழ்கிறார்கள். ரொறன்ரோ மாநகரில் 2,791,140 மக்கள் (2013 யூலை) வாழ்கிறார்கள். இதில் தமிழ்மொழி பேசுவோரது விழுக்காடு 1.9 ஆகும். மொழிவாரியாக தமிழ் பேசுவோரது எண்ணிக்கை 10 ஆவது இடத்தில் இருக்கிறது. உண்மையில் இந்த விழுக்காடு இன்னும் அதிகமாக இருக்கலாம். பலர் குடிமக்கள் கணக்கெடுப்பின் போது தங்களைத் தமிழர் என அடையாளப்படுத்தத் தவறியிருக்கலாம்.
இவ்வளவு தொகை மக்கள் இருந்தும் மத்திய, மாகாண, நகர அரசுகளில் தமிழர்களது பிரதிநித்துவம் எமது எண்ணிக்கைக்கு ஒப்பீடாக இல்லை. மைய நாடாளுமன்றத்தில் ஒருவரும் மாநகரசபையில் ஒருவரும் ஆக இருவர் மட்டுமே தமிழ்மக்களைப் பிரதிநித்துவப் படுத்துகிறார்கள். மாகாண நாடாளுமன்றத்திலும் ரொறன்ரோ மாநகரசபையிலும் தமிழர்களது பிரதிநித்துவம் அறவே இல்லாது இருக்கிறது.
தமிழ் சமூகம் கல்வி, வணிகம், தொழில்துறை போன்றவற்றில் வளர்ந்து வரும் சமூகம். தேசிய மட்டத்தில் அதன் அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டிய தேவை இருக்கிறது. எனவே தமிழ்மக்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு தங்களது வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்ய வேண்டியது அவசியமாகும்.
தமிழர்கள் தமிழர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்பது ஜனநாயகத்துக்கு எதிரானதல்ல. சீக்கியர்கள் சீக்கியர்களுக்குத்தான் வாக்களிக்கிறார்கள். மற்ற இனத்தவரும் அப்படித்தான். ஒருபால் இனத்தவர், தொழிற்சங்கங்கள் போன்றவை தங்களைப் பிரதிநித்துவப் படுத்து முகமாக தேர்தலில் போட்டியிடுகின்றன.
ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னர் இங்குள்ள அரசியல் கட்சிகள் தமிழ்ச் மூகத்தைப் பெரிதாக கணக்கில் எடுக்கவில்லை. பழமைவாதக் கட்சியோடு நாம் பேசிய போது தமிழ்மக்கள் இலக்கு வைத்த சமூகங்களில் (targeted communities) ஒன்றாகப் பார்க்கப்பட வில்லை என ஒரு அமைச்சர் சொன்னார். ஆனால் இன்று நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. இப்போது தமிழ்மக்களது வாக்குப் பலத்தை அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தமிழர்களைப் பற்றிய பார்வை மாறிவிட்டது.
குறிப்பாக இராதிகா சிற்சபைஈசன் ஸ்காபரோ றூச்றிவர் தொகுதியில் புதிய ஜனநாயக் கட்சி சார்பாகப் போட்டியிட்டு 5,000 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றார். அதன் பின்னர்தான் ஏனைய கட்சிகள் விழித்துக் கொண்டன. அவருக்கு விழுந்த மொத்த வாக்குகள் 18,935 (40.6 விழுக்காடு) ஆகும். அதுவரை லிபரல் கட்சியின் பாதுகாப்பான தொகுதி என எல்லோராலும் கருதப்பட்ட அந்தத் தொகுதியில் போட்டியிட்ட லிபரல் வேட்பாளர் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
ரொறன்ரோ பெரும்பாகத்தில் தோராயமாக 300,000 இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களது எண்ணிக்கைக்கு ஒப்ப பிரதிநித்துவம் இல்லை. தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தும் முகமாக இந்தத் தேர்தலில் மூன்று தமிழர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். அந்தக் கட்சிகள் வழங்கியிருக்கும் இந்த வாய்ப்பினை சரிவரப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
தமிழ்மக்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் விழுக்காடு பெரிதாக இல்லை. அதிலும் மாகாண நாடாளுமன்றத் தேர்தல் என்றால் அதிக அக்கறை காட்டுவதில்லை. சிலருக்கு தேர்தல் நடைபெறுவதே தெரியாது. தெரிந்தவர்களுக்கும் என்ன நாளில் தேர்தல் நடைபெறுகிறது என்பது தெரியாமல் இருக்கிறது. மைய அரசை விட மாகாண அரசின் செயற்பாடுகள்தான் எமக்கு முக்கியம். கல்வி. நல்வாழ்வு, குடிதண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, முதியோர் ஓய்வூதியம் போன்றவை மாகாண நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட செயற்பாடுகளாகும்.
ஒரு மக்களாட்சி முறைமையில் வாக்குரிமை என்பது மிகவும் பெறுமதி மிக்க ஆயுதமாகும். இந்த வாக்குரிமைதான் மக்களது இறைமை என அழைக்கப்படுகிறது. அதனைத் தமிழ்சமூகம் தனது அரசியல் பலத்தை அதிகரிக்கவும் தனது சமூக நலத்தை மேம்படுத்துவும் பயன்படுத்த வேண்டும்.