பி.பி.சி. உலக சேவையைச் சேர்ந்த நண்பர் ஒருவர்
கிழக்கிலங்கையில் தமிழ் முஸ்லிம் உறவுகள் குறித்த ஒரு நிகழ்ச்சிக்காக கிழக்கில் முஸ்லிம்களைப் பேட்டி கண்டிருந்தார். பல தரப்பட்ட மட்டங்களிலும் அவர் முஸ்லிம்களுடன் உரையாடியிருந்தார். இது தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கும் வந்தபோது அவர் சொன்னார் ”முஸ்லிம்கள் மிகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூகமாகக் காணப்படுகிறார்கள்…
படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லாத் தரப்பினருடனும் நான் கதைத்தேன். தமது சமூகத்தைப் பாதிக்கக்கூடிய விவகாரஙகளில் எதைக் கதைக்க வேண்டும் எதைக் கதைக்கக்கூடாது என்பதில் அவர்கள் மிகவும் அரசியல் மயப்பட்டவர்களாகக் காணப்படுகின்றார்கள்…’ என்று.
அண்மையில் அளுத்கம மற்றும் பேருவளையில் நடந்த சம்பவங்களின் பின், இணையப் பரப்பில் குறிப்பாக, முகநூலிலும் ருவிற்றரிலும் முஸ்லிம் நண்பர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. சிலர் அதிதீவிரமாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார்கள்தான்.
ஆனால், அது ஒரு பொதுப் போக்கு அல்ல. குறிப்பாக, முஸ்லிம்கள் மத்தியில் மதிக்கப்படும் அறிஞர்கள், கல்விமான்கள், மார்க்க அறிஞர்கள் தெரிவிக்கும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்கும்போதும் அப்படித்தான் யோசிக்கத் தோன்றுகின்றது.
இப்படியாக இலங்கைத்தீவிலும் அதிகம் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாகக் காணப்படும் முஸ்லிம்களால் தெரிவு செய்யப்பட்ட அவர்களுடைய தலைவர்கள் அளுத்கம மற்றும் பேருவளையில் நடந்த வன்முறைகளின் பின் எப்படி நடந்து கொண்டார்கள்? அல்லது அத்தகைய வன்முறைகளைத் தடுக்கவோ அல்லது அந்த வன்முறைகளிலிருந்து தமது மக்களைப் பாதுகாக்கவோ அவர்களால் ஏன் முடியாதுபோயிற்று? அதுவும் அரசின் ஓர் அங்கமாக இருந்து கொண்டு மிகவும் மதிப்புக்குரிய அமைச்சர் பதவிகளையும் வகிக்குமவர்களால் தமது மக்களை ஏன் பாதுகாக்க முடியாது போயிற்று?
இக்கேள்விகளை அவற்றின் அடுத்த கட்டத்திற்கு வளர்த்துச் சென்றால் முடிவாக இப்படிக் கேட்கலாம். கடந்த பல தசாப்த கால முஸ்லிம் இணக்க அரசியல் தோல்வியுறுகிறதா?
ஆம். அதுதான் உண்மை. அளுத்கம மற்றும் பேருவளையில் நடந்த வன்முறைகள் இலங்கைத்தீவில் முஸ்லிம்களின் இணக்க அரசியலின் தோல்வியைத்தான் நிரூபித் திருக்கின்றன. அரசின் ஓர் அங்கமாக இருந்தபடியே முஸ்லிம் தலைவர்களால் தமக்கு வாக்களித்த மக்களைப் பாதுகாக்க முடியாமற் போனதை வேறெப்படி விளங்கிக்கொள்வது? நீதி அமைச்சரால் தனது சொந்த மக்களுக்கே நீதி வழங்க முடியாமல் போனதை எப்படி விளங்கிக்கொள்வது?
ஆனால், முஸ்லிம்களின் இணக்க அரசியல் தோல்வியுற்றது அளுத்கம மற்றும் பேருவளையில்தான் என்பதல்ல. அது அதற்கும் ஐந்தாண்டுகளுக்கு முன்பே நந்திக் கடற்கரையில் தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட போதே தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இதை இரண்டு விதமாக விளங்கிக்கொள்ள முடியும்.
முதலாவது, கோட்பாட்டு ரீதியாக. அதாவது, சிங்கள பௌத்த மேலாதிக்கம் அதன் நவீன வரலாற்றில் பெற்ற ஆகப் பெரிய வெற்றி அது. அந்த வெற்றியிலிருந்து நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்திருந்தால் இலங்கைத்தீவை பல்லினத் தன்மை மிக்க ஒரு சமூகமாகக் கட்டியெழுப்ப முயன்றிருக்கலாம். பல்லினத் தன்மை மிக்க ஓர் அரசியல் சூழலில்தான் இணக்க அரசியலை அதன் மெய்யான பொருளில் முன்னெடுக்கலாம்.
இணக்க அரசியல் என்பது சரணாகதி அரசியல் அல்ல. பரஸ்பரம் பலங்களை ஏற்றுக்கொண்டு ஒருவர் மற்றவரின் கௌரவமான இருப்பையும், பாதுகாப்பையும் ஏற்றுக்கொண்டு அங்கீகாரிக்கும்போதே இணக்க அரசியல் உருவாகின்றது. அதாவது, பன்மைத்துவமும் பல்லினச் சூழலும் தான் இணக்க அரசியலுக்கான முன்னிபந்தனைகளாகும்.
மாறாக, ஒற்றைப் படைத் தன்மை மிக்க தட்டையான ஓர் அரசியல் சூழலில் இணக்க அரசியலுக்கு இடமேயில்லை. வெற்றி வாதம் யாரையும் தனக்கு இணையாகக் கருதாது. யாரும் தன்னை முந்திக் கொண்டு செல்வதையும் அனுமதிக்காது. அங்கே சரணாகதி அரசியலை மட்டுமே செய்ய முடியும்.
வெற்றிவாதமும் இணக்க அரசியலும் ஒன்றாக இருக்க முடியாது. ஆனால், வெற்றிவாதம் அடிப்படை வாதமும் ஒட்டிப் பிறந்த குழந்தைகள்தான். வெற்றிவாதத்தின் நிழலில் புதிய ஊட்டச்சத்தைப் பெற்றிருக்கும் அடிப்படை வாதமானது பல்லினச் சமூகத்திற்கும் பல்வகைமைகளுக்கும் எதிராகவே சிந்திக்கும்.
எனவே, நந்திக் கடற்கரையில் பெற்ற கிடைத்தற்கரிய வெற்றிகளுக்குப் பின் வெற்றிவாதமானது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விட்டு வைத்திருக்கும் ஒரேயொரு தெரிவு சரணாகதி அரசியல் தான். இது கோட்பாட்டு ரீதியிலான ஒரு விளக்கம்.
அடுத்தது, உத்தி ரீதியிலான விளக்கம். யுத்த காலங்களில் முதலாவது ”சிறுபான்மைக்கு’ எதிராக இரண்டாவது சிறுபான்மையைப் பயன்படுத்துவதிலும், இவ்விரண்டு சிறுபான்மையினரையும் தங்களுக்கிடையில் மோதவிடுவதிலும் இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் யாவும் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வந்தன.
யுத்த காலத்தில் அதற்கொரு அத்தியாவசியத் தேவை இருந்தது. ஆனால், முதலாவது சிறுபான்மை தோற்கடிக்கப்பட்ட பின் இரண்டாவது சிறுபான்மையை ஒரு கருவியாகக் கையாள வேண்டிய உத்தி பூர்வமான தேவைகளும் குறைந்துவிட்டன. அதாவது, இரண்டாவது சிறுபான்மையை அரவணைக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.
எனவே, மேற்கண்ட இரண்டு விளக்கங்களின் அடிப்படையிலும் பார்த்தால், முஸ்லிம்களுக்கான இணக்க அரசியல் வெளி மேலும் சிறுத்துக் கொண்டு வருவதைக் காணலாம்.
ஒரு புறம் கூட்டமைப்பு வடமாகாண சபை உருவாக்கப்பட்ட பின் கொழும்பை நோக்கி நல்லிணக்கச் சமிஞ்கைளை காட்டி கிட்டத்தட்ட 8 மாதங்களாகிவிட்டன. அரசாங்கம் இன்று வரையிலும் அச்சமிஞ்கைகளைப் பெரியளவிற் பொருட் படுத்தவில்லை. கடந்த சில தசாப்தங்களில் கொழும்பை நோக்கித் தமிழர் தரப்பால் காட்டப்பட்ட மிக நெகிழ்ச்சியான நல்லிணக்கச் சமிஞ்கைகள் அவை.
இந்திய மற்றும் மேற்கத்தையப் பின்பலங்களுடன் காட்டப்பட்ட சமிஞ்கைகள் அவை. அரசாங்கம் அவற்றையே பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் இரண்டாவது சிறுபான்மையினரான முஸ்லிம்களுடைய இணக்க அரசியலின் எதிர்காலம் எப்படி அமையும்?
நிச்சயமாக முஸ்லிம்கள் வன்முறை சார்ந்த எதிர்ப்பு அரசியலுக்குப் போகப் போவதில்லை. அளுத்கம மற்றும் பேருவளையில் நடந்த வன்முறைகளுக்குப் பின் முஸ்லிம்கள் மத்தியில் மதிக்கப்படும் அறிஞர்கள், பிரமுகர்கள், கல்விமான்கள் மற்றும் படைப்பாளிகள் போன்றவர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் இது தெரியவரும்.
அவர்கள் பொதுபல சேனாவையும், சிங்களப் பொதுசனத்தையும் பிரித்துப் பார்க்க முற்படுகிறார்கள். அவர்களிற் சிலர் அரச படைகளையும், பொலிஸையும் தேசியப் படைகள் என்று விளிப்பதோடு அவற்றை எதிர்க்கக் கூடாது என்றும் அறிவுரைகள் கூறுகிறார்கள். குறிப்பாக, முஸ்லிம்கள் மத்தியில் ஆயுத எதிர்ப்பு எதுவும் தோன்றிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையை அவர்களில் அநேகரிடம் காண முடிகிறது.
அதாவது, அவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களை வன்முறை சார்ந்த ஓர் எதிர்ப்பு அரசியலை நோக்கித் தூண்ட விரும்பவில்லை. அதேசமயம், முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை அவர்கள் அளுத்கம மற்றும் பேருவளையில் நடந்த வன்முறைகளை இணக்க அரசியலில் ஏற்பட்ட பிணக்குகள் என்றே பார்ப்பதாகத் தெரிகிறது.
வாக்களித்த மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இரண்டாகக் கிழிபடும் அவர்களுடைய நிலையை கிழக்கில் வசிக்கும் படைப்பாளியான றியாஸ் குரானா முகநூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்….”ஒரே தருணத்தில் எஜமானுக்கு எதிராக ஆவேசமாகக் குரைப்பதற்கும் நன்றி பாராட்டி வாலை ஆட்டுவதற்கும் ஒரு நாயைப் பழக்குவது எவ்வளவு கஷ்டம். ஆனா, பழக்கியிருக்கிறாங்கப்பா.’……………..
இணக்க அரசியல் என்ற பெயரில் சரணாகதி அரசியலைச் செய்யும் தலைவர்களால் அப்படித்தான் செயற்பட முடியும். அவர்களால் முழு அளவு எதிர்ப்பு அரசியலுக்குப் போக முடியாது.
ஏனெனில், இலங்கைத்தீவின் முஸ்லிம் யதார்த்தம் அது. முஸ்லிம்களின் முழுச் சனத்தொகையிலும் 40 விகிதமானவர்களே வட-கிழக்கில் வசிக்கின்றார்கள். 60 விதமானவர்கள் வடகிழக்கிற்கு வெளியேதான் வசிக்கின்றார்கள். குறிப்பாக, கிழக்கில் முஸ்லிம்களும் தமிழர்களும் ”புட்டும் தேங்காய்ப்பூவும் போல அடுத்தடுத்துக் காணப்படுகிறார்கள்.
ஆனால், தெற்கில் பிரியாணிக்குள் போட்ட பிளம்ஸ்களைப் போலச் சிதறிக் காணப்படுகிறார்கள். மதம் தான் அவர்களைப் பிணைக்கிறது நிலமல்ல. நிலத் தொடர்ச்சியற்ற கிராமங்களில், நகரங்களில் வசிக்கும் ஒரு சமூகம் நிலம் சார்ந்து சிந்திப்பது கடினம். இது முதலாவது.
இரண்டாவது, பெரும்பாலான முஸ்லிம்கள் வணிகர்களாகவே காணப்படுவது. ஒரு வணிக சமூகம் எப்பொழுதும் சந்தை சார்ந்தே சிந்திக்கும். அது நிலம் சார்ந்து சிந்திக்க முடியாது. ஆனால், தேசிய மனப்பான்மை எனப்படுவது பெருமளவுக்கு நிலம் சார்ந்தது. இந்நிலையில் சந்தையைச் சார்ந்து சிந்திக்கும் ஒரு சமூகம் அதன் அரசியல் முடிவுகளையும் அந்த அடிப்படையில்தான் எடுக்கும்.
எனது நண்பர் ஒருவர் மூன்றாம் கட்ட ஈழப்போர் கால கட்டத்தில் சொன்னார், ”முஸ்லிம்கள் இப்பொழுது வடக்கில் இருந்திருந்தால் பொருளாதாரத் தடையை வெற்றிகரமாக உடைத்திருப்பார்கள். ஏனெனில், எந்தத் தடையைத் தாண்டியும் வியாபாரம் செய்ய அவர்களால் முடியும்’ என்று.
அதேசமயம் யுத்தம் முஸ்லிம்களுடைய தொழில் தெரிவுகளில் கணிசமான அளவு மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஒரு அவதானிப்பு உண்டு. குறிப்பிடத்தக்க விகிதத்தினர் தமது பாரம்பரியத் தொழில்துறைகளைக் கைவிட்டு வேறு தொழில்களுக்கு நகர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக, யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக அகற்றப்பட்ட பின், அகதி வாழ்வில் இரண்டாம் தலைமுறையினர் குறிப்பிடத்தக்க அளவுக்கு தமது பாரம்பரியத் தொழில்களிலிருந்து விலகிச் சென்றிருப்பதாக ஒரு அவதானிப்பு உண்டு. இவற்றுக்கெல்லாம் சரியான புள்ளிவிபரங்கள் வேண்டும்.
எனினும், யுத்த காலங்களில் முஸ்லிம்களின் மத்தியிலிருந்து கணிசமான தொகையினர் தமது பாரம்பரியத் தொழில்களைக் கைவிட்டு, நிர்வாகம், கல்வி, சட்டம் முதலாகப் பல்வேறு துறைகளுக்குள் நுழைந்து அங்கெல்லாம் மேலெழுந்திருப்பதை இங்கு சுட்டிக்காட்டலாம்.
இப்படியாக இரண்டு பிரதான இனங்களும் மோதலில் ஈடுபட்டிருந்த ஒரு கால கட்டத்தில் இரண்டாவது சிறுபான்மையாகக் காணப்படும் ஒரு சமூகம் எல்லாத் துறைகளிலும் முன்னேறி மேலெழுந்துவிட்டது என்ற ஒரு அபிப்பிராயம் சிங்களக் கடுங்கோட்பாளர்கள் மத்தியில் காணப்படுகிறது. வர்த்தகத் துறையில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் முஸ்லிம்கள் நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தை முந்திச் செல்ல முற்படுகின்றார்கள் என்ற ஓர் அச்சம் அவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.
தமிழர்களைத் தோற்கடித்த பின் போரற்ற வெற்றிடத்தில் முஸ்லிம்களின் வளர்ச்சி அவர்களுக்குத் துருத்திக் கொண்டு தெரிகிறது. தமிழர்கள் நிலத்தைக் கேட்கிறார்கள். முஸ்லிம்கள் சந்தையைக் கேட்கிறார்கள் என்று அவர்கள் அச்சமடைந்ததின் விளைவே இப்பொழுது நடந்து கொண்டிருப்பவையெல்லாம்.
இது ஒரு புதிய போக்கு அல்ல. ஏற்கனவே இருந்து வந்த ஒரு போக்கின் வளர்ச்சிதான். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பும் இப்படியொரு வன்முறை 1915இல் இடம்பெற்றது. அப்பொழுது தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களுடன் நின்றார்கள். அதற்கு நன்றிக் கடன் தீர்ப்பதற்காக சிங்களத் தலைவர்கள் தமிழ்த் தலைவர்களின் குதிரை வண்டிக்கு குதிரையாக மாறி வண்டியை இழுத்தார்கள்.
கடந்த ஒரு நூற்றாண்டு காலத்துக்குள் இது போல பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, 2009இற்கு முன்னரான சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலப் பரப்பில் சிங்கள பொளத்த மேலாதிக்கத்தின் கவனம் முழுவதும் தமிழர்களைத் தோற்கடிப்பத்தில் குவிந்திருந்தது. இப்பொழுது உள்நாட்டில் தமிழர்களை மண்ணோடு மண்ணாகச் சேர்த்து மிதித்தாயிற்று. எனவே, போரற்ற வெளியில் முஸ்லிம்களின் தொழில் முனைவு துருத்திக் கொண்டு தெரிகிறது. இது தான் பிரச்சினை.
ஆனால், அதற்காக முஸ்லிம் சமூகம் எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுக்குமா? இல்லையென்றே தோன்றுகிறது. ஏனெனில், நிலத் தொடர்ச்சியின்றி சிதறுண்டு கிடக்கும் இரண்டாவது சிறுபான்மை அவர்கள். மதம் தான் அவர்களை ஒருங்கிணைத்து வைத்திருக்கிறது.
முழு அளவு எதிர்ப்பு அரசியல் என்று புறப்பட்டால் தெற்கில் சிதறிவாழும் 60 விகிதமானவர்கள் முதலில் பலியாடுகளாவார்கள். அதேசமயம், கிழக்கில் தமிழர்களோடு சேர்ந்து எதிர்ப்பு அரசியல் நடாத்த முடியாத அளவு கசப்பான இரத்தம் தோய்ந்த ஒரு கடந்த காலம் பிரேத பரிசோதனை செய்யப்படாமலே கிடக்கிறது.
இது விசயத்தில் தமிழர்களிடமிருந்தே முதலில் நல்லெண்ணச் சமிஞ்கைகள் காட்டப்படவேண்டும். ஏனெனில், பெரும்பான்மை அல்லது வெற்றிபெற்ற தரப்பிடமிருந்து வரும் நல்லெண்ணம் தான் உறுதியானது. உண்மையானது. மேலும் தமிழ்த் தேசியம் தனது ஜயநாயக உள்ளடக்கத்தின் செழிப்பை நிரூபிப்பதற்குரிய பிரதான இடங்களில் இதுவுமொன்று.
அளுத்கம மற்றும் பேருவளையில் நடந்த வன்முறைகளின் பின் தமிழர்கள் தரப்பில் நாட்டிற்குள்ளும், நாட்டிற்கு வெளியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவிற்கு முஸ்லிம்களுக்கு ஆதாரவான செயற்பாடுகளைக் காண முடிகிறது. யாழ்ப்பாணத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்று சேர்ந்து எதிர்ப்புக் காட்டியதை இங்கு சுட்டிக்காட்டலாம்.
கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம்களுக்கு இப்பொழுது கிடைத்திருக்கும் ஆசானங்கள் ஒருவிதத்தில் தமிழ்-சிங்கள முரண்பாட்டின் விளைவுதான். ஆனால், அதுகூட ஒரு மெய்யான பலம் அல்ல. மாகாண சபையின் செங்கோலைத் தூக்கிக் கொண்டு ஒடுமளவுக்குத்தான் அங்கே நிலைமையிருக்கிறது.
எனவே, முஸ்லிம்கள் தமது பலம் எதுவென்பதையும், தமது மெய்யான நண்பர்கள் யார் என்பதையும் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட கால அனுபவத்திலிருந்து கற்றுணர வேண்டும். இணக்க அரசியல் எனப்படுவது சரணாகதி அரசியலாகச் சுருங்கிப் போயிருக்கும் ஒரு நாட்டில், பன்மைத்துவத்தையும், பல்லினச் சூழலையும் உறுதி செய்யாவிட்டால் இணக்க அரசியல் இன்னுமின்னும் தேய்ந்துகொண்டே போகும்.
இச்சிறிய தீவில் பல்லினச் சூழலையும் பன்மைத்துவத்தையும் உருவாக்குவதென்றால் முஸ்லிம்கள் தமிழர்களோடு சாத்தியமான அளவிற்கு கைகோர்க்க வேண்டியிருக்கும். ஏனெனில், தமிழர்களுக்கான இறுதித் தீர்வில் தான் முஸ்லிம்களுக்கான இறுதித் தீர்வும் பிரிக்கப்படவியலாதபடி பிணைக்கப்பட்டிருக்கிறது.