கடின உழைப்பு, செய்நேர்த்தி, பொதுநோக்கு- முன்னாள் போராளிகளே தீவிரம்: பொ. ஐங்கரநேசன் - TK Copy கடின உழைப்பு, செய்நேர்த்தி, பொதுநோக்கு- முன்னாள் போராளிகளே தீவிரம்: பொ. ஐங்கரநேசன் - TK Copy

  • Latest News

    கடின உழைப்பு, செய்நேர்த்தி, பொதுநோக்கு- முன்னாள் போராளிகளே தீவிரம்: பொ. ஐங்கரநேசன்

    சமூக சேவைகள் மற்றும் பொதுநோக்கு வேலைத் திட்டங்களில்
    இப்போது அதிகம் முன்னாள் போராளிகளே முன்னால் நிற்கிறார்கள். வலிந்து வந்து உதவி செய்பவர்களாக மாத்திரம் அல்லாமல், செய்பவற்றைச் செம்மையாக வினைத்திறனுடன் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள் என வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
    கடின உழைப்பு, செய்நேர்த்தி, பொதுநோக்குப் போன்ற நற்பண்புகளெல்லாம் இவர்களது தலைமைத்துவத்தால் இவர்களுக்கு ஊட்டிவளர்க்கப்பட்டவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
    பார்த்தீனியம் ஒழிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு கிலோ பார்த்தீனியத்துக்கு 10 ரூபா என்று பணம் கொடுத்துக் கொள்வனவு செய்யும் திட்டமொன்றை வடமாகாண விவசாய அமைச்சு முன்னெடுத்து வருகிறது.
    இதன் முதற்கட்ட நடவடிக்கையில் பங்கேற்றவர்களுக்குப் பணம் வழங்கும் நிகழ்ச்சி இன்று வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலகத்தில் நடைபெற்றது.
    இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ. ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையில் மேலும்,
    பார்த்தீனியம் விவசாயத்துக்கும் மனித உடல்நலத்துக்கும் மாத்திரம் அல்லாமல் உள்ளூர் தாவர இனங்களின் உயிர்ப்பல்வகைமைக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள ஓர் அந்நிய ஊடுருவல் இனம் என்பதால்தான் அதனை ஒழிப்பதில் விவசாய அமைச்சு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.
    பொதுமக்களின் பங்கேற்பு இல்லாமல் எந்த ஒரு திட்டமும் வெற்றி பெறாது. அதனால் வேலைக்கு உணவு, பணம் கொடுத்துக் கொள்வனவு என்று பொதுமக்களையும் பார்த்தீனியம் ஒழிப்பில் இணைத்துக்கொள்ளும் விதத்திலான திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஆனால், பொதுமக்களின் பங்கேற்பு எதிர்பார்த்ததைவிடவும் குறைவாகவே உள்ளது.
    போருக்குப் பிறகு, அரச சார்பற்ற நிறுவனங்களின் வருகையோடு எல்லாவற்றுக்கும் அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் சமூகமாக எமது சமூகம் மாறிவிட்டது. வீட்டு வாசலில் நிற்கும் பார்த்தீனியத்தைக்கூட இன்னொருவர் வந்து பிடுங்கவேண்டும் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் விதிவிலக்காக, பார்த்தீனியம் ஒழிப்பில் முன்னாள் போராளிகள் பலர் விருப்பத்தோடு எங்களுடன் கைகோர்த்திருக்கிறார்கள்.
    முன்னாள் விடுதலைப் புலிகள் தடுப்பில் இருந்து வந்தவர்கள் என்பதால் அவர்கள் யாரும் குற்றவாளிகள் அல்லர். தங்கள் காலத்துக்குரிய பணியை நிறைவேற்றப்புறப்பட்டவர்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தில் இருந்து ஒதுங்கியும் பயந்து ஒடுங்கியும் வாழுகின்ற நிலையே இன்று நிலவுகிறது.
    இந்நிலை மாற்றப்பட வேண்டும். போராளிகள் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. போராளிகளைப் பணியில் இணைத்துக்கொள்வதற்கும் யாரும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. அர்ப்பணிப்பு உணர்வும் செயலூக்கமும் மிக்க ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளையும் உள்வாங்கக்கூடிய வேலைத்திட்டங்களை அடையாளங்கண்டு முன்னெடுப்பது நாட்டின் அபிவிருத்திக்கு அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.
    இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு. எல். எம் ஹால்தீன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி. சிவகுமார், பிரதி விவசாயப் பணிப்பாளர்கள் கி.சிறீபாலசுந்தரம், அ. சகீலாபானு, மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ. சிவபாதம், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந. சுதாகரன் மற்றும் விவசாயப் போதனாசிரியர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
    500 கிலோவுக்கும் அதிகமான பார்த்தீனியத்தை வழங்கியவர்களுக்குப் பணத்தோடு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: கடின உழைப்பு, செய்நேர்த்தி, பொதுநோக்கு- முன்னாள் போராளிகளே தீவிரம்: பொ. ஐங்கரநேசன் Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top