இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை
மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை விசாரணைக்குழுவை நியமித்துள்ளமை வரவேற்கத்தக்கது. இந்தக் குழுவின் விசாரணைகளுக்குத் தேவையான சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் வழங்கவும் தயாராகவுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
விசாரணைக்குத் தேவையான சாட்சியங்களையும் ஆவணங்களையும் திரட்டும் செயற்பாடுகளை நாம் முன்னெடுப்போம். சாட்சியங்களின் பாதுகாப்பு தொடர்பிலும் நாம் கவனம் செலுத்துவோம் என்றும் கூட்டமைப்பு தெரிவித்தது.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதிபதியான டேம் சில்வியா கார்ட்ரைட் தலைமையிலான குழுவினரின் விபரங்கள் இன்றைய தினம் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளையினால் வெளியிடப்படவுள்ள நிலையில் குறித்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டிருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.
அத்துடன் அவ்விசாரணைக் குழுவானது முன்னெடுக்கவிருக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். யுத்தம் நிறைவடைந்து ஐந்தாண்டுகளைக் கடந்துள்ள நிலையில் தற்போதும் தமிழ் மக்களின் பூர்வீகப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கில் இராணுவமயமாக்கப்பட்ட நெருக்கடியான நிலைமைகளே காணப்படுகின்றன. திட்டமிட்ட ரீதியில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காணிச் சுவீகரிப்பு என்றபெயரில் மீள்குடியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டு பூர்வீக நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. காணமல் போனவர்கள் தொடர்பில் எந்தவிமான தகவல்களும் வழங்கப்படாது உறவினர்கள் தொடர்ந்தும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றார்கள். பெண்கள், இளைஞர் யுவதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதோடு திடீர் கைதுகளும் இடம்பெறுகின்றன.
இவற்றுக்கு எதிராக குரல்கொடுப்பவர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் ஜனநாயக ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு இராணுவ, புலனாய்வாளர்கள் முழு வினைத்திறனுடன் செயற்படுகின்றார்கள். இவ்வாறான நிலைமையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் விசாரணையொன்று நடத்தப்பட்டு நீதி கிடைக்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.
இதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமென முன்னதாகவே அறிவித்திருந்தது. அதற்கமைவாக அண்மைய தினங்களாக மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்திருந்தோம். அடுத்த கட்டமாக முன்னெடுப்பதற்கும் தயாராகி வருகின்றோம். அதேபோனறு விசாரணைகளுக்கு தேவையான சாட்சியங்கள், ஆவணங்களை திரட்டும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கவிருப்பதோடு மட்டுமன்றி சாட்சியங்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் உரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றோம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரப்பரவலாக்கத்துடனான அர்த்தமுள்ள தீர்வொன்றை முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் பின்னடிப்புச் செய்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்த பட்சம் நியாயமொன்று கிடைக்கவேண்டும் என்பதில் தமிழ் மக்களின் ஆணைபெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுதியாக உள்ளது என்றார். முக்கிய கலந்துரையாடல் இதேவேளை இன்றை தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 26ஆவது அமர்வு ஆரம்பமாகின்றது.
இந்நிலையில் எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றத்தின் அமர்வுகள் ஆரம்பமாகின்றன. இதன்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூடும் பாராளுமன்றக் குழுவில் ஐ.நா கூட்டத்தொடர் பற்றிய முக்கிய விடயங்கள் மற்றும் அடுத்த கட்டநடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.