முப்பது வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன்
பின்னர் நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக அரசாங்கம் கூறி வருகின்ற போதிலும் இன ரீதியாக மக்கள் பிளவுபட்டு கிடப்பதையும், சமய ரீதியிலான முரண்பாடுகளையுமே காணக் கூடியதாக இருக்கின்றது. முப்பது வருடங்களாக இந்த நாட்டில் பயங்கரவாதம் கோலோச்சியதாகவும், அதனை முறியடித்து மக்களை மீட்டு உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு. ஆனால், சிறுபான்மையினராகிய தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் அங்கீகரிக்கப்படவில்லை.அவர்கள் தமது பிரதேசங்களில் சுயமாக நிர்வாகம் நடத்தவும், ஆட்சி அதிகாரங்களைக் கொண்டு நடத்தவும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது தமிழ் மக்களின் நீண்டகால குற்றச்சாட்டாகும். இந்த உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களுடன் சரிசமனாக இந்த நாட்டில் வாழ்வதற்காகவும் தாங்கள் போராடி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தையே, அரசாங்கம் பயங்கரவாதமாகச் சித்திரித்து, அதனை ஒழித்துக் கட்டுவதற்கான இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதும் தமிழர் தரப்பு கூற்றாகும். ஜனநாயக ரீதியாக மக்களுக்கு வழங்கப்பட வேண்டியவற்றை அரசாங்கம் தங்களுக்கு வழங்க மறுத்து வருகின்றது.
பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு, ஜனநாயக நடைமுறைகளை, சர்வாதிகாரப் போக்கை நோக்கி அரசு முன்னகர்த்திச் செல்கின்றது என்பதும் தமிழர் தரப்பில் வைக்கப்பட்டுள்ள முக்கியமான குற்றச்சாட்டாகும். அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு அல்லது அதிகாரப் பகிர்வின் ஊடாக இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்து வந்துள்ளது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளே, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருந்தார்கள் என்பது அரசாங்கத் தரப்பினரால் புலிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த முக்கியமான குற்றச்சாட்டாகும்.
இணக்க அரசியல் நடைமுறையைக் கடைப்பிடித்திருந்த தமிழ் அரசியல்வாதிகளும்கூட, இதனை ஆமோதித்து தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கின்றனர். இன்றும் கூட விடுதலைப்புலிகள் எதிர்ப்பரசியல் நடைமுறையைக் கடைப்பிடித்ததற்குப் பதிலாக இணக்க அரசியலைக் கடைப்பிடித்திருந்தால், முள்ளிவாய்க்காலில் ஏற்பட்டிருந்த பேரவலம் நேர்ந்திருக்காது என்று அவர்களில் சிலர் சுட்டிக்காட்டி வருவதைக் காண முடிகின்றது. இனப்பிரச்சினைக்கு இதயசுத்தியுடன் கூடிய ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்பதும் தமிழர் தரப்பு நிலைப்பாடாக உள்ளது. அரசியல் ஆய்வாளர்கள், அவதானிகளும் இந்தக் கருத்தை மறுதலிக்க வில்லை.
ஆனால் முக்கியமாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குத் தடையாக இருந்ததாகக் கூறப்படுகின்ற விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு ஒழிக்கப்பட்டுவிட்டார்கள். அரசியல் தீர்வுக்குத் தடையாக இருந்த காரணி அகற்றப்பட்டுவிட்டது, அந்த நிலையில் ஐந்து வருடங்களாக அரசாங்கம் ஏன் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் முயற்சிகளை அர்த்தமுள்ள வகையில் முன்னெடுக்கவில்லை என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை விட்டுக் கொடுப்புடன் அல்லது திறந்த மனதுடன் முன்னெடுப்பதற்கு முன்வராத போதிலும், அரசாங்கம் ஜனநாயக நடைமுறைகளையாவது திறந்த மனதுடன் கடைப்பிடித்திருக்க வேண்டும்.
அதனையும் அது செய்யவில்லை என்பதே யதார்த்த நிலையாக இருக்கின்றது, ஊடகத்துறை மீதான அடக்குமுறை யுத்தம் முடிவடைந்த பின்பும், யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களுக்குள் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் சென்று வருவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கவில்லை. மாறாக அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மட்டுமே இராணுவத்தினரால் அந்தப் பிரதேசத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இராணுவத்தினர் விரும்பிய அல்லது அரசாங்கம் தான் விரும்பிய நிகழ்வுகளுக்கும், விரும்பிய இடங்களுக்கும் மட்டுமே செய்தியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அரசாங்கம் கூறுவதை மட்டுமே வெளியிட வேண்டும்.
அரசாங்கம் காட்டுகின்ற வகையில் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களின் நிலைமைகளை ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் நோக்க வேண்டும் செய்திகளாக வெளியில் கொண்டு வர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பமாகும். ஊடகங்கள் சுதந்திரமாகச் செயற்படுவதை அரசு விரும்பவில்லை. இ:ப்போதும் கூட அந்த நிலைப்பாட்டில் இருந்து அரசாங்கம் விலகியதாகத் தெரியவில்லை. விடுதலைப்புலிகளே ஜனநாயக உரிமைகளை மறுத்திருந்தார்கள். ஊடகங்கள் சுதந்திரமாகச் செயற்படுவதை அவர்கள் விரும்பியிருக்கவில்லை என பல வழிகளில் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சுமத்துகின்ற அரசாங்கமே, ஊடகங்கள் சுதந்திரமாகச் செயற்படுவதைத் தடுத்து வந்துள்ளது. தடுத்து வருகின்றது.
யுத்தகாலத்திலும்சரி, அதற்குப் பின்னரும்சரி ஊடகங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் இன்னுமே சட்டத்தின் முன் கொண்டு வரப்படவில்லை. இந்தக் குற்றவாளிகளை, ஊடகவியலாளர்களைக் கொலை செய்தவர்களை அரசாங்கம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. சட்ட ரீதியாக அவர்களைத் தண்டிக்கவுமில்லை. மாறாக ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்துகின்ற போக்கு அதிகரித்துச் செல்வதையே காண முடிகின்றது. இலங்கையில் ஊடகங்கள் சுதந்திரமாகச் செயற்படுகின்றன. அவைகள் தாங்கள் விரும்பியவாறு யாரையும், விமர்சனம் செய்வதற்கு உரிமை இருக்கின்றது.
அச்சமில்லாத வகையில் ஊடகவியலாளர்கள், அரசாங்கத்தைக் கண்டிப்பதற்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கின்றது. ஊடகங்களை அடக்கும் வகையில் அவர்களுடைய செயற்பாடுகளைத் தடுக்கும் வகையில் செய்தித் தணிக்கை கிடையாது என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் உண்மையில் நிலைமை எதிர்மாறாகவே இருக்கின்றது. ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தமது பாதுகாப்பு குறித்து அச்சமடைந்திருப்பதையே காண முடிகின்றது. அவர்கள் சுயதணிக்கை முறையிலேயே செயற்பட்டு வருகின்றார்கள். அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகின்ற ஊடகங்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் மாற்று வழிகளின் ஊடாக நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன.
அந்த ஊடகங்களில் பணியாற்றியவர்கள் அடையாளம் தெரியாத ஆட்களினால் அச்சுறுத்தப்பட்டு, பல தடவைகளில் தாக்கப்பட்டு, உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டே ஓட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அவ்வாறு நாட்டை விட்டுச் சென்றுள்ளவர்களின் பெயர்ப்பட்டியல் நீண்டுகொண்டிருக்கின்றது. அதேநேரம் ஊடகவியலாளர்கள் தமது தொழிற் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சியைக் கூட வெளிப்படையாகப் பெற முடியாத நிலைமைக்கு இப்போது ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள். ஊழல்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்ற ட்ரான்ஸ்பெயரன்சி இன்ரநஷனல் என்ற நிறுவனத்தினால் வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு நடத்தப்பட்ட ஒரு பயிற்சிப்பட்டறை இரண்டு தடவைகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.
மோசமாக யுத்தம் நடைபெற்ற காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி விசாரிப்பதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையின் அடிப்படையில் இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காகப் புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு இந்த நிறுவனம் பயிற்சிப்பட்டறைகளை ஒழுங்குபடுத்தி நடத்தியிருந்தது. இந்த, தொடர் பயிற்சிப்பட்டறையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பமளிக்கப்பட்டு, பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள மின்னேரியா என்ற இடத்தில் மே மாதம் ஒரு பயிற்சி நெறி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் பயிற்சிநெறியை நடத்தவிடாமல், அது நடைபெறவிருந்த ஹோட்டலுக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து, பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி அந்தப் பயிற்சி நெறி நிறுத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் அந்தப் பயிற்சி நெறி நீர்கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டபோது, இரண்டாவது நாள் மாலையில் அந்த ஹோட்டலுக்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அந்தப் பயிற்சி நெறி நடத்தப்படக் கூடாது என்று கோஷமிட்டார்கள். அதுமட்டுமல்லாமல், அந்தப் பயிற்சி நெறியை ஒழுங்கு செய்திருந்த ட்ரான்ஸ்பெயரன்சி இன்ரநஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று ஊழியர்களின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தார்கள்.
டொலர்களுக்காக நாட்டை விற்பனை செய்பவர்கள் என்றும், நாட்டுக்குத் துரோகம் செய்கின்ற தேசத்துரோகிகள் என்றும் அந்த பதாதைகளில் அவர்கள் வர்ணிக்கப்பட்டிருந்தார்கள். முன்னாள் இராணுவத்தினராகிய நல்லிணக்கத்திற்கான அமைப்பு என்ற அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்ததாகப் பொலிசார் தெரிவித்திருந்தனர். பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்பதற்காகப் போராடிய இராணுவத்தில் பணியாற்றியவர்கள் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அமைப்பு ஒன்றை உருவாக்கிச் செயற்படுவது வரவேற்கத்தக்க விடயமாகும். ஆனால், நல்லிணக்கம் என்று கூறிக்கொண்டு, நல்லிணக்கத்திற்கு விரோதமான காரியங்களில் ஈடுபடுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அது, குளிக்கப் போய், சேறு பூசியதாகவே முடியும். வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பங்குபற்றியிருந்த அந்தப் பயிற்சிப் பட்டறைகளுக்கு எதிராக நடத்தப்பட்டிருந்த இரண்டு ஆர்ப்பாட்டங்களுமே, முன்கூட்டியே நன்கு திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டிருந்தது. நீர்கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் டிஜிட்டல் அச்சுப் பதிவு செய்யப்பட்டிருந்த பதாதைகளையே ஏந்தியிருந்தார்கள்.
முறையற்ற ஒரு காரியம் நடைபெறுவதை அறிந்து அதற்கு எதிராக ஆத்திரம் கொண்டு திடீரென மக்கள் பொங்கி எழுந்ததைப் போன்று இந்த ஆர்ப்பாட்டத்தைக் காட்டுவதற்கு முயற்சிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அது நடத்தப்பட்ட முறை, அதில் எழுப்பப்பட்டிருந்த கோஷங்கள், பதாதைகளில் குறிப்பிடப்பட்டிருந்த வாசகங்கள் போன்றவை, அரசாங்கத்தின் மறைமுகமான ஆதரவு, ஆசியுடனேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது என்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கின்றன.
சர்வதேச தொண்டு நிறுவனங்கள், அரசுக்கு எதிரானவை, அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்துகின்ற காரியங்களையே முன்னெடுக்கின்றன என்ற மாயை அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன் காரணமாகவே, சர்வதேச நிறுவனங்களின் செயற்பாடுகளை அரசாங்கம் மோசமான முறையில் கட்டுப்படுத்தி வருகின்றது. யுத்தத்தின் பாதிப்புகளினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் மீள்கட்டமைப்புப் பணிகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளில் எற்பட்டுள்ள இடைவெளிகளை நிரப்புவதிலும், அதன் மூலம் மக்களுக்கு நன்மையளிப்பதிலும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அளப்பரிய சேவையாற்றி வந்துள்ளன.
ஆயினும், அந்த நிறுவனங்களின் செயற்பாடுகளை அரசாங்கம் அரசியல் நோக்கங்களுக்காக விருப்பமில்லாத ஒரு போக்கைக் கடைப்பிடித்து வருகின்றது. யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களின் மீள்கட்டமைப்பு பணிகளுக்குப் பொறுப்பாக இருந்து வழிநடத்துகின்ற ஜனாதிபதி செயலணிக்குழு என்ற அமைப்பின் முன் அனுமதியின்றி எந்தவொரு தொண்டர் நிறுவனமும் திட்டங்களைச் செயற்படுத்த முடியாது. தொண்டு நிறுவனங்கள் தாங்கள் மேற்கொள்ள விரும்புகின்ற செயற்திட்டங்கள் பற்றிய விபரங்கள் இந்தச் செயலணி குழுவின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, அதன் அங்கீகாரம் பெற்ற பின்பே, செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற பிரதேசத்தினுள் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் செல்ல முடியும்.
இத்தகைய இறுக்கமான நடைமுறை இருக்கும் நிலையில் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு எதிரான அல்லது அரசுக்கு சேறு பூசுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதென்பது இலகுவான காரியமல்ல. அவ்வாறு அந்த நிறுவனங்கள் ஈடுபட்டால் அவற்றை இனங்கண்டு உடனடியாகவே அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரங்களும் அரசாங்கத்தின் கைகளில் இருக்கின்றன. இத்தகைய ஒரு நிலைமையில்தான் செய்தி யாளர்களுக்கான பயிற்சி நெறிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த ஆர்ப்பாட்டங்கள் தமிழ் ஊடகவிய லாளர்கள் கலந்து கொண்டிருந்த பயிற்சி நெறிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
ஒரு வகையில் இது தமிழ் ஊடகவியலாளர்களை குறிவைத்து, அவர்கள் தமது தொழிற்திறமைகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்ற வக்கிரமான நோக்கத்தைக் கொண்டு செயற்படுத்தப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றது. உரிமைகளைக்கோருவதற்கும்,அநியாயங் களைத் தட்டிக் கேட்பதற்கும் நடத்தப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் இனவாத அரசியல் நோக்கத்தைக் கொண்டதாகவும், ,நல்லிணக் கத்திற்கு விரோதமான எண்ணங் களைப் பிரதிபலிப்பதாகவும் அமைந்திருப்பது கவலைக்குரியது. அத்துடன் அது ஜனநாயக உரிமைகளைப்பறிப்பதற்குப் பயன்படுத்தப் பட்டிருப்பது இன்னும் மோசமானதாகும். ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும்.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக இது வர்ணிக் கப்படுகின்றது. அத்தகைய ஊடகத்துறை சார்ந்தவர்கள் தமது தொழிற் தகைமையை மேம்படுத்திக் கொள்வதற்காக நடத்தப்பட்ட பயிற்சி நெறிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உண்மையிலேயே ஜனநாயகத்திற்கு எதிரானமோசமான நடவடிக்கையாகவே நோக்க வேண்டியுள்ளது.இத்தகைய நடவடிக்கைகள் அரசாங்கம் கூறுகின்ற நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் உதவமாட்டாது. இத்தகைய போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அரசாங்கம் உடனடியாக முன்வர வேண்டும். இல்லையேல் இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் பாதிக்கப்படுகின்ற சிறுபான்மையினத்தவர்கள், அரசாங்கத்தின் மீதுநம்பிக்கை இழப்பதற்கும், சொந்த நாட்டிலேயே தாங்கள் ஓரங்கட்டப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுவதாக உணர்வதற்குமே வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
செல்வரட்னம் சிறிதரன்