இந்தியாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம்
ஏழைகளின் மேம்பாட்டில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டுள்ளதாக குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இந்தியாவில் வறுமையை முடிவுக்கு கொண்டு வருவதே புதிய அரசாங்கத்தின் மிக பெரிய சவால் என்று அவர் தெரிவித்தார். நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர், தமது அரசில் லஞ்சத்திற்கு சிறிதளவு கூட இடம் இருக்காது என்றும் இந்தியா விடுதலை ஆகி 75ஆண்டுகள் நிறைவடையும் சமயத்தில் நாட்டில் ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சார வசதியும், கழிவறை வசதியும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்வதே புதிய அரசின் முக்கிய இலக்குகளில் ஒன்று எனவும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உறுதி அளித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து 5 சதவிகிதத்துக்கும் குறைவாக இருப்பதாகவும், நாடு மிகவும் சிக்கலான காலகட்டத்தை கடந்து கொண்டிருப்பதை இது குறிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் வறுமையைக் குறைப்பதை இலக்காக கொண்டு மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு செயல்படும் என்று தெரிவித்த அவர் வேளாண்மைத் துறையில் முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். விலைவாசிகளை கட்டுக்குள் கொண்டு வருவது, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, முதலீடுகளை ஊக்குவிப்பது போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய குடியரசு தலைவர், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அரசு சகித்துக்கொள்ளாது என்றும் அதனை தடுக்க குற்றவியல் நீதிச்சட்டங்கள் வலுப்படுத்தப்படும் எனவும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதில் புதிய அரசு செயல்படும் எனவும் தெரிவித்தார்.