தற்போது ஐந்து தலிபான் பயங்கரவாத தலைவர்களை விடுதலை செய்தமையானது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2001ம் ஆண்டு அல்- கொய்தா தீவிரவாத அமைப்பினர் அமெரிக்கா மீது, தாக்குதல் நடத்தியதை அடுத்து, அந்த அமைப்பின் தலைவன் ஒசாமா பின் லேடன் பதுங்கியிருந்த ஆப்கனிஸ்தான் மீது அமெரிக்க படையெடுத்தது.
அங்கு ஆட்சியிலிருந்த தலிபான் அரசு அகற்றப்பட்டு, அதிபர் கர்சாய் தலைமையிலான அரசு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, ஏராளமான தலிபான் மற்றும் அல் - கொய்தா பயங்கரவாதிகளை பிடித்த அமெரிக்க இராணுவத்தினர், குவான்டனாமோ பே என்ற இடத்தில், அவர்களை அடைத்து வைத்தது.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆப்கனிஸ்தானில் பாதுகாப்பு பணியில் இருந்த அமெரிக்க இராணுவ வீரரான சார்ஜன்ட் போவே பெர்க்தஹல், தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். அவரை மீட்பதற்காக, அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில், பலர் கொல்லப்பட்டனர். ஆனால், இராணுவ வீரரை மீட்க முடியவில்லை.
இதனையடுத்து, அமெரிக்கா, முஸ்லிம் நாடான கட்டாரின் உதவியை நாடியது. அந்நாட்டின் மன்னர், நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, தலிபான் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த அமெரிக்க இராணுவ வீரர் போவேவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். போவேயை விடுதலை செய்ய முன்வந்த தலிபான்கள், அதற்கு பதிலாக, குவான்டனாமோ பே சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் முக்கிய தலைவர்கள் ஐந்து பேரை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கைதி விடுதலை தொடர்பாக அமெரிக்க வீரரின் குடும்பத்தினருடன் ஒபாமா
தனது நாட்டின் இராணுவ வீரரை விடுவிப்பதற்காக அமெரிக்க இந்த பரிமாற்றத்திற்கு ஒப்புக் கொண்டது. அதன்படி கடந்த 31ம் திகதி தலிபான் பயங்கரவாதிகள் ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டு, கட்டார் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டனர். தலிபான் பயங்கரவாதிகளும் அமெரிக்க இராணுவ வீரரை கட்டாரிடம் ஒப்படைத்தனர்.