பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலால்
புனித யாத்திரைக்கு சென்று திரும்பிய 25 பக்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சன்னி பிரிவை சேர்ந்த ஜெய்ஷ்-அல்-இஸ்லாம் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள், ஷியா பிரிவு இஸ்லாமியர்களை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் சிலர், கடந்த சில நாட்களுக்கு முன், 10 பேருந்துகளில் ஈரானுக்கு புனித யாத்திரை சென்றிருந்தனர்.யாத்திரையை முடித்து கொண்ட இவர்கள் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான்-ஈரான் எல்லைப்பகுதியான டாப்டான்(Taftan) பகுதிக்கு வந்து ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர். அப்போது அங்கே பயங்கர ஆயுதங்களுடன் திடீரென வந்த தீவிரவாதிகள், அந்த பக்தர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும் பக்தர்கள் வந்த பேருந்துகளுக்கு தீ வைத்ததுடன், தற்கொலைப்படை தாக்குதலும் நடத்தியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 25 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.இதில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து அப்பகுதியிலுள்ள மக்கள் படுகாயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.