தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து யேர்மனியில்
வாழும் தமிழ்ச்சிறார்களுக்கு கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழாலயங்கள் ஊடாகத் தமிழ் மொழியைக் கற்பித்துவரும் யேர்மனி தமிழ்க் கல்விக் கழகம் வழமைபோன்று இவ்வாண்டும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை அனைத்துலக மட்டத்தில் நடாத்தும் பொதுத்தேர்வில் பங்குபற்றியுள்ளது.
யேர்மனி முழுவதிலும் பரந்து விரிந்துள்ள 100 க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் பயிலும் 6000 க்கு மேற்பட்ட மாணவர்களில் 5329 மாணவர்கள் மேற்படி அனைத்துலகப் பொதுத் தேர்வில் இன்று ஆர்வத்துடன் தேர்வெழுதியுள்ளதாகக் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு.செ.லோகன் அவர்கள் அறியத்தந்துள்ளார். நாடுமுழுவதிலும் 67 விசேட தேர்வு நிலையங்கள் ஒழுங்கு செய்யபட்டதுடன் தேர்வை மேற்பார்வை செய்வதற்கென 450 க்கு மேற்பட்ட ஆசிரியர்களும் தேர்வு மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றினர்கள்.
தேர்வு திட்டமிட்டபடி முற்பகல் ஆரம்பமாகி மூன்று மணித்தியாலங்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விடைத்தாள்கள் அனைத்தையும் இன்றே நடுவச் செயலகத்தினூடாக ஒருங்கிணைக்கப்பட்டு தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. எதிர்வரும் வாரங்களில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் விடைத்தாள்கள் தரம் கணிக்கப்பட்டு மாணவர்களுக்கான சான்றிதழ்கள் யூன் மாத இறுதியில் வழங்கப்படவுள்ளது.
கோடை விடுமுறைக்கு முன்னர் மாணவர்கள் தமது சான்றிதழைப் பெறுவதனால் அவர்கள் பயிலும் யேர்மனியப் பாடசாலைகளின் சான்றிதழில் தமிழ் மொழியில் தாம் பெறும் புள்ளி நிலையையும் இணைப்பதற்கான வாய்ப்புக்கள் பல மாநிலங்களில் உள்ளதால் அவ் அரிய சந்தர்ப்பத்தை மாணவர்கள் பயன்படுத்தலாம். அத்துடன் நாடு தழுவிய மட்டத்தில் வகுப்புரீதியாக முதல் மூன்று நிலையில் அதிக புள்ளிகளைப்பெறும் மாணவர்களை அடுத்த ஆண்டு ஏப்பிரல் மாதம் நடைபெறவுள்ள தமிழ்க் கல்விக் கழகத்தின் வெள்ளி விழாவில் சிறப்பாக மதிப்பளிக்கப்படவுள்ளனர்.