ஐந்தாண்டுகளின் பின்னால் - பிரபாகரன் பற்றிய நினைவுகள் - 02 - TK Copy ஐந்தாண்டுகளின் பின்னால் - பிரபாகரன் பற்றிய நினைவுகள் - 02 - TK Copy

  • Latest News

    ஐந்தாண்டுகளின் பின்னால் - பிரபாகரன் பற்றிய நினைவுகள் - 02


    மாறிவந்த காலங்களையும், மாற்று வழிகள் தேடச் சென்ற
    ஏனைய தமிழ் தலைவர்களையும் கடந்து - ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார் பிரபாகரன்.

    சிறீலங்காவில் தமிழர்களுக்கான மிதவாத அரசியல் இயங்குவெளி ஒன்று இல்லை; அது எப்போதுமே இருக்காது என்பதுவே அவரது அடிப்படைக் கோட்பாடுகளுள் ஒன்றாக இருந்தது. 



    அவரது நிலைப்பாட்டின்படி -- எந்தத் தமிழராவது சிறீலங்காவில் மிதவாத அரசியல் செய்வாராயின், அவர் தமிழினத்துக்கு முழுமையான விசுவாசத்துடன் நடக்க மாட்டார்; நடக்கவும் முடியாது; நடப்பதற்குச் சிங்கள ஒற்றையினவாத இயந்திரம் விடாது. அதையும் மீறி அவர் அரசியல் செய்ய வேண்டுமெனின், தமிழ் தேசிய இனத்தின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். 


    இப்போது - பிரபாகரன் இறந்தும், அவர் நடத்திய அந்த ஆயுதப் போராட்டம் முடிந்தும் ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. 


    என்னுடைய நோக்கம் பிரபாகரனைப் பெரும் தூரநோக்குப் பார்வையுடைய அரசியற் தீர்க்கதரிசியாக நிரூபிப்பது அல்ல; மாறாக - வாழும் காலத்தில் தமிழ் மக்களிடத்தில் தனது கொள்கைகளை நியாயப்படுத்தப் பிரபாகரனால் முடிந்ததை விடவும் செயற்திறனோடு - அவர் இறந்துபோனதை அடுத்துவந்த ஐந்து ஆண்டுகளில் அவரை நியாயப்படுத்தும் காரியங்களை அரசாங்கமே செய்கின்றது என்று என் எண்ணத்தில் தோன்றுவதைப் பகிர்வதாகும். 


    அவரது இறப்புக்குப் பின்னர் - அவரது கருத்துக்களைப் பொய்யாக்கவும், தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்கவும் தனக்குக் கிடைத்த வாய்ப்புக்களைச் சிறீலங்கா அரசாங்கம் வேண்டுமென்றே உதாசீனம் செய்துவிட்டது. 



    போர் நிகழ்ந்த காலத்தில் - தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை விடுதலைப் புலிகளின் முகவர்கள் என சிறிலங்கா அரசாங்கம் கூறியது - அதில் தவறில்லை; அதற்குக் காரணங்கள் இருந்தன. சர்வதேச இராஜதந்திரிகள் கூட, அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தூய்மையான ஜனநாயக வழிமுறை ஊடாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அமைப்பாகக் கருதியதில்லை; அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இடையூறற்ற ஒரு ஜனநாயக இயங்குவெளி சிறீலங்காவில் கொடுக்கப்படவில்லை என்பது ஒரு பொருட்டாகவும் இருக்கவில்லை. ஏனென்றால், அது, எல்லோருக்கும் தெரியும்படியாகவே, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குரலாகத்தான் இருந்தது. 
    ஆனால், 2010ஆம் ஆண்டுக்குப் பின்னான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேறு. அதற்குப் புலிச் சாயங்கள் பூச முனையாமல், ஒரு முழுமையான ஜனநாயக அங்கீகாரத்தைச் சிறீலங்கா அரசாங்கம் கொடுத்திருக்க வேண்டும். அது அந்த அரசாங்கத்திற்கும் பல வழிகளில் சாதகமாக அமைந்திருக்கும். ஆனால், சிங்களப் பெரும்பான்மைவாத மனோபாவம் அதற்கு இடமளிக்கவில்லை - அவ்வாறு இடமளிக்காது என்று பிரபாகரன் கூறிவந்ததையே சரியானது என்று அரசாங்கமே ஆக்கிவிட்டது. 

    தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்தோடு உருவாக்கப்பட்டு, புலிகள் இயக்கத்தைத் தமிழ் பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு வாக்குக் கேட்ட பழைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது இல்லை. 2010-இற்குப் பிறகு, அந்தக் கூட்டமைப்பைச் சம்பந்தன் படிப்படியாகத் “தூய்மைப்படுத்திவிட்டார்.” 


    விடுதலைப் புலிகளால் உள்ளுக்குக் கொண்டுவரப்பட்டவர்களை வெளியில் போட்டார்; அவர்களையும் சேர்த்துச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்திய கஜேந்திரகுமாரையும் வெளியில் போக வைத்தார்; போராட்ட காலம் முழுவதும் அரசியலுக்கு வெளியில் இருந்த சுமந்திரனை உள்ளே கொண்டு வந்தார்; சரவணபவன் போன்ற வணிகச் சிகரங்கள் அரசியலில் ஒளிரவும் இடம்கொடுத்தார்; புலிகளுக்கும் கூட்டமைப்புக்கும் மறுபக்கத்திலிருந்த சித்தார்த்தன், ஆனந்தசங்கரியையும் இணைத்தெடுத்தார்; தேவானந்தாவுக்கும் அழைப்பை விடுத்தார்; ஆகக் கடைசியாக - அஹிம்சைக் கோபுரத்தின் அழகிய மகுடமாக - ஆயுதச் சாயம் படியாத ஆன்மீக முகத்தோடு விக்கினேஸ்வரனையும் சேர்த்துக்கொண்டார். 


    சிறீதரன் நாடாளுமன்றத்திலேயே பிரபாகரன் பற்றிய பட்டோலைகளை வாசித்தாலும், தேசியப் பிரச்சனையே குடும்பப் பிரச்சனை ஆகிப் போனதால், துணிந்து இறங்கி அனந்தி தெருவில் நின்றாலும் கூட - இன்றைய கூட்டமைப்பு, விடுதலைப் புலிகள் உருவாக்கியது அல்ல; பிரபாகரன் உருவாக்கியிருக்கக்கூடியதும் அல்ல. அது விடுதலைப் புலிகளின் பொம்மையும் அல்ல. பழைய முகங்கள் பல இதற்குள்ளும் இருந்தாலும், இப்போது இருக்கின்ற கூட்டமைப்பின் சிந்தனை புதியது; சொல்லும், செயலும் புதியது. 


    அந்தச் சிந்தனையும் சொல்லும் செயலும் - இந்த நொடிப்பொழுது வரை - சம்பந்தனும் சுமந்திரனும் தான். கடும்போக்கு நிலைப்பாட்டு உறுப்பினர்களையே பெரும்பான்மையாகக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மைய உயிரியக்கமாக இருக்கின்ற அதிதீவிர மிதவாதிகள் அவர்கள். 


    ‘தமிழீழம்’ கேட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையே ஏற்றுக்கொள்ளாத தமிழரசுக் கட்சியின் தளபதி சம்பந்தன். "அது ஒரு அவசரப்பட்ட முடிவு" என்றே தான் கருதுவதாகத் தந்தை செல்வாநாயகத்திடம் அப்போதே கூறிய தனயன்; "பிரிக்கப்படாத – ஒன்றுபட்ட - சிறீலங்கா" என்ற ஒற்றை வரம்புக்குள், சிங்களவர்களைப் போல தமிழர்களும் சமதையாக வாழும் ஒரு சூழலை ஏற்படுத்த முடியும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படையாகவே கொண்டவர்; "இந்தியாவில் இருப்பதைப் போன்றதான ஓர் ஆட்சிக் கட்டமைப்பையே" தாம் எதிர்பார்ப்பதாகக் கூறுபவர்; தமிழ் தேசிய இனப் பிரச்சனை நோக்கிய பிரபாகரனின் தவறான அரசியல் அணுகுமுறையே ஒட்டுமொத்தமான தமிழினத்தின் இன்றைய கையறு நிலைக்குக் காரணம் என்ற கருத்தை முன்வைப்பவர்; விடுதலைப் புலிகளின் கொலைப் பட்டியலில் ராஜபக்ச குடும்பத்தினர் எவருக்கும் முன்னரே இடம்பிடித்திருந்தவர்; மென்முறை அரசியலை விடாப்பிடியாகப் பின்பற்றி நிற்பவர். 


    வன்முறை அரசியற் பாதையைப் பிகிரங்கமாகவும் – அடியோடும் - எப்போதும் நிராகரிக்கின்றவர் சுமந்திரன். தனது அந்த நிலைப்பாடு குறித்துப் பெருமிதம் கொள்பவர்; போர் நடந்த முழுக் காலத்திலும் வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழ்ந்தவர்; ஆயுதப் போராட்டம் முடிந்த பின்னரே அரசியலுக்குள்ளும் வந்தவர்; விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொள்ளாதவர்; சர்வதேச சமூகத்தை முன்னிலைப்படுத்தித் தான் செய்கின்ற அரசியல் ஆட்டத்தில், புலிகளை முதன்மைப்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்ற கருத்தைச் சொல்லுபவர். 


    ஏறக்குறையப் பார்த்தால் - சிறீலங்காவின் நில ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை போன்ற விடயங்களில், சிறீலங்கா அரசாங்கத்தின் அடிப்படை நிலைப்பாட்டை ஒத்ததாகவே தமது நிலைப்பாட்டையும் கொண்ட இந்த இருவரின் பிடியிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்றது. 


    அப்படியிருக்கும் போது -- இந்த தமிழ் தலைமையின் கைகளைப் பற்றிப்பிடித்து - பரஸ்பர விட்டுக்கொடுப்புக்களுக்கு இணங்கி - அரசியல் அரங்கிலிருந்து புலிகள் அகற்றப்பட்டுவிட்ட சூழலில் சிங்களவர்களின் சிந்தனைகளையும் செதுக்கி - சிங்களக் கூட்டுக் கட்சிகளையும் பதப்படுத்தி - எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஓர் அரசியற் தீர்வைத் தமிழர்களுக்கு வழங்குவதில் அரசாங்கம் விருப்பமின்றி இருப்பதன் காரணம் என்ன…? 


    தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தமிழ் அரசியற் கட்சியுடன் நேரடியான அரசியலிணக்கப் பேச்சுக்களுக்கு_ அரசாங்கத் தரப்பில் இருக்கின்ற விருப்பமின்மை - மிதவாதத் தமிழ் அரசியலுக்கு சிறீலங்கா என்ற ஒற்றை நாட்டில் இடமே இருக்காது என்ற பிரபாகரனின் கோட்பாட்டைத் தானே நியாயப்படுத்தும்…? 


    அத்தோடு - "ஒன்றுபட்ட இலங்கை" என்ற கொள்கையோடு, பிரபாகரனின் அரசியல் அணுகுமுறைகளை மறுதலித்து வருகின்ற அதே தமிழ் மிதவாதத் தலைவர்களின் அரசியலை அர்த்தமிழக்கத் தானே செய்யும்…? 


    அத்தோடு - அதே "ஒன்றுபட்ட -பிரிக்கப்படாத- இலங்கை" என்ற கோட்பாட்டைப் பேசும் அதே தீவிர மிதவாதிகளது நிலைப்பாடுகளை - அவர்களது கட்சிக்காரர்களிடத்திலும் அவர்களுக்கு வாகளித்த மக்களிடத்திலும் செல்லுபடியற்றதாகவும் சிரிப்புக்கிடமானதாகவும் தானே ஆக்கும்…? 



    அத்தோடு - தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே, கடும்போக்குத் தேசியவாதம் பேசி, விடுதலைப் புலிகளின் எச்சசொச்சங்களாகத் தம்மைக் காட்டிக்கொண்டு அரசியல் செய்வோரைத் தானே வலுப்படுத்தும்…? 


    இவையெல்லாம் - ஒட்டுமொத்தமான இந்த நாட்டின் சுபீட்சத்தைத்தானே பாதிக்கும்…? ஆனால், அந்த அக்கறை எதுவும் இந்த அரசாங்கத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை. 


    தமிழ் தேசியக் கூட்டமைப்பு நீட்டிய சமரசக் கரங்களைப் பற்றிப்பிடித்து, 2011 வரை நீண்ட அதனுடனான பேச்சுக்களை அரசாங்கம் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால், இந்த நாட்டில் "இனப்பிரச்சனை" என்று ஒரு விடயமே இல்லை என வாதிட்டு, பேச்சுக்களுக்கான தேவையே இல்லை என்று ஆக்குவதன் மூலம், தமிழர்களின் ஜனநாயக அரசியல் இயங்கு வெளியை அது மூடிவருகின்றது. 


    அதையும் மீறி - தமிழர்களுக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும்படியான நிர்ப்பந்தங்கள் வெளியிலிருந்து வருகின்ற போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வரும்படி வற்புறுத்துகின்றது. அவ்வாறு வரவைப்பதன் மூலம் - அந்தத் தெரிவுக் குழுவில் - சிங்களப் பெரும்பான்மைவாதத்தை ஒருமுகமாக்கி, தமிழர் கோரிக்கைகளச் சிறுபான்மையாக்கி, பெரும்பான்மைக் கருத்தே சரியென்றும் ஆக்கி, இந்தத் தீவில் இனப் பிரச்சனையே இல்லையென்றாக்கி, அதனால், அதிகாரப் பகிர்வு எதுவும் தேவையற்றது எனச் சிங்களப் பெரும்பான்மையோடு நிரூபித்துவிட முனைகின்றது. 


    இவ்வாறாக - எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும், எந்த வடிவத்திலும் சிங்கள ஆளும் வர்க்கம் இதையே செய்வதனால் தானே சேர்ந்து வாழ்வது சாத்தியமற்றது என்று பிரபாகரன் கொள்கைபூண்டார் என சாதாரண தமிழ் மனம் எண்ணாதா…? 


    ஜெனீவா அமர்வுகள், அமெரிக்கப் பிரேரணை, சர்வதேச விசாரணை, மன்மோகனுக்கு வாக்குறுதிகள், மோடியுடன் சந்திப்புகள் என எதுவந்தாலும் - சிங்களப் பெரும்பான்மைவாத ஒற்றையின மேலாதிக்க மனோபாவத்தைத் தீனி போட்டு வளர்த்துத்தான் சிறீலங்கா அரசாங்கம் அரசியல் செய்யப்போகின்றதெனில் - இந்த ஆரவாரங்களால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. 


    அத்தோடு - இந்த சர்வதேச நகர்வுகளை நம்பி எந்தப் பயனும் இல்லை என்ற பிரபாகரனின் வாதமே, மீளவும், சரியென்று ஆகிவிடும். 


    -திருச்சிற்றம்பலம் பரந்தாமன்-




    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஐந்தாண்டுகளின் பின்னால் - பிரபாகரன் பற்றிய நினைவுகள் - 02 Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top