நடிகர் கொலையில் தேடப்பட்டு வரும் நடிகை ஸ்ருதி
சினிமா படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே பரப்பாடியை சேர்ந்தவர் ரெனால்ட் பீட்டர் பிரின்சோ (35). துணை நடிகரான இவர், பெங்களூரைச் சேர்ந்த நடிகை ஸ்ருதி சந்திரலேகாவுடன் சென்னை மதுரவாயல் பகுதியில் குடும்பம் நடத்தினார்.நடிகை ஸ்ருதி, பீட்டரின் பழைய நண்பர்களுடன் சேர்ந்து, கடந்த ஜனவரி 16ம் திகதி மதுரவாயலில் வைத்து அவரை கொலை செய்தார். பின்னர் பீட்டரின் உடலை பாளையங்கோட்டை ஆசீர்வாத நகரில் புதைத்தனர். இதில், கூலிப்படையாக செயல்பட்ட பாளை செட்டிகுளத்தை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ், பீட்டரின் நண்பர்களான சாந்திநகரைச் சேர்ந்த காந்திமதிநாதன் என்ற விஜய், ரபீக் உஸ்மான், ஜான்பிரின்சன் ஆகியோரை கடந்த மாதம் பாளையங்கோட்டை பொலிசார் கைது செய்தனர்.
தற்போது இந்த வழக்கு சென்னை மதுரவாயல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள நடிகை ஸ்ருதி, பீட்டரின் நண்பர்கள் உமாசந்திரன், நிர்மல் ஆகியோரை பொலிசார் தேடி வருகின்றனர். அவர்கள் பெங்களூருக்கு தப்பிச் சென்று விட்டதாக கருதி, தனிப்படை பொலிசார் அங்கு விரைந்தனர்.
இதற்கிடையில் நடிகை ஸ்ருதி விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘சாம்பவி‘ படத்தில் தீவிரமாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே நடந்து வருகிறது. அவர், விரைவில் கைது செய்யப்படுவார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.