பக்கங்கள்

பதுளையில் மண் சரிவு

இலங்கை தலைநகர், கொழும்புவில் இருந்து 200 கி.மீட்டருக்கு கிழக்கே பதுளை மாவட்டம் உள்ளது. மலையகப் பகுதியான இங்கு ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன.

இந்த தோட்டங்களில் இந்திய கம்பெனி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கால்முழுல்லா நகரம் அருகேயுள்ள மீரியா பெட்டா கிராமத்தில் மலை அடிவாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 150 வீடுகள் அமைத்து தங்கியிருந்தனர்.

நேற்று முன்தினம் முதல் இங்கு தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் திடீரென அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் அங்கு இருந்த 120 வீடுகள் மண்ணில் புதைந்தன. சேறும் சகதியும் அவற்றை மூடிக் கொண்டன.


எனவே, வீட்டில் இருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் உயிருடன் மண்ணில் புதைந்தனர். ஒரு கிராமமே மண்ணில் புதைந்ததை அறிந்தும் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இருந்தும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 150 பேர் பலியாகி விட்டனர். இதற்கிடையே பல்வேறு பகுதிகளில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர்.
இப்பணியில் 500 ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் வரவழைக்கப்பட்டனர். மீட்பு பணியை துரிதப்படுத்த அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே மீட்பு பணியில் உதவ தயார் என இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய தூதர் வாயிலாக மத்திய வெளியுறவு துறை செயலாளர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இளம்பெண் வல்லுறவு. யாழ்ப்பணத்தில் கொடூரம்


கடந்த 25.10.2014 அன்று யாழ் போதனா வைத்தியசாலையில்
18வயது பெண் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டது. இதனடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்ட தகவல்

சேகரிப்புகளில் இதுவரை பின்வரும் விவரங்கள் கிடைத்துள்ளன. 

வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பெண் (18 வயது), முள்ளி, அரியாலை, யாழ்ப்பாணம். தாய் தந்தை மற்றும் ஐந்து சகோதரர்கள் (நான்கு பெண்கள், ஒரு ஆண்) கொண்ட குடும்பம். இவர் மூன்றாவது மகள்.

வல்லுறவுக்குட்படுத்திய ஆண் (32வயது) அதே இடத்தைச் சேர்ந்தவன். பாதிக்கப்பட்ட குடும்பத்தவருக்கு தூரத்து உறவினன், 

அயலவன் மற்றும்; வன்முறைக்குட்படுத்தப்பட்ட பெண்ணின் அண்ணனின் நண்பன்; ஏற்கனவே திருமணமானவன். டிராக்றரில் மண் ஏத்தும் தொழில் செய்பவன். 

து ஒரு முற்திட்டமிடப்பட்ட பாலியல் பலாத்காரம் மற்றும் பாரதூரமான உடலியல் ரீதியான வன்முறை.

தீபாவளிக்கு 2 தினங்களுக்கு முன் (திகதி) வன்முறையாளனுக்கும் பெண்ணினது குடும்பத்தவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

பெண்ணின் சகோதரனை வன்முறையாளன் அடித்த போது இந்தப் பெண் முறைத்துள்ளார். “உனக்கு செய்கிறேன் பார்”; என்று 

வன்முறையாளன் மிரட்டி அடித்துள்ளான். இது பற்றி பெண்ணின் தாயாரால் யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு பின்னர் மீளப்பெறப்பட்டுள்ளது. ஆயினும் வன்முறையாளன் பற்றிய அச்சம் காரணமாகத் தாயார் பெண்ணை அதே ஊரிலுள்ள மாமன் வீட்டில் ஒளித்து வைத்துள்ளார். 

22..10.2014 அன்று பெண் அரியாலை பூம்புகாரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். அக்காவின் வீட்டில் இவரது அக்காவும் இரண்டு சிறுபிள்ளைகளுமே இருந்துள்ளனர். 

வன்முறையாளன் தனது நண்பனுடன் குறித்த அக்காவின் வீட்டிற்கு இரவு 8.30 – 9 00 மணியளவில் வந்துள்ளான். அக்காவின் பிள்ளைகளினை கொல்லப் போவதாக மிரட்டி 18வயதுப் பெண்ணை தன்னுடன் வரும்படி வற்புறுத்தியுள்ளான். இதன் போது 

அக்காவும் இப்பெண்ணும் சத்தமிட்டு அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். 

சத்தம் கேட்டு அயலில் உள்ளவர்கள் வந்தும் 18வயதுப் பெண் தன்னைக் காப்பாற்றும்படி அவர்களது காலில் விழுந்து கெஞ்சியும்; மேற்படி வன்முறையாளன் தொடர்பாக உள்ள அச்சம் காரணமாக யாரும் உதவி செய்யவில்லை. 

வன்முறையாளன் பெண்ணை மோசமாக அடித்து வற்புறுத்தி பலவந்தமாக நண்பனின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளான். 

இப்பெண் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது இருதடவை தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனாலும் வன்முறையாளன் அவரை மீண்டும் இழுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றியுள்ளான். அதன்போது நண்பர் கீழேவிழ அவரை விட்டுவிட்டு பெண்ணை 

மட்டும் கொண்டு சென்றுள்ளான். முதலாவதாக அரியாலையில் மண்வெட்டி எடுக்கப்படும் பற்றைக்காடாக உள்ள ஒரு பகுதிக்கும் பின்னர் அருகில் உள்ள வேறு இரு இடங்களிற்கும் இழுத்துச் சென்று பெண்ணை பலதடவை கொடூரமாக வன்புணர்வு செய்துள்ளார். 

மேலும், இரும்புக்கம்பி கயிறு போன்றவற்றால் அடிக்கப்பட்டு உடல்ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

பெண்ணைக் கடத்திச் சென்ற நேரத்திலிருந்து அவரது குடும்பத்தினர் அவரைத் தேடியுள்ளனர். அவரது அக்கா உடனடியாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

இப்பெண்ணைக் காணவில்லை என பெண்ணின் தாயாரினாலும், சகோதரியினாலும் போடப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகளின் அடிப்படையில் 23.10.2014 காலை 10.00 மணியளவில் பொலிஸ் முள்ளி-அரியாலைக்கு சென்று 

பாதிக்குப்புக்குள்ளாக்கப்பட்ட பெண்ணினை வன்முறையாளனது வீட்டில் கண்டுபிடித்துள்ளனர். பின் இப்பெண் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு வாக்குமூலம் பதியப்பட்டுள்ளது. அதன்பின் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

27.10.2014 அன்று பொலிஸ் குறித்த வன்முறையாளனைக் கைதுசெய்ய முயற்சித்த வேளை பொலிஸும் ஊர் மக்களும் அவனை விரட்டிச் சென்ற போது அவன் ஓடி ஒளித்ததாகவும் பின்னர் ஒரு சட்டத்தரணியின் உதவியுடன் பொலிஸில் சரணடைந்துள்ளான். 

குறித்த வன்முறையாளன் தொடர்பாகவும், வன்முறை தொடர்பாகவும் ஊர்pலுள்ளவர்களுடன் சில பெண்களுடன் கலந்துரையாடிய போது இவன் வேறு பல தொடர் வன்முறைகளில் ஈடுபட்டிருப்பதும் வெளிப்படுத்தப்பட்டன.

மேலும் இவனுக்கு அனுசரணையாகவோ இவன் போன்றோ ஒரு கும்பல் இருப்பதும் இவனது குற்றங்களுக்கு அவர்கள உடந்தையாக
இருப்பது போன்று அவர்களும் மோசமான குற்றங்களைப் புரிவதாகவும் கூறப்படுகின்றது.

லைக்கா மோபைல் உரிமையாளர் கொழும்பு விமான நிலையத்தில் தடுத்துவைப்பு

லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் லைக்கா மோபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் "கத்தி" படத்தின் தயாரிப்பாளருமான சுபாஷ்கரன் அல்லிராஜ ஆவர்கள் கொழும்பு கட்டநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கத்தி படம் வெற்றிபெற்றதனை அடுத்து, லைக்கா படத்தயாரிப்பு குழுவினர் இந்தியா சென்று பின்னர், அதனைக் கொண்டாட மாலைதீவுகள் சென்று தங்கியுள்ளார்கள். பின்னர் மாலை தீவில் இருந்து இன்று காலை(29) லண்டன் திரும்ப திட்டமிட்டு இருந்தார்கள். இன் நிலையில் அவர்களது விமானம் கொழும்பு கட்டநாயக்கா விமான நிலையம் சென்று அங்கிருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்துள்ளது.


இன் நிலையில் சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்களின் பாஸ்போட் படத்தை, கையில் எடுத்துக்கொண்டு விமானத்தினுள் வந்த 10 பேர் அடங்கிய குழு ஒன்று, பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமர்ந்திருந்த சுபாஷ்கரனிடம் விசாரணை நடத்தவேண்டும் எனவும், அவரை விமானத்தை விட்டு கிழே இறங்கி வருமாறும் கூறி அழைத்துச் சென்றுள்ளார்கள். இச்சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது என சக பயணிகளில் ஒருவர் கொழும்பில் உள்ள ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். தம்மை புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளம் காட்டிய நபர்களே சுபாஷ்கரனை விமானத்தில் இருந்து இறங்கி உள்ளே கொண்டுசென்றுள்ளார்கள் என்றும் அப்பயணி மேலும் தெரிவித்துள்ளார்.

30 க்கும் மேற்பட்ட கத்தி திரைப்பட குழுவினர் அந்த விமானத்தில் இருந்துள்ளார்கள். அவர்கள் எவ்வளவோ தடுக்க முற்பட்டும் அவர்களால் எதனையும் செய்யமுடியவில்லை என்று விமானத்தில் உள்ள பயணி மேலும் தெரிவித்துள்ளார். மாலைதீவில் இருந்து கொழும்பு சென்ற விமானத்தில் லண்டன் பயணிக்க பலர் இருந்ததாக கூறப்படுகிறது. இது ஒரு மாற்று விமானசேவையாகும்(TRANSIT FLIGHT). பயணிகள் கொழும்பு கட்டநாயக்க விமான நிலையத்தினுள் செல்லவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் விமானத்தினுள் தங்கியிருக்க, கொழும்பில் இருந்து லண்டன் செல்லும் பயணிகளை அது ஏற்றிக்கொண்டு, லண்டனுக்கு புறப்படும் விமானம் ஆகும். இன் நிலையில் சுபாஷ்கரன் கைதுசெய்யபப்ட்டது ஏன் என்று தெரியாத நிலை காணப்படுகிறது. இச்செய்தியை கொழும்பில் உள்ள விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு உறுதிசெய்யமுடியாத நிலையும் காணப்படுகிறது.


இருப்பினும் இன்றைய தினம் கொழும்பில் இருந்து லண்டன் செல்லவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர் வேஸ் விமானம் UL 503 சுமார் 1 மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டுள்ளது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது

அமெரிக்காவால் அனுப்பப்பட்ட ராக்கெட் வெடித்து சிதறியது

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண் வெளியில் ஆய்வகம் அமைக்கின்றன. அதற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில் விண்வெளி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் விண்கலம் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் ‘நாசா‘ சார்பில் அனுப்பப்பட்ட விண்கலன்கள் ஓய்வு பெற்று விட்டன.
எனவே கட்டுமான பொருட்கள் மற்றும் வீரர்களுக்கு தேவையான உணவு பொருட்களை ‘ஆர்பிடல் சயின்சஸ் கார்ப்பரேசன்’ மற்றும் ‘ஸ்பேஷ் எக்ஸ்’ என்ற தனியார் நிறுவனங்களின் வீண்கலனை ராக்கெட் மூலம் அனுப்பி வருகிறது.

இந்த நிலையில் ‘ஆர்பிடல் சயின்சஸ் கார்ப்பரேசன் நிறுவனத்தின் ஆன்டரெஸ் என்ற ராக்கெட் மூலம் சயிக்னஸ் என்ற விண்கலத்தை அனுப்ப நாசா ஏற்பாடு செய்தது.

அதில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் 6 வீரர்களுக்கு தேவையான 2,200 கிலோ எடையுள்ள உணவு பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. அந்த ராக்கெட் விர்ஜீனியா மாகாணத்தின் வால்லோப்ஸ் தீவில் உள்ள தளத்தில் இருந்து நேற்று முன்தினம் விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போது ராக்கெட்டுடன் பயணமாகும் விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டதால் விண்ணில் செலுத்தாமல் நிறுத்தப்பட்டது. எனவே கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு நேற்று மீண்டும் விண்ணில் செலுத்தப்பட்டது.
உடனே ராக்கெட் நெருப்பை கக்கியபடி விண்ணில் சீறிப்பாய்ந்தது. இதை விஞ்ஞானிகளும், அதிகாரிகளும் உன்னிப்பாக கண்காணித்தப்படி இருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக செலுத்தப்பட்ட 6–வது வினாடியில் ராக்கெட் வெடித்து சிதறியது.
அதனால் ராக்கெட் தீபிழம்பாக விண்ணில் இருந்து எரிந்து தரையில் விழுந்தது. அக்காட்சி சூரிய அஸ்தமனம் போன்று இருந்தது. இதைப்பார்த்த விஞ்ஞானிகள் உள்பட அனைவரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.
இந்த ராக்கெட் 14 அடுக்கு மாடிகளை கொண்டது. தற்போது இந்த ராக்கெட்டின் உடைந்து விழுந்த உதிரி பாகங்களை தேடும்பணி நடைபெற்று வருகிறது. அவற்றை கண்டுபிடித்து அதன்மூலம் ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் மீண்டும் அதை விரைவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவோம் என ‘ஆர்பிடல் சயின்சஸ் கார்ப்பரேசன்’ செயலக துணைத் தலைவர் பிராங்க் கல்பெர்ட்சன் தெரிவித்துள்ளார்.
இந்த ராக்கெட் சோவியத் ரஷியா சந்திரனுக்கு அனுப்பிய என்–1 என்ற ராக்கெட்டை மாடலாக வைத்து தயாரிக்கப்பட்டது.

சாட்சியம் அளிப்பவர்கள் கைது -ஐ.நா கண்டனம்

ஜெனீவா மனித உரிமைச் சபையின் சர்வதேச விசாரணைக்கு சாட்சியம் வழங்கும்
நபர்கள் கைது செய்யப்படுகின்றமை விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமை தொடர்பாக கொழும்பில் உள்ள
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகம் இலங்கை அரசாங்கத்திடம் கடும் கண்டம் தெரிவித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

 கிளிநொச்சி முழங்காவில் கிராஞ்சியை சேர்ந்த தமிழ் தேசிய உணர்வாளரான சின்னத்தம்பி கிருஸ்ணன் என்பவர் இராணுவ புலனாய்வாளர்களால் கடந்த சனிக்கிழமை அன்று மாலை கைது செய்யப்பட்டு குறித்த நபரிடம் புலனாய்வு துறையினரின் தேவையற்ற விசாரணைகள் மேற்கொண்டமை குறித்து வெளியுறவு அமைச்சர் பேரரிசிரியர் பீரிஸிடம் கடும் கண்டனம் வெளியிட்டதாக கூறப்படுகின்றது.

 சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்கள் மீது நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட மாட்டாது என அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் உறுதியளித்திருந்தது. அந்த உறுதி மொழிக்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்று ஐ.நா அதிகாரி ஒருவர் கூறியதாகவும் புலனாய்வு பொலிசாரின் நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டினார் என்றும் கொழும்புத் தகவல்கள் குறிப்பிட்டன. அதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட படிப்பினைகள் மீளிணக்க ஆணைக்குழுவிற்கு முன்பாக சாட்சியமளித்த சில குடும்ப பெண்களும் மற்றும் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றமை குறித்தும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது எனவும் ஐ.நா அதிகாரி வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸிடம் கூறியதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன

அரசாங்கமானது வடபகுதியை பிறிதொரு நாடாக பார்க்கிறதா : சுமந்திரன் கேள்வி


வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுடன் இலங்கை வரும் ஒருவர் வடக்கிற்கு செல்வதானால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் இல்லை. இவ்வாறு வடக்கு செல்லும் வெளிநாட்டு பிரஜைகள் மீது புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தால் வடபகுதி பிரிதொரு நாடாக பார்க்கப்படுகின்றதாவென  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சபையில் கேள்வி எழுப்பியது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டமானது நடைமுறைக்கு சாத்தியமாகா முன்மொழிவுகளுடனேயே அமைந்திருக்கிறது. நாட்டு மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மோசடியானதொரு வரவு செலவுத் திட்டமாககவும் இது உள்ளது. முன்மொழிவுகளின் ஊடாக அரசாங்கம் மக்களின் மனங்களை குளிரச் செய்வதற்கு முயற்சிக்கிறது. நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இவ்வரவு செலவுத் திட்டத்தை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாரில்லை. ஏனெனில் இது தேர்தலை மையமாக வைத்தே தயாரிக்கப்பட்டிருக்கின்றது. முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதில் மக்களுக்கு சந்தேகம் எழத் தொடங்கி விட்டது. 
அதனால் எல்லா சந்தர்ப்பத்திலுமே எல்லாரையும் ஏமாற்றி விடலாம் என்று எண்ணி விடக் கூடாது.
நடந்து முடிந்த மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் அரசாங்கத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. என்றும் இந்த வெற்றியானது அரசின் போக்கினை ஏற்றே நாட்டு மக்கள் அங்கீகாரம் வழங்கியிருக்கின்றனர் என்ற ரீதியில் ஜனாதிபதி கூறியுள்ளார். அப்படி எனில் கடந்த 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற வட மாகாண சபைத் தேர்தல் முடிவு பற்றி அவர் எதனை உணர்ந்திருக்கிறார்.
மூன்று மாகாண சபைகளிலும் வெற்றி கிடைத்திருப்பதாகவும் இதன் மூலம் 54 சதவீத வாக்குகள் அரசுக்கு கிடைத்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிடுகிறார். எனினும் வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைக்கு 78.9 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆளும் கட்சிக்கு 20 சதவீத வாக்குகளுக்கும் குறைவாகவே கிடைத்தன. இதன் ஊடாக வட மாகாண சபைத் தேர்த்லை அவர் எப்படிப் பார்க்கிறார்.
தமிழ் மக்களைப் பயங்கரவாதத்திடம் இருந்து மீட்பதற்காகவே யுத்தம் செய்ததாக கூறப்படுகிறது. எனினும் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வட மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ்க் கூட்டமைப்புக்கே வாக்களித்தனர். அத்துடன் இல்லாது ஆளும் கட்சிக்கு தமது நிலைப்பாட்டினையும் எடுத்துக் கூறியுள்ளனர். இப்படியான நிலையில் அரசின் போக்கினைக் கண்டே மக்கள் வாக்களித்து அரசை வெற்றி பெறச் செய்தனர் என்று எவ்வாறு கூறுவது.
யுத்தம் நிறைவுக்கு வந்ததில் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். இது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயமாகும். எனினும் மகிழ்ச்சியடைகின்ற மக்கள் வாழ்வதற்கு எதிர்பார்க்கும் கௌரவம் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்கள் மறுக்கப்பட்டுள்ளன. முக்கியத்துவம் மிக்க இத்தகைய பிரச்சினைக்கே இன்று தீர்வு அவசியமாகியுள்ளது.
இது இவ்வாறிருக்க மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் தாம் எத்தகைய நியாயத்தையும் காண்பதாக இல்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளார் . இருந்த போதிலும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தல் மற்றும் 13 க்கும் அப்பால் செல்வது குறித்தும் இந்திய பிரதமர் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் உட்பட சர்வதேச சமூகத்திடம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் தற்போது ஞானம் பிறத்ததைப் போன்று மாகாண சபைகளுக்கு காணி - பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் நியாயப்பூர்வ காரணங்களை கண்டறியவில்லை என ஜனாதிபதி கூறுகிறார்.
ஆதலால் ஜனாதிபதியுடன் உறுதி மொழிகளுக்கான மதிப்பு எந்தளவில் உள்ளது என்பதை உணர்வதற்கு மேற்கூறப்பட்டவை சிறந்த எடுத்தக் காட்டாகும். அந்த வகையில் அவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படுவது சந்தேகமே ஆகும். 
யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி சேவை ஆரம்பக் கட்டணம் வரவேற்கக் கூடியது. அதனை நாம் வரவேற்கின்றோம். இந்த சேவை ஆரம்பிக்கப்படுவதற்கு நிதியுதவி அளித்த இந்தியாவையும் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். எனினும் யாழ். தேவி யாழ்ப்பாணத்திற்கு வரத் தொடங்கியதன் பின்னரே வடக்கு செல்வோருக்கான புதிய கட்டுப்பாடுகளும் வந்துள்ளன.
வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் வடக்கிற்கு செல்ல வேண்டுமானால் இரு விசா அனுமதிகளைப் பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதாவது வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் இலங்கை வருவதற்கும் வடக்கிற்கு செல்வதற்கும் என்ற ரீதியிலேயே நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
ஒருவர் வடக்கு செல்ல வேண்டுமானால் பிரிதொரு நாட்டுக்கு செல்வதைப் போன்று நடத்தப்பட வேண்டுமா என்பது எமது கேள்விகளாகும்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் ஏனைய பகுதிகளுக்கு சுதந்திரமாக செல்ல முடிகின்ற போதிலும் வட பகுதிக்கு அவ்வாறு இலகுவாக சென்று விட முடியாதுள்ளது. வடக்கிற்கான பயணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் எதனால் என்பது குறித்து அரசும் இதுவரையில் அறிவிப்புகளைச் செய்யவில்லை.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு விட்டாலும் தற்போது நாட்டில் சமாதானமும் நிலவுவதாகவும் நிதியமைச்சர் தனது வரவு செலவுத் திட்ட உரையின் போது குறிப்பிட்டிருந்தார். அவரசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் அதிலுள்ள சரத்துக்கள் பயங்கரவாத தடைச் சட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றன. இவ்வாறான நிலையில் தான் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக் கொள்ள முடியாதோரில் அநேகமானோர் தமது உறுவுகளைப் பார்ப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து வருகின்றனர். பெரும் எண்ணிக்கையிலான இரட்டைப் பிரஜாவுரிமை விண்ணபங்கள் நிலுவையில் உள்ளன. 1,300 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக அறியக் கிடைத்துள்ளது. நாம் அறிந்த வகையில் தமிழர்கள் எவருக்கும் இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவில்லை.
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோரை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது வடக்கை வேறுபடுத்திப் பார்ப்பதாக உங்களுக்கு தெரியவில்லையா?
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் வடக்கில் ஆயுத செயற்பாடுகள் இருப்பதாகவும் பயங்கரவாதம் மீண்டும் உருவெடுப்பதாகவும் உள்ளதான தோற்றப்பாட்டை உருவாக்கி தேர்தலுக்காக தெற்கிலுள்ள மக்களை ஏமாற்றுவதற்கே முயற்சிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வடக்கு மக்கள் எந்தளவில் அசௌகரியங்களை அனுபவிக்கின்றனர் என்பது உணரப்பட வேண்டும். வடக்கில் உள்ளவர்களை மக்களாகவே நினைக்காத நிலை உள்ளது.
மேலும் வரவு செலவுத் திட்ட உரையின் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிமன் பெயரைக் குறிப்பிட்டுள்ள  ஜனாதிபதி பேச்சுக்களில் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். 
ஜனாதிபதியின் அழைப்பினை வரவேற்கிறோம். தமிழ் மக்களின் உண்மையான பிரநிதி யார் என்பதை  தற்போது ஜனாதிபதி உணர்ந்திருக்கிறார். எமக்கு அழைப்பு  விடுத்துள்ள ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளதை செயலில் காட்ட வேண்டும் என்பதுடன் அரசுக்குள் உள்ள பிளவுகளை அவர் முதலில் சரி செய்ய வேண்டும்.
மேலும், சமர்ப்பிக்கப்பட்டிருப்பது வரவு செலவுத் திட்டமல்ல. அது தேர்தல் விஞ்ஞாபனாமாகவே இருக்கிறது.

பொதுவேட்பாளர் விவகாரத்தில் ரணில் இணக்கம் – மனோ தெரிவிப்பு!


எதிர்வரும் உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின்
வேட்பாளர் ஒருவரை பொது சின்னத்தில் பொது வேட்பாளராக களம் இறக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீதிக்கான தேசிய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவர் ஐக்கிய தேசியக் கட்சிக் கட்சியை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரணில் விக்ரமசிங்க இந்த சந்திப்பின் போது முன்வைத்துள்ளார்.
அதனை நீதிக்கான தேசிய அமைப்பின் பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டதோடு பொது வேட்பாளர் யானை சின்னத்தில் அன்றி பொது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டதாக இந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ, சிங்கள மக்கள் ஒடுக்கப்பட்டு வரும் நிலையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சிங்களவர்கள் இணைந்து பேரினவாதத்திற்கு எதிராக ஐக்கயத்துடன் செயற்பட வேண்டும் என மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்ட பின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பாராளுமன்றின் ஊடாக நாட்டில் நிலவும் தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழ் – சிங்களத் தரப்பு வரலாற்று பேச்சுவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்வு காண முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை மனோ கணேசன் தரப்பு முன்வைத்துள்ளது.
அத்துடன் விருப்பு வாக்கு அகற்றம், வட்டார முறை தேர்தல் போன்ற மாற்றம் கொண்டுவரப்படும் போது வடகிழக்கு பகுதிக்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு அமைய வேண்டும் என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
பொது வேட்பாளரை நிறுத்தி தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் முக்கிய யுக்தியாக இருக்க வேண்டும் என்று மனோ கணேசன் கூறியுள்ளார்.
இலங்கையில் அடுத்த ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும், அந்தத் தேர்தலுக்கான தமது ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.
அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், அசாத் சாலி போன்ற பலர் கலந்துகொண்ட சந்திப்பு ஒன்று மாதுளுவாவே சோபித தேரரின் நீதிக்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நடந்துள்ளது.
அங்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது. அதில் முதலில் தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதையும், நிறைவேற்று அதிகார ஆட்சி முறைமையை நீக்குவதையும் மையமான நோக்கமாகக் கொண்டு ஒரு வேட்பாளரை நிறுத்துவது பற்றி ஆராயப்பட்டதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதன் அடுத்தக் கட்ட பேச்சுவாத்தை மேலும் சில கட்சிகள் மற்றும் அமைப்புக்களை இணைத்ததாக எதிர்வரும் நவம்பர் 07 ம் திகதி நடைபெறவுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகள் தமிழன் வசமாகிறது !


கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லார்ரி பேஜ்ஜிடமிருந்த
முக்கியமான பொறுப்புகள் பலவும் ஆண்ட்ராய்ட் பிரிவை நிர்வகிக்கும் சுந்தர் பிச்சையிடம் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளன. இந்த பொறுப்பு அதிகரிப்பு என்பது, சென்னை மனிதரான சுந்தர் பிச்சையின் எதிர்கால வாழ்வில் முக்கியமான ஏற்றமாக பார்க்கப்படுகிறது. சென்னையை சேர்ந்த பிச்சை சுந்தர்ராஜன் (42), சுந்தர் பிச்சை என்ற பெயரால் புகழடைந்தவர். 

ஐஐடி காரக்பூரில் BIT படிப்பை முடித்த பிச்சை, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் MS படிப்பும், பென்சில்வேனியாவின் வார்டன் கல்லூரியில் MBA உம் படித்தவர். முன்னணி நிறுவனமான கூகுளில் இவர் 2004ம் ஆண்டுதான் பணிக்கு சேர்ந்த போதிலும், திறமை காரணமாக வெகு விரைவில் உயர் பதவிகளுக்கு வந்தார். கூகுளின் முக்கியமான தயாரிப்பான ஆண்ட்ராய்டு பிரிவை நிர்வகிக்கும் பொறுப்பு பிச்சையிடம் அளிக்கப்பட்டது. 

அதுமட்டுமின்றி குரோம், கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றையும் பிச்சைதான் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் முக்கிய முடிவு ஒன்றை கூகுள் சி.இ.ஓ லார்ரி பேஜ் எடுத்துள்ளார். அதன்படி, கூகுளின் மேப்ஸ், கூகுள் பிளஸ், ஆய்வு, விளம்பரம் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளையும் பிச்சையின் பொறுப்பிலேயே கொடுத்துள்ளார் லார்ரி பேஜ். சுந்தர் பிச்சையின் பதவியில் எந்த மாற்றமும் அளிக்கப்படவில்லை என்ற போதிலும், கூடுதலான பொறுப்புகள், பிச்சையின் முக்கியத்துவத்தை கூகுள் உணர்ந்துள்ளதன் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. 

புதிதாக தரப்பட்டுள்ள பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள், இனிமேல் சுந்தர் பிச்சையின் கட்டுப்பாட்டில் வருகிறார்கள். இப்பொறுப்புகளில் இருந்து விடுபட்டுள்ள லார்ரி பேஜ், கூகுளின் வர்த்தகம், செயல்பாடு, கூகுள் எக்ஸ், நிர்வாக மேம்பாடு, சட்டம், நிதி மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் மட்டும் கவனம் செலுத்த உள்ளார். கூகுளை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்ல லார்ரி பேஜ் முழு நேரத்தையும் செலவிட இந்த மாற்றங்கள் உதவும் என்கிறது கூகுள் தரப்பு. 

சுந்தர் பிச்சை, 2012ல் கூகுள் ஆப்ஸ் பிரிவுக்கும், 2013ல் ஆண்ட்ராய்டு பிரிவுக்கும் பொறுப்பாளராக பதவி உயர்வுகளை பெற்றார் என்பது நினைவிருக்கலாம். கூகுளில் இணையும் முன்பாக, அப்ளைய்ட் மெட்டீரியல்ஸ் மற்றும் மெக்கின்சே அன்ட் கோ ஆகிய நிறுவனங்களில் சுந்தர் பிச்சை பணியாற்றியுள்ளார். சென்னை மனிதரின் பெயர் இப்போது உலகின் ஜாம்பவான் நிறுவனங்களான டுவிட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் முக்கிய பதவிகளுக்கான தேடுதல் பட்டியலில் இடம் பெற்றிருப்பது பெருமையே.

இதுவரை கூகிள்நிறுவனத்தின் பண்ட மேலாண்மைத்துறை துணைத் தலைவராகப் பணியாற்றினார். 2013-ம் ஆண்டு மார்ச் 13-ம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவராகியுள்ளார்.தற்பொழுது கூகுள் மேப், ஆய்வு, வர்த்தகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக உள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கப் போகும் முடிவினால் இலங்கைத் தீவில் மாற்றங்கள் ஏற்படுமா?


ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு
எதிராக விதித்திருந்த தடை தொடர்பில் ஐரோப்பிய பொது நீதிமன்றம் திருப்பகரமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இத்தீர்ப்பு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடக மற்றும் தகவல் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இத்தீர்ப்பானது சட்ட ரீதியிலானது மட்டுமே என்றும் அரசியல் ரீதியிலானது அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கை முன்னெடுத்த தமிழ்ச் சட்டச் செயற்பாட்டாளர் ஒருவர் இதே தொனிப்பட கருத்துத் தெரிவித்திருக்கிறார். அதாவது இத்தீர்ப்பானது சட்ட ரீதியிலானது என்றும் இதில் அரசியல் தலையீடு இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
ஆசிய ஜனநாயகங்களில் நீதி பரிபாலன துறையின் மீதான அரசியல் அதிகாரத்தின் பிடி ஒப்பீட்டளவில் அதிகமாயிருக்கும் என்றும் ஆனால் ஐரோப்பிய ஜனநாயகங்களில் நிலைமை அவ்வாறு இல்லை என்றும் அங்கெல்லாம் நீதி பரிபாலனத் துறை ஒப்பீட்டளவில் சுயாதீனமாக இயங்கக் கூடியதாக உள்ளது என்ற தொனிப்படவும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஐரோப்பிய ஜனநாயகங்களில் நீதி பரிபாலன துறையானது ஒப்பீட்டளவில் சுயாதீனமாக இயங்குகிறது என்பது உண்மைதான். ஆனால் அது ஒரு முழு உண்மையல்ல. விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது போன்ற வெளியுறவு கொள்கை சார் முடிவுகள் பெரும்பாலும் அரசியல் ரீதியிலானவை. அவை அரசியல் தீர்மானங்கள்; தான். அப்படியொரு அரசியல் தீர்மானத்தின் படி புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட போது போதியளவு சான்றுகள் வழங்கப்படவில்லை என்பதை ஐரோப்பிய பொது நீதி மன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தது. 
அத்தீர்ப்பில் அது ஒரு சட்ட பிரச்சினையாக கூறப்பட்டாலும் கூட அது அதன் ஆழமான பொருளில் ஓர் அரசியல் பிரச்சினையே. அதாவது புலிகள் இயக்கத்தை தடை செய்வது என்று ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்த போது அதற்கு வேண்டிய சான்றுகளின் சட்டப்பெறுமானம் தொடர்பில் போதியளவு கவனம் செலுத்தப்படவில்லை என்பதையே அது காட்டுகிறது.
அத்தடை விதிக்கப்பட்ட காலகட்டத்தையும் அத்தடைக்குப் பின்னால் இருந்த இராஜிய உள்நோக்கங்களையும் அவற்றின் ஆழத்துள் சென்று பார்த்தால் இது தெரியவரும் மேற்கின் அனுசரனையுடனான சமாதான முயற்சிகளில் இருந்து புலிகள் இயக்கம் பின்வாங்கப் போகின்றது என்றவாறான ஊகங்கள் பெருகிச் சென்ற ஒரு காலகட்டத்தல் லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது.

அதன் மூலம் புலிகள் இயக்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து அந்த இயக்கமானது சமாதான முயற்சிகளில் இருந்து பின்வாங்குவதை தடுப்பதே மேற்கு நாடுகளின் முதல் நோக்கமாக இருந்தது. ஆனால் அத்தடை எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியது. அது புலிகளை வளைப்பதற்குப் பதிலாக முறிப்பதிலேயே போய் முடிந்தது. தடையின் உடனடி விளைவு போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவையே பாதித்தது.

அக்குழுவில் இருந்த ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளிலிருந்து வந்த  கண்காணிப்பாளர்கள் தொடர்ந்தும் வன்னியில் பணி புரிய முடியாத ஒரு நிலை தோன்றியது. அதாவது சமாதான முயற்சிகள் மேலும் பின்னடைவைச் சந்தித்தன.
இப்பொழுது தடை நீக்கத்தைப் பற்றி சிந்திக்கப்படுகிறது. தடையை நீடிப்பதற்குத் தேவையான சான்றுகளை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தடையை நீடிப்பதா இல்லையா என்ற முடிவை ஐரோப்பிய ஒன்றியமே எடுக்க வேண்டியிருக்கும். அது நிச்சயமாக ஓர் அரசியல் தீர்மானம் தான். அதாவது இத்தீர்ப்பானது அதன் இறுதியிலும் இறுதியான விளைவைக் கருதிக் கூறின்  ஓர் அரசியல் விவகாரம் தான். அப்படியொரு அரசியல் தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் எடுக்குமா?
அல்லது இதை வேறு விதமாகவும்  கேட்கலாம். அப்படியொரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய தேவை ஏதும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உண்டா?
புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரான ஐந்தாண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தை கருதிக் கூறின் அந்த இயக்கத்தின் மீதான தடையை நீடிப்பதற்கு தேவையான அடிப்படைகள் ஒப்பீட்டளவில் பலவீனமாகவே காணப்படுகின்றன. எனினும் இந்தியாவும் அமெரிக்காவும் அத்தடையை நீடிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றன. அவை முழுக்க முழுக்க அரசியல் தீர்மானங்களே. தடை விதித்ததும் அரசியல் தீர்மானம் தான் தடையை நீடிப்பதா இல்லையா என்ற முடிவும் ஓர் அரசியல் தீர்மானம் தான்.
ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீடிப்பதில்லை என்ற ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்தால் அது இலங்கை அரசாங்கத்தின் மீதான ஒரு அழுத்தப்பிரயோக உத்தியாகவே பார்க்கப்படும். ஆயின்  இந்த இடத்தில் ஒரு குரூரமான முரணைச் சுட்டிக்காட்ட வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் புலிகள் இயக்கத்தை வழிக்குக் கொண்டு வருவதற்காக அந்த இயக்கத்தை தடை செய்த ஐரோப்பிய ஒன்றியம் இப்பொழுது இலங்கை அரசாங்கத்தை வழிக்கு கொண்டு வருவதற்காக தடையை நீக்குவது பற்றி சிந்திக்கிறதா? ஆயின் தென்னிலங்கையில்  அதன் உடனடி விளைவுகள்; எவ்வாறு அமையும்?
சந்தேகமேயில்லை, அது உடனடிக்கு அரசாங்கத்திற்கு அனுகூலமாகவே அமையக்கூடும். ஐரோப்பிய பொது நீதிமன்றம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கியிருக்கும் மூன்று மாத கால அவகாசம் முடியும் காலகட்டமும் ஜனாதிபதித் தேர்தல் நடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் காலகட்டமும் சற்று முன்பின்னாக தான் வருகின்றன.

எனவே வெள்ளைக்காரர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் புலிகள் இயக்கத்தை மீள உயிர்;ப்பிக்கிறார்கள் என்று கூறி இனவாதத்தை தூண்டுவது இலகுவாக இருக்கும். அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதை தென்னிலங்கையில் காணமுடிகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு இனவாதம் தூண்டப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு வெற்றி வாதம் நிலை பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
அண்மையில் தென்னிலங்கையில் உள்ள ஒரு செயற்பாட்டாளரோடு உரையாடிய போது அவர் பின்வருமாறு சொன்னார். 'அங்கே மிக அடிமட்டத்தில் அபிப்பிராயத்தை உருவாக்க வல்லவர்களான ஓட்டோ சாரதிகள் சிகை அலங்கரிப்போர் போன்றோர் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தி பரவலாக காணப்படுகிறது. அதே சமயம் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் அபிப்பிராயத்தை உருவாக்க வல்ல உயர் குழாத்தினர், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் போன்றோர் மத்தியிலும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கள் திரண்டு வருகின்றன....... இப்படிப்பார்த்தால் வெற்றி வாதத்தின் கவர்ச்சி குறையத் தொடங்கி விட்டதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் பலமான ஒரு வியூகத்தை வகுத்தால் இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பது பற்றி நம்பிக்கையோடு சிந்திக்கலாம்.....' என்று.
நான் அவரிடம் சொன்னேன் 'எல்லா வெற்றி வாதங்களுக்கும் ஏதோ ஒரு வயது உண்டு. இலங்கைத் தீவிலும் ஒரு நாள் வெற்றி வாதத்திற்கு முதுமை வரும். ஆனால் ஆண்டுதோறும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அரசாங்கத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் ஓர் அனைத்துலக சூழல் நீடித்திருக்கும் வரை, தமிழ் நாடும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகமும் தமிழ்த் தேசியத்தின் கூர் முனைகள் போல துலங்கிக் கொண்டிருக்கும் வரை இலங்கைத் தீவின் வெற்றி வாதத்திற்கு வயதாகப் போவதில்லை...' என்று
ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கப்போகும் முடிவுகளையும் இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே பார்க்க வேண்டும்.
அப்படிப் பார்த்தால் இத்தீர்ப்பின் உடனடி விளைவு எனப்படுவது அரசாங்கத்தை பலப்படுத்துவதாகவே அமையும். அதாவது மேற்கு நாடுகள் இலங்கைத் தீவில் முன்னெடுக்க முற்படும் ஆட்சி மாற்றம் அல்லது ஆட்சிக்குள் மாற்றம் என்ற தெரிவுக்கு எதிரான நிலைமைகளே வளர்ச்சி பெறும்.
ஆயின், தமது நிகழ்ச்சி நிரலை குழப்பக் கூடிய அல்லது அதைத் தாமதப்படுத்தக் கூடிய ஓர் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் எடுக்குமா? அல்லது ஆட்சி மாற்றத்தை தவிர வேறு ஏதும் திட்டம் மேற்கிடம் உள்ளதா? அல்லது தெரிவுகள் மிகக் குறைந்த ஓர் நிலையில் கிடைக்கக் கூடிய தெரிவுகளை பயன்படுத்தி புதிய தெரிவுகளை உருவாக்கலாமா என்று மேற்கு நாடுகள் முயற்சித்துப் பாரக்கின்றனவா?
ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற்றால் அதன்பின் தென்னிலங்கையில் ஏற்படக்கூடிய எல்லா அரசியல் நகர்வுகளையும் அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும். மேலும் அந்த வெற்றியானது நாடாளுமன்ற தேர்தல்களிலும் தாக்கம் செலுத்தும். சில சமயம் இப்போதிருப்பது போன்ற ஒரு பெரும்பான்மை அரசாங்கத்திற்கு கிடைக்காமல் போகலாம். மற்றும்படி மேற்படி தீர்ப்பின் விளைவானது தென்னிலங்கையில் இப்போதிருக்கும் நிலைமைகளை தொடர்ந்தும் பேணுவதற்கே உதவக்கூடும்.  அதே சமயம் மறுவளமாக இத்தீர்ப்பானது தமிழர்கள் தரப்பில்  எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தும்?
இத்தீர்ப்பின் உடனடி விளைவுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் தான் தாக்கத்தை ஏற்படுத்தும். இது புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலுள்ள சட்டச்செயற்பாட்டாளர்களுக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க ஒரு வெற்றியாகும். இதனால் ஐரோப்பாவில் புலிகள் இயக்கத்தின் சட்ட ரீதியிலான அந்தஸ்து உயரும். இது கடந்த ஐந்தாண்டுகளில் புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்களுக்கும் அனுதாபிகளுக்கும் கிடைத்த உற்சாகமூட்டும் ஒரு வெற்றியாகும். ஆனால் இந்த வெற்றியின் விளைவுகளை தக்க வைப்பதும், அதை அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்வதும் புலம் பெயர்ந்த தமிழர்களின் கைகளில் தான் உள்ளது.
இத்தீர்ப்பு மூன்று மாதங்களின் பின் எத்தகையதோர் இறுதி வடிவத்தை அடையும் கூடும் என்பதில் தான் தமிழர் தரப்பு செயற்பாடுகள் தங்கியிருக்கின்றன. சொத்துக்களை முடக்குவது தொடர்பாக வருங்காலத்தில் எத்தகையதோர் அரசியல் தீர்மானம் எடுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.  அதைப் போலவே ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்ப்பை பின்பற்றி அந்த ஒன்றியத்திற்குள் வரும் எல்லா நாடுகளும் அதையொத்த முடிவுகளை எடுக்குமா அல்லது ஒவ்வொரு நாடும் அதற்கேயான சட்ட வரையறைகளுக்கூடாக முடிவுகளை எடுக்குமா என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
அவ்வாறு புலிகள் இயக்கத்திற்கு சாதகமாக முடிவுகள் எடுக்கப்படுமிடத்து தமிழர்கள் தரப்பில் மற்றொரு பெருந்தiடையை தாண்டவேண்டியிருக்கும். புலிகள் இயக்கத்தின் மெய்யான வாரிசு யார்? என்ற சர்ச்சையே அது.
கடந்த ஐந்தாண்டுகளாக புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலுள்ள அமைப்புக்களால் இது தொடர்பில் ஐக்கியமான ஒரு பொது முடிவை எட்ட முடியவில்லை. இத்தகைய ஒரு பின்னணியில் குறிப்பாக சொத்து முடக்கம் தொடர்பான தடைகள் நீக்கப்படுமிடத்து வாரிசுச் சண்டையும் சொத்துக்களுக்கு உரிமை கோரும் மோதல்களும் அதிகரிக்கக் கூடும். சிலவேளை தடை நீக்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளை விடவும் கூடுதலான வழக்குகள் சொத்துக்களுக்கு உரிமை கோரி தொடுக்கப்படக் கூடும்.
இப்படிப் பார்த்தால் இப்போது வந்திருப்பது ஒரு தடை நீக்கம் என்பதை விடவும் ஒரு பரீட்சை என்றே கூற வேண்டும். ஐரோப்பாவில் உள்ள புலிகளுக்கு சாதகமான அமைப்புக்கள் இப்பரீட்சையில் எப்படிச் சித்தியடைகின்றன என்பதில் தான் எல்லாமும் தங்கியிருக்கிறது.
புலிகள் இயக்கம் இப்பொழுது தாயகத்தில் செயற்படுவதில்லை. அந்த இயக்கத்தின் தொடர்ச்சியாக காணப்படும் அமைப்புக்கள் பெருமளவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்திலேயே காணப்படுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் மேற்படி அமைப்புக்கள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவரத்தக்க ஜனவசியம் மிக்க ஒரு தலைமை அங்கே எழுச்சி பெற்றிருக்கவில்லை. அதே சமயம் களத்தில் மக்களாணையைப் பெற்றிருக்கும் கூட்டமைப்பாலும் மேற்படி அமைப்புக்களுக்கு தலைமை தாங்க முடியாது. மக்களாணையை பெற்றிராத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் அதை ஒரு கட்டத்திற்கு மேல் முன்னெடுக்க முடியவில்லை.
இத்தகையதோர் பின்னணியில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஆகக் கூடிய பட்ச ஐக்கியத்தை ஏற்படுத்த தவறின் இத்தீர்ப்பின் நற்கனிகள் அழுகிப்போகக் கூடும். எனவே புலம்பெயர்ந்த தமிழர்கள் இத்தீர்ப்பைக் கொண்டாடுவது என்பதை ஐக்கியத்தை கட்டியெழுப்புவதில் இருந்தே தொடங்க வேண்டும்.
முடிவாக கூட்டிக்கழித்துப் பார்த்தால் இத்தீர்ப்பின் உடனடி விளைவுகள் தென்னிலங்கை அரசியலில் இப்போதிருக்கும் நிலைமைகளை தொடர்ந்து பேண முற்படும் தரப்புக்களுக்கே உதவிபுரியும். அதேசமயம் புலம் பெயர்ந்த தமிழர்கள் தரப்பில் ஏற்படக்கூடிய எந்த ஒர் எழுச்சியும் இலங்கைத் தீவை வந்து சேர்வதில் அடிப்படையான மூன்று தடைகளை தாண்ட வேண்டியிருக்கும்.
முதலாவது தடை-அரசாங்கம் சட்ட ரீதியாக விதித்திருக்கும் தடை
இரண்டாவது தடை-புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையின்மை.
மூன்றாவது தடை-களத்தில் இயங்க முடியாத ஒரு அமைப்பின் வெளி நீட்சிகள் வெளியரங்கில் எவ்வளவு தான் பலமாகக் காணப்பட்டாலும் அவற்றுக்கு அடிப்படையான  வரையறைகள் உண்டு என்பது. இம்மூன்று தடைகளையும் கருதிக் கூறின் இத்தீர்ப்பின் விளைவாக புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஏற்படக்கூடிய புதிய வளர்ச்சிகள் தாயகத்தை வந்தடைவதில் அடிப்படையான வரையறைகள் உண்டு.
இப்படிப் பார்த்தால் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கப்போகும் முடிவுகளால் இலங்கைத் தீவின் அரசியலில் உடனடிக்கு பெரிய திருப்பங்கள்; எதுவும் ஏற்படப்போவதில்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் இயக்கத்தை வளைக்கத் தவறிய தடையைப் போலவே இப்பொழுது தடை நீக்கமும் அரசாங்கத்தை வளைக்கப் போவதில்லை.

நன்றி-தினக்குரல்

வரப்போவது ஜனாதிபதி தேர்தலா யுத்தமா?


கடந்த 19ஆம் திகதி ஹெல உறுமய அமைப்பின் மகா நாடு
முடிந்ததும், அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களுடன் அந்த அமைப்பின் முக்கியஸ்தர்களான ஓமல்பே சேஹித்த தேரர், அதுருலியே ரத்னசாரதேரர், அமைச்சர் சம்பிக்க என் போர் ஜனாதிபதியைச் சந்திக்க அலரி மாளிகைக்கு சென்றிருந்தனர்.

சரியாக 5.30 மணிக்கு அங்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சுசில் பிரேம்ஜயந், டலஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்துரையாடல் மேசைக்கு வந்தர்கள். ஜனாதிபதி ஒரு மணி நேரம் கழித்து அங்கு வந்தார். எமது கட்சி மகாநாட்டில் எடுத்த தீர்மானங்களுடன்தாம் இங்கு வந்திருப்பதாக ஹெல உறுமய தரப்பினர் குறிப்பிட்டு, சுதந்திரமான ஆணைக்குழுக்கள் அமைப்பது,மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்காமல் தடுப்பது போன்ற தீர்மானங்கள் உட்பட இன்னும் பல தீர்மானங்களை முன்வைத்தனர். 

இதனை அமுல் படுத்துவதற்கான உத்தரவாதத்தை அவர்கள் அங்கு எதிர்பார்ப்பது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்குப் புரியவே, இவற்றை எல்லாம் இப்போது யோசித்துக் கொண்டிருக்க தனக்கு நேரம் கிடையாது கொடுத்து விட்டுப் போங்கள் என்று முறுகிக் கொண்டு ஜனாதிபதி அந்த இடத்திலிருந்து எழுந்து சென்றிருக்கின்றார். 

எனவே, இந்தச் சந்திப்பு தோல்வியில் முடியவே அதுருலியே ரத்னசாரத்தேரர் நியாயமாக ஒரு சமுதாயத்தை நோக்கி என்ற அமைப்பை வைத்திருக்கின்ற சோபித தேரருடன் தற்போது போய் இணைந்து கொண்டிருக்கின்றார் என்று பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஹெல உறுமயக் கட்சியுடனான சந்திப்புக்கு தாமக்கும் கலந்துகொள்ள அழைப்பு வரும் என்றிருந்த சுதந்திரக் கட்சி அமைப்பாளர் மைத்திரிபால சிரி சேனாவும், நிமல் சிறிபாலாவும் அந்த அழைப்பு வராததால் அதிர்ச்சியடைந்திருக்கின்றார்கள். இது கட்சி முக்கியஸ்தர்களிடையே தற்போது ஒரு சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. 

நமது நாடு ஜனநாயக நாடு. ஜனநாயகத்துக்கு மக்களாட்சி என்றொரு பெயரும் இருக்கின்றது! இங்கு முறையாக மக்களாட்சி நடக்கின்றதோ இல்லையோ அடிக்கடி தேர்தல்கள் மட்டும் நடந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. தேர்தல்கள் ஒரு கால அட்டவணையில் நடப்பதுதான் சம்பிரதாயம். ஆனால், இலங்கையின் ஆட்சியாளர்கள் தமக்கேற்றவாறு தேர்தல் வரைபடத்தை மாற்றிக் கொள்ளவும் நமது அரசியல் யாப்பில் தாராளமாக இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. 

தேர்தலைத் தீர்மானிக்கின்ற விடயத்தில் இலங்கையில் தற்போது ஜாதகக் காரர்களின் கரங்களே மேலோங்கி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்தத் தேர்தலில் உள்ளூர் ஜாதகக்காரர்கள் மட்டுமன்றி இந்தியாவிலுள்ள ஜாதகக்காரர்களினதும் ஆதிக்கம் கணிசமாக இருப்பதை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. 

எனவே, தேர்தல் ஆணையாளரின் வேலையை தற்போது ஜாதகக்காரர்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். தமக்குப் பாராளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் தமக்கு தேவைப்படும் போதும் தேர்தல்களை நடத்தவும் அதிகாரங்களைக் கூட்டிக் கொள்ளவும் அரசியல் யாப்பில் அடிக்கடி திருத்தங்களைச் செய்வதும் நாம் இங்கு பார்க்கின்றோம். 

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் தற்போதைய ஆட்சியாளர்களை குறைகூற முடியாது. இந்த அசிங்கமான சம்பிரதாயத்தை இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்ததே ஐக்கிய தேசியக் கட்சி. எனவே, மகிந்த ராஜபக்ஷவுக்கு எந்தவகையிலும் இது விடயத்தில் கைநீட்டும் அருகதை ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடையாது. ஜே.ஆர்.ஜெயவர்தன காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வடிவமைத்து இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்திய யாப்பே தற்போது இந்த நாட்டுக்குச் சாபக்கேடாக மாறி இருக்கின்றது. 

இன்று இந்த யாப்பை அறிமுகம் செய்த ஐக்கிய தேசியக் கட்சியே தற்போது அதனை விமர்சித்து, அதனை நீக்கவும் வேண்டும் என்றும் குரல் கொடுக்கவும் ஆரம்பித்திருக்கின்றது. இது அரசியல் நாகரிகம் இல்லாத விடயமாக இருந்தாலும் காலத்தின் தேவை என்ற வகையில் இந்தக் குத்துக்கரணத்தைப் பாராட்டவும் வேண்டி இருக்கின்றது. அதிகாரம் கையில் இல்லாத நிலையில் இப்படிப் பேசினாலும் அதிகாரம் கைகளுக்கு வந்தபின்னர் இவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதங்களும் கிடையாது. 

ஆனால், இந்த முறை 18ஆவது திருத்தத்துக்கு வாக்களித்ததன் மூலம் நாம் ஒரு சர்வாதிகாரியை உருவாக்கவழி சமைத்துக் கொடுத்திருக்கின்றோம் என்று ஆளும் தரப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இன்று பகிரங்கமாக பேசுவது ஒரு சிறப்பம்சமாக இருக்கின்றது. 

மகிந்த ராஜபக்ஷவுக்கு எல்லை மீறிய அதிகாரத்தையும் ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கு வாக்களித்துவிட்டு இப்போது முதலைக் கண்ணீர் வடிக்கின்ற அரசியல்வாதிகளைப்பற்றி மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. சமகால அரசியலில் இந்தச் சந்தர்ப்பத்தில் அப்படி பேசியும் நடந்தும் தான் அவர்களுக்கு தமது அரசியல் வியாபாரத்தைச் செய்ய வேண்டி இருக்கின்றது. 

இது காலத்தின் தேவை. மேற்சொன்ன எமது விமர்சனம் பொதுவாக இந்த நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அரசியல் நடைமுறைகள் தொடர்பான மக்கள் மனக்குறைகள். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கட்சி மாறினால் பதவி பறிபோகாது என்று, தான் கொடுத்த தீர்ப்புத் தொடர்பாக மக்களிடத்தில் மன்னிப்புக் கேட்டு தற்போது கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா. 

நேற்றுவரை ராஜபக்ஷவுக்கு கூஜாத்தூக்கிக் கொண்டிருந்த ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர்களும் 18ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கைதூக்கி நாம் ஒரு பாவச் செயலைப் புரிந்த விட்டதாகவும் இதற்குப் பின்னரும் ஆளும் தரப்பின் தவறான நடவடிக்கைகளுக்குத் தம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியாது என்று குறிப்பிடுவதுடன், மூன்றாம் தரப்பு வேட்பாளர் தொடர்பாகவும் தற்போது பேச ஆரம்பிதிருக்கின்றனர் ஹெல உறுமய கட்சியினர். 

ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க 18ஆவது திருத்த மூலத்திற்குக் கைதூக்கியது தனக்குத் தற்போது பெரும் மனஅழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பதாக பகிரங்கமாகக் கூறிவருகின்றார். சுகாதார அமைச்சரும் சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிரிசேன தெரேச என்ற அதிகாரியை கடவுள் கட்டாயம் தண்டிக்க வேண்டும் என்று பகிரங்கமாக சபித்துப் பேசி வருகின்றார். 

சுகாதாரத் துறையில், தான் கொண்டுவர முனைந்த மாற்றங்களுக்கு அதிகாரிகள் குறுக்கே நிற்பதால் அமைச்சர் அப்படி சாபமிடுகின்றார். எனவே, மைத்திரிபால சிரி சேனவுக்கு தனது அமைச்சிலேயே எதுவும் செய்யமுடியாத நிலை. தான் ஜனாதிபதியாக வந்தால் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எவரையும் அரசியல் ரீதியாகப் பதவிகளுக்குக் கொண்டு வரமாட்டேன் என்று வட மேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேக்கர ஊடகமொன்றில் குறிப்பிட்டிருக்கின்றார். 

இவர் இப்படி கருத்துக் கூறி இருப்பது ஏன் என்று சொல்லத்தேவையில்லை. அமைச்சர் ஜனக தென்னக்கோன் குடும்பத்தினருக்கும் புதிதான அரசியலுக்கு நுழைந்து பிரதியமைச்சர் பதவி பெற்றிருக்கின்ற வசந்த பெரேராவுக்கும் மிடையில் நேரடி மோதல் நடந்து கொண்டிருக்கிறது. ஜனக தென்னக்கோன் குடும்பம் பொதுமக்ககள் பணத்தில் 34 கோடி ரூபாவை கையாடி இருக்கின்றது என்று வசந்த தொடுக்கின்ற குற்றச்சாட்டு விடயத்தில் அந்தக் குடும்பம் மிகவும் மனம் நொந்து போய் இருக்கின்றது. 

இந்த விவகாரத்தை வசந்த பெரேரா நிரூபித்தால் தான் அரசியலில் இருந்து முற்றாக விலகிவிடப் போவதாக மத்திய மாகாண அமைச்சர் பிரமித்த தென்னகோன் சவால் விடுத்திருக்கின்றார். தென்னக்கோன் குடும்பம் இப்படி நடத்தப்படுவது தொடர்பாக சுதந்திரக் கட்சி செயலாளர் மைத்திரிபால சிரி சேனாவும் தனது கவலையை வெளியிட்டிருக்கின்றார். வழக்கம் போல் முன்னாள் பிரதமர் ரத்னசிரி விக்கிரம நாயக்கவின் மகன் விதுரு விக்ரமநாயக்க இந்த நாட்களில் தனது அரச எதிர்ப்புப் பிரசாரங்களை துரிதப்படுத்தி வருகின்றார். 

ராஜபக்ஷவுக்கு எதிரான பொது வேட்பளர் என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கின்ற ரணில் விடயத்தில் அந்தக் கட்சிக்காரர்கள் எவரும் இதுவரை பகிரங்கமாக வாய்திறக்க விட்டாலும், ரணிலை ஓரம் கட்டிவிட்டு பொது வேட்பாளர் ஒருவரைக் கொண்டு வந்து முதலில் ராஜபக்ஷவை வெளியேற்றுவது பாதுகாப்பானது என்றும் ஒரு யோசனை இருக்கின்றது. 

அந்த யோசனைப்படி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்கின்ற ஒழுங்குகள் தொடர்பாகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கின்ற ஒரு குழு பொது வேட்பாளருக்கான முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றது. பிரதான எதிர்க்கட்சிகளும் புத்திஜீவிகளும் ரணிலை வேட்பாளராக நிறுத்தினால் ராஜபக்ஷவை வீழ்த்துகின்ற நல்லதொரு வாய்ப்பு இல்லாமல் போய்விடும் என்று கருதுகின்றார்கள். 

எமக்குக் கிடைக்கின்ற செய்திகளின்படி பொது வேட்பாளர் திட்டத்தை ரணில் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்று தெரிகின்றது. இப்படிப் பார்க்கின்ற போது ரணில் வேட்பாளர் என்ற விடயத்தில் அந்தக் கட்சி மத்தியில் ஒட்டு மொத்த உடன்பாடு இல்லை. ஆனால், இந்த முறை ரணிலுக்கு சந்தர்ப்பத்தை கொடுத்து அவருக்கு மற்றுமொரு தோல்வி வந்து சேர்வதிலிருந்து தனது பிடியைக் கட்சிக்குள் உறுதிப்படுத்திக் கொள்ளும் தன்னலப் போக்குடன் தற்போது சஜித் வேலை பார்க்கின்றார் என்று தற்போது குற்றச் சாட்டப்படுகின்றார். 

சஜித்தைப் பொறுத்து அடுத்து வருகின்ற தேர்தல் தான் அவரது இலக்கு. இதற்கிடையில் ஒரு முறை இங்கு வந்த போது கடத்தப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சித் தலைவர் குமார் மாத்தியாவும் தேர்தலில் குதிப்பது உறுதியாகி இருக்கின்றது. இடதுசாரிகளின் பொது வேட்பாளராக இவர் களமிறங்க இருக்கின்றார். 

இவர் வருகையை அரசு அங்கீகரிக்குமா? அவரால் நாட்டுக்குள் பிரவேசிக்க வாய்ப்பு இருக்கின்றதா என்று சோசலிசக் கட்சிக்காரர்களிடம் கேட்டால் நிச்சயம் அவர் இங்கு வருவார் என்று நம்பிக்கையுடன் பேசுகின்றார்கள் அந்தக் கட்சி சார்பில் கருத்து வெளியிடக்கூடியவர்கள். ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி.யும் இந்த தேர்தலில் ராஜபக்ஷ போட்டியிட முடியாது அவரை ஒரு ஜனாதிபதி வேட்பாளராக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்றும் தேர்தலை முன்கூட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியாவிடம் முறைப்பாடு கொடுத்திருக்கின்றார்கள். 

இது இலங்கை வரலாற்றில் ஒருவரை வேட்பாளராக ஏற்கக்கூடாது என்று கொடுக்கப்படும் முதல் முறைப்பாடாக வரலாற்றில் பதியப்படுகின்றது. எமக்குத் தெரிந்த வரை இது விடயத்தில் ஆணையாளர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் விளக்கம் கேட்பார் அந்த விளக்கத்தின் அடிப்படையில் அவர் தீர்ப்பு அமையும். தேர்தல் நாட்களில் பாப்பரசர் இங்கு விஜயம் செய்வது சாத்தியமில்லை எனவே, எப்போது தேர்தலை நடத்தப்போகின்றீர்கள் என்று இலங்கையிலுள்ள அதிமேற்று ராணியர் ஆளும் தரப்புக்கு கடிதம் கொடுத்து விளக்கத்தை எதிர்பார்த்தாலும் இன்று வரை அவர்கள் கொடுத்த கடிதத்துக்கு ஆளும் தரப்பு பதில் கொடுக்காமல் இருந்து வருகின்றது. 

2015 ஜனவரி 13,14,15இல் பாப்பாண்டவர் இங்கு விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் ஜனவரி 8ஆம் திகதி இங்கு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று நம்பப்படுகின்து. தற்போது ஆளும்தரப்பு எதிர்க்கட்சியை இலக்குவைத்து போஸ்டர் போராட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கின்றது. 

ரணில் வேட்பாளர் என்று கருதி இந்தப் போஸ்டர் தாக்குதல் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திடீரென்று பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டால் அவரை இலக்கு வைத்து நடத்தக்கூடிய போஸ்டர்களும் தற்போது வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. எப்படியும் வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் ஒரு பெரும் போராகவே அமைய இருக்கின்றது. 

-நஜீப் பின் கபூர்-

கூட்டமைப்பின் தீர்மானத்துக்கும் அதன் வியாக்கியானங்களுக்கும் அடி


"இனப் படுகொலையில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க சர்வதேச
தலையீட்டை கோரும் தீர்மானம் ஒன்றை வட மாகாண சபை நிறைவேற்றுவதற்கு தார்மீக ரீதியிலோ, சட்ட ரீதியிலோ எந்தத் தடைகளும் இல்லை என நாம் கருதுகிறோம்"

இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளது தமிழ் சிவில் சமூக அமைப்பு. தமிழர்கள் மீது கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் மேற்கொள்ளப்படுவது இனப்படுகொலையே என்பதை வெளிப்படுத்தவும் இனப் படுகொலைக்கான சர்வதேச விசாரணையைக் கோரவும் வட மாகாண சபைக்குத் தடை ஒன்றும் இல்லை என அந்த அமைப்பு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

தமிழர்கள் மீது நடத்தப்பட்டதும் நடத்தப்படுவதும் இன அழிப்பே என வட மாகாண சபையில், உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொண்டுவந்த பிரேரணையை பல்வேறு வியாக்கியானங்களைக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. இச்செயற்பாட்டை கூட்டமைப்பு உயர்பீடம் நியாயப்படுத்தியும் வருகிறது. 

இந்நிலையில் கல்விமான்கள், சட்டத்தரணிகள், சமூகத் தலைவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்டோரைக் கொண்ட தமிழ் சிவில் சமூக அமைப்பின் அறிக்கையானது தமிழ்க் கூட்டமைப்பின் இந்தத் தீர்மானத்துக்கும் அதன் வியாக்கியானங்களுக்கும் அடியாக விழுந்துள்ளது. 

சிவில் சமூகம் விடுத்துள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- இனப்படுகொலையிலிருந்து தமிழர்களை பாதுகாக்க சர்வதேச தலையீட்டை கோரும் தீர்மானமொன்றை வட மாகாணசபை நிறைவேற்றுவதற்கு தார்மீக ரீதியிலோ - சட்ட ரீதியிலோ எவ்வித தடைகளும் இல்லை என நாம் கருதுகிறோம். 

இனப்படுகொலை தொடர்பில் வட மாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதன் பொருத்தப்பாடு குறித்த எமது கருத்துக்கள் வருமாறு:- 

தமிழர்கள் மீது நடத்தப்பட்ட, தொடர்ந்தும் நடத்தப்படும் இனப்படுகொலை சம்பந்தமாக, வட மாகாண சபையானது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது பொருத்தமானதா என்பது குறித்து தமிழ் சிவில் சமூக அமையத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது. தேவைப்பட்டவிடத்து சர்வதேச சட்டம் தொடர்பில் கருத்துக் கூறவல்ல சட்டத்தரணிகளின் ஆலோசனையும் இவ்வறிக்கையை வெளியிடும் பொருட்டு எம்மால் பெறப்பட்டது. 

1) ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை தொடர்பான 1948 ஆம் ஆண்டு சமவாயம் இனப்படுகொலையைத் தடுப்பதையும், இனப்படுகொலை புரிந்தவர்களைத் தண்டிப்பதையும் இலக்காக கொண்டது. இச்சமவாயமானது இனப்படுகொலை என்பதை ஒரு தேசிய இன அல்லது ஒரு மத குழுமத்தை முற்றாக அல்லது பகுதியாக அழித்தல் என வரைவிலக்கணப்படுத்துகிறது (இனப்படுகொலை சமவாயத்தின் 2 ஆம் உறுப்புரை). 
மேலும் இனப்படுகொலையானது மரபு சார் சர்வதேச சட்டத்தினால் எத்தகைய சந்தர்ப்பத்திலும் மீறப்படமுடியாத ஒரு விதியாக அடையாளங் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் ஒரு தேசிய அல்லது இனம் சார் குழும வகைக்குரியவர்கள் என்பது மறுத்துரைக்கப்பட முடியாதது. 

2) சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் உரோம் சட்டமானது இனப்படுகொலை (உறுப்புரை 6), போர்க்குற்றங்கள் (உறுப்புரை 8), மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் (உறுப்புரை 7) ஆகிய மூன்றையும் குற்றங்களாக வரையறுத்துள்ளது. தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மற்றும் தொடர்ந்து நடத்தப்படும் கொடுமைகளை விசாரிக்கும் எந்தவொரு விசாரணையிலும் இனப்படுகொலை உட்பட மேற்குறித்த மூன்று வகையான குற்றங்களும் விசாரிக்கப்படுதல் அவசியமானதாகும். 

போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களுக்கு மேலதிகமாக, இனப்படுகொலை பற்றியும் விசாரிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் விசாரணைக் குழுவைக் கோரும் உரிமை தமிழர்களுக்கும் தமிழர்களின் பிரதிநிதிகளுக்கும் உண்டு. இனப்படுகொலை தொடர்பிலான விசாரணையை நாம் கோருவதானது எமக்கெதிராக நடைபெற்ற சர்வதேச சட்டமீறல்கள் எல்லாவற்றையும் அடையாளப்படுத்தி அதனை விசாரிக்கும் முனைப்பினை உறுதிப்படுத்தும். 

மேலும் இனப்படுகொலையை விசாரிக்கக் கோருவதானது, ஏனைய குற்றங்களான போர்க்குற்றம் மற்றும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களை விசாரிப்பதற்கு ஐ.நா. விசாரணைக் குழுவிற்குச் சிக்கல்களை ஏற்படுத்தாது. மேலும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில் இனப்படுகொலை பற்றிக் குறிப்பிடப்படாமையோ அல்லது 'இனப்படுகொலை' என்ற பதத்தை உள்ளடக்காத ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2014 மார்ச் மாத தீர்மானத்தின் உள்ளடக்க வாசகங்களோ, ஐ.நா. விசாரணைக் குழுவானது இனப்படுகொலையை விசாரிப்பதற்குத் தடையாக இருக்க மாட்டாது. 

3) தம்மீது நடத்தப்பட்ட, மற்றும் தொடர்ந்து நடாத்தப்படும் கொடூர குற்றங்கள், இனப்படுகொலை என்ற பரிமாணத்திற்குரியது என்பது குறித்த சட்ட ரீதியான கருத்துருவாக்கம் ஒன்றை செய்வதற்கு தமிழர்களும் அவர்களது பிரதிநிதிகளும் உரித்துடையவர்கள். அவ்வாறான சட்ட ரீதியான ஒரு கருத்துருவாக்கத்தை செய்வதற்கு எமக்கு போதுமான, நியாயமான அடிப்படைகள் உண்டு. நடந்தது இனப்படுகொலை என்கிற சட்ட நிலைப்பாட்டை எடுத்தல் என்பது அடிப்படைகளற்ற மேம்போக்கான ஒரு முடிவு அன்று. 

அவ்வாறே தமிழர்களும் அவர்களது பிரதிநிதிகளும் தம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனப்படுகொலையை தடுத்து அதிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் பொருட்டு சர்வதேச தலையீட்டை கோருவதற்கு உரிமையுடையவர்கள். இத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் சர்வதேச சட்டத்தினால் மனித உரிமைகளாக அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் இனப்படுகொலை தொடர்பான சமவாயத்தின் மூலமாக இனபடுகொலையைத் தடுப்பதற்கும் அதிலிருந்து பாதுகாப்பதற்குமான சர்வதேசத்தின் கடப்பாடுகள் உருவாகின்றன. 

அண்மைக்காலமாக சர்வதேச சட்டததில் முகிழ்த்துவரும் பாதுகாப்பதற்கான கடப்பாடு எனும் கோட்பாட்டிலும் (Responsibility to Protect) இனப்படுகொலையைத் தடுப்பதற்கும் அதிலிருந்து பாதுகாப்பதற்குமான சர்வதேச சமூகத்தின் கடப்பாடுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தம்மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர குற்றங்களை இனப்படுகொலையின் பாற்பட்டவை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தாமே அடையாளம் காணுதல் அது தொடர்பான விசாரணையின் பக்கச்சார்பற்ற தன்மைக்கு எந்தவிதத்திலும் குந்தகம் விளைவிக்காது. எனவே, தம்மீது நிகழ்த்தப்பட்ட குற்றம், இனப்படுகொலையின் பாற்பட்டது என தமிழர்கள் அடையாளம் காணுமிடத்து, அது எவ்வகையிலும் ஐ.நா. விசாரணைகளைப் பாதிக்காது. 

4) மேலும், ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல பிரதிநிதித்துவ சபைகள் இனப்படுகொலை குறித்து தீர்மானங்களை நிறைவேற்றியமைக்கு உதாரணங்கள் உண்டு. அவற்றுள் சில: 

அ) வடக்கு ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இனப்படுகொலையின் பாற்பட்டவை என ஈராக்கிய நாடாளுமன்றம் 2014 ஓகஸ்ட் இல் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. 

ஆ) காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இனப்படுகொலையின் பாற்பட்டது என பாகிஸ்தான் நாடாளுமன்றம் 2014 ஓகஸ்ட் இல் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. 

இ) காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இனப்படுகொலையின் பாற்பட்டது என பலஸ்தீன ஜனாதிபதி முகமட் அபாஸ் அவர்கள் 2014 செப்ரெம்பர் ஐ.நா. பொதுச்சபையில் ஆற்றிய உரையில் பதிவு செய்து இருந்தார். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இரு தரப்புக்களாலும்மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களை விசாரிப்பதற்காக ஓர் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்த வேளையிலேயே பலஸ்தீன ஜனாதிபதி ஐ.நா. பொதுச்சபையில் இக்கருத்தை வெளிப்படுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

ஈ) சென்ற நூற்றாண்டின் ஆர்மீனிய இனப்படுகொலை குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் உட்பட உலகின் பல்வேறு நாடாளுமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதன. 

5). தமிழர்களின் நலன்களை முதன்மையாகக் கொண்டு தமிழர்களும் அவர்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் தம்முடைய நிலைப்பாடுகளை தெளிவாக முன்வைக்க வேண்டும். தமது பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்படவேண்டுமென்பதற்காக அப்பிரச்சினைகள் சார்ந்த நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் உரையாடல்களை தாமே முன்னெடுப்பதற்கும் அவற்றில் பங்கு கொள்வதற்குமான தார்மீக உரிமை தமிழர்களுக்கு உள்ளது. எனவே, 
அ) தமிழர்கள் மீது கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் மேற்கொள்ளப்படுவது இனப்படுகொலையே என்பதை வெளிப்படுத்தும். 

ஆ) இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கோரும். 

இ) இனப்படுகொலையிலிருந்து தமிழர்களை பாதுகாக்க சர்வதேச தலையீட்டை கோரும் தீர்மானமொன்றை வட மாகாணசபை நிறைவேற்றுவதற்கு தார்மீக ரீதியிலோ, சட்ட ரீதியிலோ எவ்வித தடைகளும் இல்லை என நாம் கருதுகிறோம்.